Monday, 4 April 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 29



= வை.ரவீந்திரன்.

தமிழகத்தில் 1988ல் ஜனாதிபதி ஆட்சி தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான பணிகளை கட்சி மேலிடம் தொடங்கியது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது போலவும் நியாயமான நிர்வாகம் நடப்பதாகவும் தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆட்டோ சங்கர் வழக்கு பிரபலமானது இந்த சமயத்தில் தான். இது தவிர, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஜி.கே.மூப்பனார் நியமிக்கப்பட்டார்.



மறுபுறம், அதிமுகவுக்குள் பங்காளி சண்டை கொடிகட்டி பறந்தது. அதிமுக (ஜா), அதிமுக (ஜெ) என கட்சி இரண்டாக பிளவு பட்டது. இரு தரப்பில் இருந்தும் பறந்த விமர்சனக் கணைகள் அனைத்துமே காது கூசச் செய்பவை. இரண்டு அணிகளுக்குமே அதிமுக பொதுக்குழுவில் சம பலத்தில் ஆதரவு இருந்தது. அதனால், இரண்டு அணிகளுமே கட்சிக்கு உரிமை கொண்டாடின. இறுதியில் எந்த அணிக்கும் இல்லாமல் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

அதிமுக நிலைமை இப்படி இருக்க... 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்ததாலும், 1984 தேர்தலில் சட்டப்பேரவை கட்சி அங்கீகாரம் பெறுவதே சிக்கலாகி போனதாலும், 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத திமுகவால் இனிமேல் தலையெடுக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருதினர். அடுத்த ஆட்சி நம்முடையதே என்ற உற்சாகத்துடன் வலம் வரத் தொடங்கினர்.

முன்னதாக, அதிமுக ஜெயலலிதா அணியுடன் கூட்டணி அமைத்தால் என்ன என்ற யோசனையும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மத்தியில் எழுந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த சிவாஜி கணேசன், அந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறினார். 1988 பிப்ரவரியில் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.



இதற்கிடையே, மத்தியில் ராஜீவ் அரசுக்கு எதிராக போபார்ஸ் பீரங்கி பேர ஊழல் விஸ்வரூபமெடுத்தது. அவர் மீது குற்றச்சாட்டு கூறிய அமைச்சர் வி.பி.சிங் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். எனவே, ‘ஜன மோர்ச்சா’ என்ற கட்சியை தொடங்கிய வி.பி.சிங், பின்னாளில் ஜனதா தளத்துடன் இணைந்து லோக்தளம், அசாம் கணபரிஷத், தெலுங்கு தேசம் என பல்வேறு மாநில கட்சிகளை இணைத்துக் கொண்டு அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிராக ‘தேசிய முன்னணி’ என்று கூட்டணியை உருவாக்கினார். அந்த கூட்டணியில் தமிழகத்தில் இருந்து திமுக இணைந்தது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில் 1989ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியது.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 28




= வை.ரவீந்திரன்.

ஜானகி அம்மாள் தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் எஸ்.எல்.குரானா உத்தரவிட்டதை தொடர்ந்து, 1988ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது. வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக, காங்கிரஸ் ஆதரவை ஜானகி அரசு நாடியபோது, ‘பிளவுபட்ட அதிமுகவில் எந்த அணியையும் காங்கிரஸ் ஆதரிக்காது’ என ராஜீவ் கைவிரித்து விட்டார்.

கடைசிகட்ட முயற்சியாக திமுக ஆதரவை ஆர்.எம்.வீரப்பன் நாடிச் சென்றார். அவரது யோசனையை திமுக நிராகரித்து விட்டது. மேலும், திமுக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதற்கிடையே, சட்டப்பேரவையில் ஜெயலலிதா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 33 பேரை பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார். ஏற்கனவே, திமுகவில் 10 பேர் நீக்கப்பட்டு இருந்ததால், தமிழகு சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 191 ஆக குறைந்தது. 

காங்கிரஸ், திமுக புறக்கணித்தது போக மீதமுள்ள 111 எம்எல்ஏக்களில் 99 பேரின் ஆதரவோடு ஜானகி அம்மாள் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார். ஜெ. ஆதரவு எம்எல்ஏக்கள் நீக்கம் தொடர்பான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. மைக்குகளை பிடுங்கிக் கொண்டு அதிமுகவின் இரு பிரிவு எம்எல்ஏக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சட்டப்பேரவைக்குள் போலீஸாரை வரவழைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய சூழல் உருவானது. போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் தலைமையில் போலீஸார் நுழைந்து எம்எல்ஏக்களை வெளியேற்றினர்.



தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வரலாறு காணாத கலவரத்தால் ஜானகி அம்மாள் தலைமையிலான அரசை 1988ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி ராஜீவ்காந்தி தலைமையிலான மத்திய அரசு கலைத்தது. வெறும் 24 நாட்கள் மட்டுமே தமிழக முதல்வராக ஜானகி அம்மாள் இருந்தார். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. பின்னர், புதிய ஆளுநராக 1988 பிப்ரவரியில் பி.சி.அலெக்சாண்டர் பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்க நல்ல சந்தர்ப்பம் என கருதி காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வேலைகள் தொடங்கின. ஜனாதிபதி ஆட்சி அமலான ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்தாமல் மேலும் ஆறு மாத காலத்துக்கு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ராஜீவ் அரசு நீட்டித்தது.  

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 27




= வை.ரவீந்திரன்

1969ம் ஆண்டில் புற்றுநோய் சிகிச்சைக்காக முதல்வர் அண்ணா சென்ற சமயத்திலேயே தமிழகத்தின் இடைக்கால முதல்வராக பதவி வகித்த பெருமை உடையவர், நாவலர் நெடுஞ்செழியன். எம்ஜிஆர் சிகிச்சை பெற சென்றபோதும் அவரே இடைக்கால முதல்வராக இருந்தார். எம்ஜிஆர் மறைந்த போதும் நாவலரே இடைக்கால முதல்வர். ஆனால், முதல்வர் பதவிக்கு திடீரென ஜானகி அம்மாளை நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்தார்.  ஜெயலலிதா தலைமையில் மற்றொரு பிரிவு உருவானது. 



மொத்தமுள்ள 132 அதிமுக எம்எல்ஏக்களில் இடைக்கால முதல்வராக இருந்த நெடுஞ்செழியன், அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, சாத்தூர் (கேகேஎஸ்எஸ்ஆர்) ராமச்சந்திரன் உட்பட 35 பேர் ஜெயலலிதா தலைமையில் அணி திரண்டனர். இந்த நால்வரும் தான் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள்.  அப்போது, ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்த நிகழ்வும் அரங்கேறியது.



அதேநேரம், சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், கா.காளிமுத்து உட்பட 97 எம்எல்ஏக்கள் ஜானகி அம்மாள் ஆதரவாளராக இருந்தனர். ஜானகி அம்மாள் தலைமையிலான அதிமுக ஆட்சி தொடர வேண்டுமானால் 118 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், தனக்கு ‘வானளாவிய அதிகாரம்’ இருப்பதாக கூறிய சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அரசியல் சட்ட நகலை எரித்ததாக திமுக எம்எல்ஏக்கள் 10 பேரை, ஏற்கனவே 1986 டிசம்பரில் சஸ்பெண்ட் செய்திருந்தார். மேலும், திமுகவின் சட்டப்பேரவை கட்சி அங்கீகாரத்தையும் ரத்து செய்திருந்தார். அதனால், 113 பேரின் ஆதரவு இருந்தால் போதும்.

இதுபோன்ற, சிக்கலான சூழ்நிலையில், 1988ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி  தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஜானகி அரசு கொண்டு வந்தது. அந்த நாள்... பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையின் கருப்பு தினமாக அமைந்தது. தமிழக மக்களும் தமிழக சட்டப்பேரவையும் அதுவரை காணாத அவலங்கள் அன்று அரங்கேறின.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 26



= வை.ரவீந்திரன்
======

தமிழகத்தில் ஹாட்ரிக் வெற்றியுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக  முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜிஆரின் உடல்நிலை, 1985க்கு பிறகு சீராக இல்லை. பக்கவாதம் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமாகி இருந்தாலும் தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா சென்று வந்தார். அவரது குரலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. 1984ம் ஆண்டில் உடல்நலக் குறைவுக்கு முன்பாக, மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் (சதய) விழாவில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியதுதான் எம்ஜிஆர் கடைசியாக ஆற்றிய நெடிய உரை என கூறலாம்.



இந்த நிலையில், கட்சியிலும் ஆட்சியிலும் இரண்டாம் நிலை தலைவர்கள் ஆதிக்கம் மேலோங்கியதால் ஊழல் புகார்கள் அதிகமாக எழுந்தன. மூத்த தலைவர்களுக்குள் புகைந்த உட்கட்சி பூசலின் விளைவாக, சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் தோல்வி, 1986 உள்ளாட்சி தேர்தலில் தோல்வி (97 நகராட்சிகளில் 64ஐ திமுக கைப்பற்றியது), சட்ட மேலவையில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளில் தோல்வி என தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் தான், தமிழகத்தில் சட்ட மேலவை கலைக்கப்பட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது.



இப்படியாக சென்று கொண்டிருந்த அரசியல் சூழலில் ஒரு சோகம் நிகழ்ந்தது. மூன்றாவது முறையாக முதல்வரான எம்ஜிஆர், சரியாக அடுத்த மூன்றே ஆண்டுகளில் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவை தொடர்ந்து, அதிமுக மூத்த தலைவர்களுக்குள் வெளிப்படையாகவே கோஷ்டி கானம் ஒலிக்க தொடங்கியது.

கட்சிக்குள் ஜெயலலிதா வளர்ச்சியை பொறுக்க முடியாத நிலைமையில் சிலர் இருந்தனர். எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தின்போது, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வண்டியில் இருந்து ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார். அதில் இருந்தே, தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. கீழே தள்ளப்பட்ட ஜெயலலிதா, அரசியலில் எழுச்சி காணத் தொடங்கினார்.  



எம்ஜிஆர் உடல் அடக்கம் செய்யப்பட்ட சில நாளிலேயே அதிமுகவில்  பிளவு ஏற்பட்டது. அதுவரை அரசியல் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளை அரசியலுக்கு அழைத்து வந்து 1988 ஜனவரி 7 அன்று அவரை முதல்வராக்கினார் ஆர்.எம்.வீரப்பன். தமிழகத்தின் முதல் பெண் முதல்வரானார் ஜானகி. அவரை கட்சியில் சிலர் ஏற்கவில்லை. இடைக்கால முதல்வராக இருந்த நெடுஞ்செழியனும் ஏமாற்றமடைந்தார்.

(நினைவுகள் சுழலும்)

Friday, 1 April 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 25



= வை.ரவீந்திரன். 

தமிழகத்தில் 1984ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் களம் முற்றிலும் வித்தியாசமானது. ஆளும் அதிமுக கூட்டணியில் அதிமுக தலைவர் எம்ஜிஆர், தமிழகத்தில் இல்லை. அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மற்றொரு கட்சியான காங்கிரசில் பிரபலமான தலைவரான இந்திரா மறைந்ததோடு, மக்களுக்கு பரிச்சயமே இல்லாத அவரது மகன் ராஜீவ் காந்தி தலைமை வகித்தார். எதிர்க்கட்சியான திமுக தலைவர் கருணாநிதி, தேர்தலில் போட்டியிடவே இல்லை.  



இதுபோன்ற சூழ்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற எம்ஜிஆர் உடல்நிலை குறித்து பலவாறாக பேசப்பட்டது. தேர்தல் களத்திலும் அதுவே எதிர்க்கட்சிகளின் பிரதான பிரச்சாரமாக அமைந்தது. அதையும் தாண்டி, அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் எம்ஜிஆர். அப்படியே, அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெறுவதை வீடியோ படமாக்கி, கிராமங்கள்தோறும் அதிமுகவினர் திரையிட்டனர். 



அதிமுக மூத்த தலைவர்களின் இடையூறுகளை கடந்து, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. அதிமுக பார்டருடன் கூடிய வெள்ளை புடவையை தனக்கான அடையாளமாக்கிக் கொண்டார். இந்திரா மறைவு, எம்ஜிஆரின் உடல்நலக் குறைவு என 1984 தேர்தலில் அனுதாப அலை மிகப்பெரியதாகவே வீசியது. முடிவில், 234 தொகுதிகளில் 195 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது.



அதிமுக மட்டும் தனியாக 132 இடங்களை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. திமுக கூட்டணிக்கு 34 இடங்கள் கிடைத்தன. அதில், 24 இடங்களை திமுக பெற்றது. ஆயிரம் விளக்கு தொகுதியில் கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் 2300 வாக்கு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் 61 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு 1967க்கு பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. 



1967 தேர்தலின்போது குண்டடிபட்டு படுத்துக்கொண்டே எம்எல்ஏவாக ஜெயித்த எம்ஜிஆர், இந்த தேர்தலில் அமெரிக்காவில் இருந்தபடியே தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். ஆண்டிபட்டி தொகுதியில் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அமெரிக்க சிகிச்சை முடிந்து 1985ம் ஆண்டு பிப்.4ம் தேதி சென்னை திரும்பிய எம்ஜிஆர், பிப்.10ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் தொடர்ந்து மூன்று தேர்தல்களை சந்தித்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல்வர் எம்ஜிஆர் ஒருவரே.



தமிழக சட்டப்பேரவை தேர்தலோடு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. வடசென்னை, மத்திய சென்னை இரண்டு தொகுதிகளில் மட்டும் திமுக வென்றது.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 24



= வை.ரவீந்திரன்.
இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு பிரதமரான ராஜீவ்காந்தி, முன் கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்த விரும்பினார். எனவே, தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் (1985 ஜூன் வரை பதவிக்காலம் இருந்த போதிலும்) சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

1984ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெற்ற தேர்தலில், ஏற்கனவே உறுதி செய்தபடி 155 தொகுதிகளில் அதிமுகவும், 73 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டன. 1980 தேர்தலில் எம்ஜிஆருடன் இருந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் இந்த தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக அணிக்கு சென்றன. அதில், ஜனதா கட்சியும் சேர்ந்து கொண்டது. திமுக அணியில் 167 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. இரண்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனதாவுக்கு தலா 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
தமிழக அரசியல் களத்தில் 1984 தேர்தலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அந்த தேர்தல் களத்தில்தான் முதன் முறையாக ஜெயலலிதா, ஸ்டாலின் இருவரும் களமிறங்கினர். திரையுலகில் ஒதுங்கி இருந்த ஜெயலலிதா, 1981ம் ஆண்டு நவம்பரில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் நடந்த ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாட்டிய நாடகம் மூலம் அரசியல் அரங்குக்குள் அடியெடுத்து வைத்தார். 



அடுத்த ஆண்டே அதிமுக உறுப்பினரான அவருக்கு, 1983ம் ஆண்டில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரப்பட்டது. அப்போது, தமிழகத்தில் எம்ஜிஆர் அறிமுகம் செய்த சத்துணவு திட்டத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். மொழி ஆளுமை காரணமாக, 1984ல் அதிமுக சார்பாக மாநிலங்களவை எம்பி பதவியும் கிடைத்தது. பின்னர், கட்சியின் கொபசெ என்ற அடிப்படையில் 1984 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பிரச்சார பீரங்கியாக ஜெயலலிதா களம் இறங்கினார்.



அதுபோல, திமுக தலைவரின் மகன் என்பதாலேயே எமர்ஜென்சி கால சிறைக் கொடுமையை அனுபவித்ததோடு மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. திமுக பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவியில் தொடங்கி கட்சிக்குள் மெதுவாக வளர்ந்து இளைஞர் அணியையும் வளர்த்து வந்த மு.க.ஸ்டாலின், 1984 சட்டப்பேரவை தேர்தலில் தான் முதன் முறையாக போட்டியிட்டார். . 


சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியை எதிர்த்து அவர் களமிறங்கினார். அந்த தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது, அவர் சட்டமேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருந்தார்.

(நினைவுகள் சுழலும்)

Wednesday, 30 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 23


= வை.ரவீந்திரன்
 
தமிழகத்தில் 1980 சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆர் பெற்ற வெற்றிக்கு பிறகு, அவரது செல்வாக்கைக் கண்டு இந்திரா காந்தி மனம் மாறத் தொடங்கியது. மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் மாநில வளர்ச்சி என்பது கானல் நீராகும் என்பதை எம்ஜிஆரும் அறிந்திருந்தார். அதனால், சில மாதங்களிலேயே அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் நெருக்கமாகின. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை என்பதால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் (3-ல் 2 பங்கு), சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கி கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இது எம்ஜிஆர் பார்முலா.



தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்க தொடங்கிய கால கட்டமும் அதுதான். இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஆட்சி செய்த தருணம் அது. இனக்கலவரம் உச்சத்தில் இருந்தது. எல்டிடிஈ. ஈபிஆர்எல்எப், டெலோ என பல்வேறு போராளி குழுக்களும் தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி போராடினர். இந்த சூழ்நிலையில், 1983ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மறக்க முடியா நிகழ்வு அரங்கேறியது.

இலங்கை அரசுக்கு எதிராக போராடிய தமிழ் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருந்த வெலிக்கடை சிறையில் மாபெரும் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஜூலை 25 மற்றும் 27 என இரண்டு நாட்களில் நடந்த அந்த கொடூர தாக்குதலில் முதல் நாளில் 35 பேர், இரண்டாவது நாளில் 18 பேர் என மொத்தம் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.



அது, தமிழக அரசியல் களத்திலும் பேரதிர்வை ஏற்படுத்தியது. இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் மிகப்பெரிய பேரணியை திமுக நடத்தியது. தனது எம்எல்ஏ பதவியை ஆகஸ்ட் 10ம் தேதி கருணாநிதி ராஜினாமா செய்தார். மறுபுறம், இலங்கை பிரச்சினையில் தலையிடுமாறு பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் எம்ஜிஆர் வலியுறுத்தி வந்தார். தமிழகத்துக்கு பிரபாகரன் வந்து எம்ஜிஆரை சந்தித்தது, இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத பயிற்சி அளித்தது என்பதெல்லாம் இந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் தான். இப்படியாக, தமிழக அரசியல் களத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை தமிழர் விவகாரம் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது. 



இதற்கிடையே, 1984ம் ஆண்டு அக்டோபரில் எம்ஜிஆருக்கு சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு என உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக, அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் டவுண் ஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது, தமிழகத்தின் இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பொறுப்பு வகித்தார். 



மத்தியிலும் இதேபோன்ற இக்கட்டான நிலைமை உருவானது. காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாட பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதால், 1984 அக்டோபர் 31 அன்று சீக்கியர்களான தனது மெய்க்காப்பாளர்கள் இருவராலேயே பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை உருவாகி, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ்காந்தி, உடனடியாக பிரதமராக்கப்பட்டார். இதுபோன்ற சிக்கல்களுக்கு இடையே, 1984 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியது.

(நினைவுகள் சுழலும்...)

Monday, 28 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 22


= வை.ரவீந்திரன்

தமிழகத்தில் 1980ம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்ட மூன்றே மாதங்களில் மே 28, 31 என இரண்டு கட்டங்களாக 7-வது சட்டப் பேரவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்வரான மூன்றே ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டதோடு மத்தியில் திமுக செல்வாக்கு ஓங்கி இருந்ததால் எம்ஜிஆருக்கும், தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக அதிமுக வளர்ந்ததோடு, ஜனதா தலைவர்களின் உதவியுடன் அதிமுகவை இணைக்க எடுத்த முயற்சியும் தோல்வியை தழுவியதால் கருணாநிதிக்கும், அந்த தேர்தல் ‘வாழ்வா, சாவா’ போராட்டமாகவே அமைந்தது.


 அதனாலேயே, 14 கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியை அமைக்க எம்ஜிஆர் முயன்றார். மத்தியில் ஆட்சியை இழந்த நிலையில் இருந்த ஜனதா கட்சி 60 தொகுதிகளை கேட்டது. அதை எம்ஜிஆர் ஏற்காததால் தனியாகவே ஜனதா களமிறங்கியது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், குமரி அனந்தன் தலைமையிலான காகாதேகா (காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்), பார்வர்டு பிளாக், பழ.நெடுமாறன் தலைமையிலான கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை அதிமுக அணியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்தார், எம்ஜிஆர். கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக, 177 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது.  

மறுபுறம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதுவரை இல்லாத முறையில் தொகுதி ஒதுக்கீடு அமைந்தது. ‘இந்தியா என்றால் இந்திரா’ என்ற கோஷம் வலுப்பெற்றிருந்த காலம் என்பதாலும் வீராணம் ஊழல் மற்றும் சர்க்காரியா கமிஷன் போன்ற சிக்கல்களில் கருணாநிதி இருந்ததாலும் சமயம் பார்த்து திமுகவை நிர்பந்தம் செய்தது காங்கிரஸ். கூட்டணியில் சரி பாதி தொகுதி வழங்குமாறு வலியுறுத்தியது. அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜி.கே.மூப்பனார்.



