= வை.ரவீந்திரன்
1969ம் ஆண்டில் புற்றுநோய் சிகிச்சைக்காக முதல்வர் அண்ணா
சென்ற சமயத்திலேயே தமிழகத்தின் இடைக்கால முதல்வராக பதவி வகித்த பெருமை உடையவர்,
நாவலர் நெடுஞ்செழியன். எம்ஜிஆர் சிகிச்சை பெற சென்றபோதும் அவரே இடைக்கால முதல்வராக
இருந்தார். எம்ஜிஆர் மறைந்த போதும் நாவலரே இடைக்கால முதல்வர். ஆனால், முதல்வர்
பதவிக்கு திடீரென ஜானகி அம்மாளை நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்தார். ஜெயலலிதா தலைமையில் மற்றொரு பிரிவு உருவானது.
மொத்தமுள்ள 132 அதிமுக எம்எல்ஏக்களில் இடைக்கால
முதல்வராக இருந்த நெடுஞ்செழியன், அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன்,
திருநாவுக்கரசு, சாத்தூர் (கேகேஎஸ்எஸ்ஆர்) ராமச்சந்திரன் உட்பட 35 பேர் ஜெயலலிதா
தலைமையில் அணி திரண்டனர். இந்த நால்வரும் தான் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு
முதலில் அடித்தளமிட்டவர்கள். அப்போது, ஜெயலலிதா
ஆதரவு எம்எல்ஏக்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்த
நிகழ்வும் அரங்கேறியது.
அதேநேரம், சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், அமைச்சர்
ஆர்.எம்.வீரப்பன், கா.காளிமுத்து உட்பட 97 எம்எல்ஏக்கள் ஜானகி அம்மாள் ஆதரவாளராக இருந்தனர்.
ஜானகி அம்மாள் தலைமையிலான அதிமுக ஆட்சி தொடர வேண்டுமானால் 118 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால்,
தனக்கு ‘வானளாவிய அதிகாரம்’ இருப்பதாக கூறிய சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அரசியல்
சட்ட நகலை எரித்ததாக திமுக எம்எல்ஏக்கள் 10 பேரை, ஏற்கனவே 1986 டிசம்பரில்
சஸ்பெண்ட் செய்திருந்தார். மேலும், திமுகவின் சட்டப்பேரவை கட்சி அங்கீகாரத்தையும் ரத்து
செய்திருந்தார். அதனால், 113 பேரின் ஆதரவு இருந்தால் போதும்.
இதுபோன்ற, சிக்கலான சூழ்நிலையில், 1988ம் ஆண்டு ஜனவரி
28ம் தேதி தமிழக சட்டப்பேரவையில்
நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஜானகி அரசு கொண்டு வந்தது. அந்த நாள்...
பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையின் கருப்பு தினமாக அமைந்தது. தமிழக மக்களும்
தமிழக சட்டப்பேரவையும் அதுவரை காணாத அவலங்கள் அன்று அரங்கேறின.
(நினைவுகள் சுழலும்)
No comments:
Post a Comment