= வை.ரவீந்திரன்.
ஜானகி அம்மாள் தலைமையிலான அரசை பெரும்பான்மையை
நிரூபிக்குமாறு ஆளுநர் எஸ்.எல்.குரானா உத்தரவிட்டதை தொடர்ந்து, 1988ம் ஆண்டு ஜனவரி
28ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது. வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக, காங்கிரஸ்
ஆதரவை ஜானகி அரசு நாடியபோது, ‘பிளவுபட்ட அதிமுகவில் எந்த அணியையும் காங்கிரஸ்
ஆதரிக்காது’ என ராஜீவ் கைவிரித்து விட்டார்.
கடைசிகட்ட முயற்சியாக திமுக ஆதரவை ஆர்.எம்.வீரப்பன் நாடிச்
சென்றார். அவரது யோசனையை திமுக நிராகரித்து விட்டது. மேலும், திமுக, காங்கிரஸ் என இரண்டு
கட்சிகளுமே தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக
அறிவித்தன. இதற்கிடையே, சட்டப்பேரவையில் ஜெயலலிதா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 33
பேரை பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார். ஏற்கனவே,
திமுகவில் 10 பேர் நீக்கப்பட்டு இருந்ததால், தமிழகு சட்டப்பேரவையில் மொத்த
உறுப்பினர் எண்ணிக்கை 191 ஆக குறைந்தது.
காங்கிரஸ், திமுக புறக்கணித்தது போக மீதமுள்ள 111
எம்எல்ஏக்களில் 99 பேரின் ஆதரவோடு ஜானகி அம்மாள் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர்
பி.எச்.பாண்டியன் அறிவித்தார். ஜெ. ஆதரவு எம்எல்ஏக்கள் நீக்கம் தொடர்பான வாக்குவாதம்
முற்றி கைகலப்பாக மாறியது. மைக்குகளை பிடுங்கிக் கொண்டு அதிமுகவின் இரு பிரிவு எம்எல்ஏக்களும்
ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சட்டப்பேரவைக்குள் போலீஸாரை வரவழைத்து அமைதியை
நிலைநாட்ட வேண்டிய சூழல் உருவானது. போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் தலைமையில் போலீஸார்
நுழைந்து எம்எல்ஏக்களை வெளியேற்றினர்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வரலாறு காணாத கலவரத்தால்
ஜானகி அம்மாள் தலைமையிலான அரசை 1988ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி ராஜீவ்காந்தி
தலைமையிலான மத்திய அரசு கலைத்தது. வெறும் 24 நாட்கள் மட்டுமே தமிழக முதல்வராக
ஜானகி அம்மாள் இருந்தார். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. பின்னர்,
புதிய ஆளுநராக 1988 பிப்ரவரியில் பி.சி.அலெக்சாண்டர் பொறுப்பேற்றார்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை
பிடிக்க நல்ல சந்தர்ப்பம் என கருதி காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வேலைகள்
தொடங்கின. ஜனாதிபதி ஆட்சி அமலான ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்தாமல் மேலும் ஆறு
மாத காலத்துக்கு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ராஜீவ் அரசு நீட்டித்தது.
(நினைவுகள் சுழலும்)
No comments:
Post a Comment