இறுதியாக திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 114 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவானது. 6 இடங்களை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கினர். இரண்டு கட்சிகளுமே சரி பாதி இடங்களில் நிற்பதால், ‘அந்த கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர்?’ என்ற கேள்வி எழுந்தது. தேர்தல் பிரசாரத்திலும் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘கூட்டணி வெற்றி பெற்றால் கருணாநிதியே முதல்வர் ஆவார்’ என இந்திரா காந்தி முற்றுப்புள்ளி வைத்தார். இந்த தேர்தலில், பாஜக களமிறங்கியது என்பதும் 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியதும் கூடுதல் தகவல். 

https://www.youtube.com/watch?v=uRqJ5ZDdKxs

தேர்தல் களத்தில் எம்ஜிஆரின் பிரதான பிரச்சாரம், ‘நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் பதவியில் இருந்து இறக்கினார்கள்? நீங்கள் தேர்ந்தெடுத்த இந்த ஆட்சிக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் பதவி உள்ள நிலையில் இப்போது என்னை இறக்கியது ஏன்?’ என்பதே. முடிவில் அதிமுக கூட்டணி 162 இடங்களை கைப்பற்றியது. அதிமுக மட்டும் 129 தொகுதிகளில் வென்றது. 1980ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாவது முறையாக தமிழக முதல்வரானார் எம்ஜிஆர்.



திமுக 37 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. சென்னை அண்ணாநகரில் நூலிழை வித்தியாசத்தில் (699 வாக்குகள்) அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேயை வென்றார் கருணாநிதி. மதுரை மேற்கு தொகுதியில் 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் எம்ஜிஆர் வென்றார். பாராளுமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்ற அதிமுக, அடுத்த ஐந்தே மாதங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 162 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

(நினைவுகள் சுழலும்...)  

Saturday, 26 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 21



= வை.ரவீந்திரன். 

தேர்தல் நேர கூட்டணிகளில் கொள்கை என்பது இரண்டாம்பட்சமே என்ற பார்முலா அறிமுகமான காலகட்டம் அது. 1977 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு, மத்தியில் ஜனதா அரசு அமைந்ததும் அதற்கு அதிமுக ஆதரவு அளித்தது. பின்னர், பிரதமர் சரண்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் பதவிகளையும் அதிமுக பெற்றது.

இது ஒருபுறம் இருக்க, எமர்ஜென்சியை தீவிரமாக எதிர்த்து, மிசா கால சிறைக் கொடுமைகளை அனுபவித்து, 1976ல் ஆட்சியை பறிகொடுத்து, மதுரையில் இந்திரா காந்தியை தாக்கிய திமுகவின் நிலைப்பாட்டில் இரண்டே ஆண்டில் மிகப்பெரிய மாற்றம். எந்த இந்திரா காந்தியை கடுமையாக எதிர்த்தாரோ அவருடனேயே கூட்டணி அமைத்தார் கருணாநிதி.


மத்தியில் ஆண்ட ஜனதா கட்சி பிளவுபட்டு மத்திய அரசு கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி அமைத்து 37 எம்பி தொகுதிகளை கைப்பற்றின. அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆரின் அதிமுக அணிக்கு (அதிமுக, இரண்டு கம்யூனிஸ்டுகள், ஜனதா) 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சிவகாசி, கோபிசெட்டிப் பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்று மிருகபலத்துடன் மீண்டும் பிரதமரானார் இந்திரா. பாராளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் கிடைத்த அபரிமிதமான வெற்றியால், எம்ஜிஆர் ஆட்சியை உடனடியாக கலைக்குமாறு இந்திராவுக்கு திமுக நெருக்கடி கொடுத்தது. ஏற்கனவே, ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநில அரசுகளை கலைக்கும் முடிவில் இருந்த இந்திரா காந்தி, திமுக விடுத்த இந்த கோரிக்கையையும் ஏற்றார்.  

1980ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி, தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதிமுக அரசு மட்டுமல்லாமல், ஒரே நாளில் 9 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளை கலைத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.



அப்போதெல்லாம், நினைத்த மாத்திரத்தில் மாநில அரசுகளை அரசியல் அமைப்பு சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு எளிதாக கலைத்து விடுவது வழக்கம். 1988ம் ஆண்டு கர்நாடக முதல்வர் எஸ்.ஆர். பொம்மை ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த 9 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், 1994ம் ஆண்டு  மிகக் கடுமையான தீர்ப்பை வழங்கியது. 


அதில், உள்நோக்கத்துடன் மாநில அரசை கலைத்தால் அதை மீண்டும் பதவியில் அமர்த்த சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு என்றது. அதன்பிறகு தான், ஆட்சி கலைப்பு சம்பவங்கள் கட்டுக்குள் வந்தன. அந்த தீர்ப்பு வரும் வரையிலும் (1994 வரை) ஆட்சி கலைப்பு வைபவங்கள் இந்தியாவில் ஏகபோகமாக அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது.  

நினைவுகள் சுழலும்)

Thursday, 24 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 20



= வை.ரவீந்திரன். 


நாடு முழுவதும் எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா காந்திக்கு அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மட்டுமன்றி காமராஜரின் மறைவுக்கு பிறகு ஸ்தாபன காங்கிரசும் கூட ஆதரவளித்தது. காமராஜர் மறைவுக்கு பிறகு அந்த கட்சியை வழி நடத்திய ஜி.கே.மூப்பனார், 1976ம் ஆண்டில் இந்திரா காங்கிரசுடன் கட்சியை இணைத்து விட்டார். கைமாறாக இந்திரா காங்கிரசின் தமிழக தலைவராக அவரை இந்திரா நியமித்தார். அந்த இணைப்பு பிடிக்காத சில தலைவர்கள், ஜனதா கட்சியில் இணைந்தனர். 



எமர்ஜென்சி விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 1977ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில் திமுக தனித்து போட்டி, அதிமுக தலைமையில் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஒரு அணி, இந்திரா காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றொரு அணி என மூன்று அணிகளோடு  எமர்ஜென்சியை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய ஜனதா கட்சி தனி அணி என மொத்தம் 4 முனை போட்டி நிலவியது.

 
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் சட்டப்பேரவை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் (1977 மார்ச்) நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி 34 எம்பி தொகுதிகளை வென்றிருந்தன. அதிமுக மட்டும் 17 எம்பிக்களை கைப்பற்றி இருந்தது. அதுபோல திமுக, ஜனதா, லோக்தளம் அணி 5 இடங்களில் வென்றது. ஆனால், மூன்றே மாதங்களில் இந்த கூட்டணிகளில் பெரிய மாற்றம்.

பெரிய அளவில் வெற்றியை பெற்றதாலும் மத்தியில் இந்திரா பதவியை இழந்து இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றதாலும் காங்கிரஸை எம்ஜிஆர் ஒதுக்கி விட்டு தனித்து களமிறங்கினார். இந்த தேர்தலையொட்டிய தருணத்தில் தான் மதுரைக்கு வந்திருந்த இந்திரா காந்திக்கு எதிராக திமுக நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தின்போது இந்திரா மீது தாக்குதல் நடந்தது. 



மற்றொரு புறம், தோல்வி காரணமாக திமுக அணியில் இருந்து ஜனதா கட்சி விலகி தனியாக போட்டியிட்டது. இப்படியான அணி மாற்றங்களுடன் 1977 ஜூன் 10ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதிமுகவுக்கு அதுவே முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தல். நான்கு முனை போட்டியில் 142 இடங்களை அதிமுக கூட்டணி (அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்) கைப்பற்றியது. அதிமுக மட்டும் தனியாக 130 இடங்களில் வென்று தமிழக முதல்வராக 1977 ஜூன் 30ல் எம்ஜிஆர் பொறுப்பேற்றார்.



முந்தைய தேர்தலில் முறியடிக்க முடியா சாதனையாக 184 இடங்களை பெற்ற திமுகவுக்கு 48 இடங்கள் மட்டுமே இந்த தேர்தலில் கிடைத்தன. சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி வென்று தமிழக எதிர்க்கட்சி தலைவரானார். இந்திரா காங்கிரஸ் 27, ஜனதா 10 இடங்களில் வென்றன. மாபெரும் வெற்றி பெற்று தமிழக அரியணையில் அமர்ந்த எம்ஜிஆரின் ஆட்சி, அடுத்த 3 ஆண்டுகளிலேயே கலைக்கப்பட்டது.
  
(நினைவுகள் சுழலும்)