= வை.ரவீந்திரன்.
இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு பிரதமரான ராஜீவ்காந்தி,
முன் கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்த விரும்பினார். எனவே, தமிழக சட்டப்பேரவை
தேர்தலையும் (1985 ஜூன் வரை பதவிக்காலம் இருந்த போதிலும்) சேர்த்து நடத்த முடிவு
செய்யப்பட்டது. அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த
நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
1984ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெற்ற தேர்தலில்,
ஏற்கனவே உறுதி செய்தபடி 155 தொகுதிகளில் அதிமுகவும், 73 தொகுதிகளில் காங்கிரசும்
போட்டியிட்டன. 1980 தேர்தலில் எம்ஜிஆருடன் இருந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் இந்த
தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக அணிக்கு சென்றன. அதில், ஜனதா கட்சியும்
சேர்ந்து கொண்டது. திமுக அணியில் 167 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. இரண்டு
கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனதாவுக்கு தலா 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
தமிழக அரசியல் களத்தில் 1984 தேர்தலுக்கு ஒரு
முக்கியத்துவம் உண்டு. அந்த தேர்தல் களத்தில்தான் முதன் முறையாக ஜெயலலிதா,
ஸ்டாலின் இருவரும் களமிறங்கினர். திரையுலகில் ஒதுங்கி இருந்த ஜெயலலிதா, 1981ம்
ஆண்டு நவம்பரில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் நடந்த ‘காவிரி தந்த
கலைச்செல்வி’ நாட்டிய நாடகம் மூலம் அரசியல் அரங்குக்குள் அடியெடுத்து வைத்தார்.
அடுத்த ஆண்டே அதிமுக உறுப்பினரான அவருக்கு, 1983ம்
ஆண்டில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரப்பட்டது. அப்போது, தமிழகத்தில் எம்ஜிஆர் அறிமுகம் செய்த சத்துணவு திட்டத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். மொழி ஆளுமை காரணமாக, 1984ல்
அதிமுக சார்பாக மாநிலங்களவை எம்பி பதவியும் கிடைத்தது. பின்னர், கட்சியின் கொபசெ என்ற
அடிப்படையில் 1984 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பிரச்சார பீரங்கியாக ஜெயலலிதா களம்
இறங்கினார்.
அதுபோல, திமுக தலைவரின் மகன் என்பதாலேயே எமர்ஜென்சி கால
சிறைக் கொடுமையை அனுபவித்ததோடு மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. திமுக
பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவியில் தொடங்கி கட்சிக்குள் மெதுவாக வளர்ந்து இளைஞர்
அணியையும் வளர்த்து வந்த மு.க.ஸ்டாலின், 1984 சட்டப்பேரவை தேர்தலில் தான் முதன்
முறையாக போட்டியிட்டார். .
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைச்சர்
கே.ஏ.கிருஷ்ணசாமியை எதிர்த்து அவர் களமிறங்கினார். அந்த தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி
போட்டியிடவில்லை. அப்போது, அவர் சட்டமேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருந்தார்.
(நினைவுகள் சுழலும்)
No comments:
Post a Comment