Monday 28 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 22


= வை.ரவீந்திரன்

தமிழகத்தில் 1980ம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்ட மூன்றே மாதங்களில் மே 28, 31 என இரண்டு கட்டங்களாக 7-வது சட்டப் பேரவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்வரான மூன்றே ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டதோடு மத்தியில் திமுக செல்வாக்கு ஓங்கி இருந்ததால் எம்ஜிஆருக்கும், தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக அதிமுக வளர்ந்ததோடு, ஜனதா தலைவர்களின் உதவியுடன் அதிமுகவை இணைக்க எடுத்த முயற்சியும் தோல்வியை தழுவியதால் கருணாநிதிக்கும், அந்த தேர்தல் ‘வாழ்வா, சாவா’ போராட்டமாகவே அமைந்தது.


 அதனாலேயே, 14 கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியை அமைக்க எம்ஜிஆர் முயன்றார். மத்தியில் ஆட்சியை இழந்த நிலையில் இருந்த ஜனதா கட்சி 60 தொகுதிகளை கேட்டது. அதை எம்ஜிஆர் ஏற்காததால் தனியாகவே ஜனதா களமிறங்கியது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், குமரி அனந்தன் தலைமையிலான காகாதேகா (காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்), பார்வர்டு பிளாக், பழ.நெடுமாறன் தலைமையிலான கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை அதிமுக அணியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்தார், எம்ஜிஆர். கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக, 177 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது.  

மறுபுறம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதுவரை இல்லாத முறையில் தொகுதி ஒதுக்கீடு அமைந்தது. ‘இந்தியா என்றால் இந்திரா’ என்ற கோஷம் வலுப்பெற்றிருந்த காலம் என்பதாலும் வீராணம் ஊழல் மற்றும் சர்க்காரியா கமிஷன் போன்ற சிக்கல்களில் கருணாநிதி இருந்ததாலும் சமயம் பார்த்து திமுகவை நிர்பந்தம் செய்தது காங்கிரஸ். கூட்டணியில் சரி பாதி தொகுதி வழங்குமாறு வலியுறுத்தியது. அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜி.கே.மூப்பனார்.



இறுதியாக திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 114 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவானது. 6 இடங்களை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கினர். இரண்டு கட்சிகளுமே சரி பாதி இடங்களில் நிற்பதால், ‘அந்த கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர்?’ என்ற கேள்வி எழுந்தது. தேர்தல் பிரசாரத்திலும் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘கூட்டணி வெற்றி பெற்றால் கருணாநிதியே முதல்வர் ஆவார்’ என இந்திரா காந்தி முற்றுப்புள்ளி வைத்தார். இந்த தேர்தலில், பாஜக களமிறங்கியது என்பதும் 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியதும் கூடுதல் தகவல். 

https://www.youtube.com/watch?v=uRqJ5ZDdKxs

தேர்தல் களத்தில் எம்ஜிஆரின் பிரதான பிரச்சாரம், ‘நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் பதவியில் இருந்து இறக்கினார்கள்? நீங்கள் தேர்ந்தெடுத்த இந்த ஆட்சிக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் பதவி உள்ள நிலையில் இப்போது என்னை இறக்கியது ஏன்?’ என்பதே. முடிவில் அதிமுக கூட்டணி 162 இடங்களை கைப்பற்றியது. அதிமுக மட்டும் 129 தொகுதிகளில் வென்றது. 1980ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாவது முறையாக தமிழக முதல்வரானார் எம்ஜிஆர்.



திமுக 37 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. சென்னை அண்ணாநகரில் நூலிழை வித்தியாசத்தில் (699 வாக்குகள்) அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேயை வென்றார் கருணாநிதி. மதுரை மேற்கு தொகுதியில் 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் எம்ஜிஆர் வென்றார். பாராளுமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்ற அதிமுக, அடுத்த ஐந்தே மாதங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 162 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

(நினைவுகள் சுழலும்...)  

No comments: