= வை.ரவீந்திரன்.
நாடு முழுவதும் எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா
காந்திக்கு அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மட்டுமன்றி காமராஜரின் மறைவுக்கு
பிறகு ஸ்தாபன காங்கிரசும் கூட ஆதரவளித்தது. காமராஜர் மறைவுக்கு பிறகு அந்த கட்சியை
வழி நடத்திய ஜி.கே.மூப்பனார், 1976ம் ஆண்டில் இந்திரா காங்கிரசுடன் கட்சியை இணைத்து
விட்டார். கைமாறாக இந்திரா காங்கிரசின் தமிழக தலைவராக அவரை இந்திரா நியமித்தார். அந்த
இணைப்பு பிடிக்காத சில தலைவர்கள், ஜனதா கட்சியில் இணைந்தனர்.
எமர்ஜென்சி விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, முதல்
சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 1977ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில் திமுக தனித்து
போட்டி, அதிமுக தலைமையில் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு
பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஒரு அணி, இந்திரா காங்கிரஸ் மற்றும் இந்திய
கம்யூனிஸ்ட் மற்றொரு அணி என மூன்று அணிகளோடு எமர்ஜென்சியை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை
கைப்பற்றிய ஜனதா கட்சி தனி அணி என மொத்தம் 4 முனை போட்டி நிலவியது.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் சட்டப்பேரவை
தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் (1977 மார்ச்) நடந்த பாராளுமன்ற தேர்தலில்
அதிமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி 34 எம்பி
தொகுதிகளை வென்றிருந்தன. அதிமுக மட்டும் 17 எம்பிக்களை கைப்பற்றி இருந்தது. அதுபோல
திமுக, ஜனதா, லோக்தளம் அணி 5 இடங்களில் வென்றது. ஆனால், மூன்றே மாதங்களில் இந்த கூட்டணிகளில்
பெரிய மாற்றம்.
பெரிய அளவில் வெற்றியை பெற்றதாலும் மத்தியில் இந்திரா
பதவியை இழந்து இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமராக மொரார்ஜி தேசாய்
பதவியேற்றதாலும் காங்கிரஸை எம்ஜிஆர் ஒதுக்கி விட்டு தனித்து களமிறங்கினார். இந்த
தேர்தலையொட்டிய தருணத்தில் தான் மதுரைக்கு வந்திருந்த இந்திரா காந்திக்கு எதிராக
திமுக நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தின்போது இந்திரா மீது தாக்குதல்
நடந்தது.
மற்றொரு புறம், தோல்வி காரணமாக திமுக அணியில் இருந்து
ஜனதா கட்சி விலகி தனியாக போட்டியிட்டது. இப்படியான அணி மாற்றங்களுடன் 1977 ஜூன்
10ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதிமுகவுக்கு அதுவே
முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தல். நான்கு முனை போட்டியில் 142 இடங்களை அதிமுக
கூட்டணி (அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்) கைப்பற்றியது. அதிமுக மட்டும் தனியாக 130
இடங்களில் வென்று தமிழக முதல்வராக 1977 ஜூன் 30ல் எம்ஜிஆர் பொறுப்பேற்றார்.
முந்தைய தேர்தலில் முறியடிக்க முடியா சாதனையாக 184 இடங்களை
பெற்ற திமுகவுக்கு 48 இடங்கள் மட்டுமே இந்த தேர்தலில் கிடைத்தன. சென்னை அண்ணாநகர்
தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி வென்று தமிழக எதிர்க்கட்சி தலைவரானார். இந்திரா
காங்கிரஸ் 27, ஜனதா 10 இடங்களில் வென்றன. மாபெரும் வெற்றி பெற்று தமிழக அரியணையில்
அமர்ந்த எம்ஜிஆரின் ஆட்சி, அடுத்த 3 ஆண்டுகளிலேயே கலைக்கப்பட்டது.
(நினைவுகள் சுழலும்)
No comments:
Post a Comment