= வை.ரவீந்திரன்.
தமிழகத்தில் 1988ல் ஜனாதிபதி ஆட்சி தொடங்கியதும்
காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான பணிகளை கட்சி மேலிடம் தொடங்கியது. தமிழகத்தில்
காங்கிரஸ் ஆட்சி நடப்பது போலவும் நியாயமான நிர்வாகம் நடப்பதாகவும் தோற்றம்
ஏற்படுத்தப்பட்டது. ஆட்டோ சங்கர் வழக்கு பிரபலமானது இந்த சமயத்தில் தான். இது
தவிர, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஜி.கே.மூப்பனார் நியமிக்கப்பட்டார்.
மறுபுறம், அதிமுகவுக்குள் பங்காளி சண்டை கொடிகட்டி
பறந்தது. அதிமுக (ஜா), அதிமுக (ஜெ) என கட்சி இரண்டாக பிளவு பட்டது. இரு தரப்பில்
இருந்தும் பறந்த விமர்சனக் கணைகள் அனைத்துமே காது கூசச் செய்பவை. இரண்டு அணிகளுக்குமே
அதிமுக பொதுக்குழுவில் சம பலத்தில் ஆதரவு இருந்தது. அதனால், இரண்டு அணிகளுமே
கட்சிக்கு உரிமை கொண்டாடின. இறுதியில் எந்த அணிக்கும் இல்லாமல் இரட்டை இலை
சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
அதிமுக நிலைமை இப்படி இருக்க... 1977ம் ஆண்டு முதல்
தொடர்ந்து மூன்று தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்ததாலும், 1984 தேர்தலில்
சட்டப்பேரவை கட்சி அங்கீகாரம் பெறுவதே சிக்கலாகி போனதாலும், 10 ஆண்டுகளுக்கு மேல்
தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத திமுகவால் இனிமேல் தலையெடுக்க முடியாது என்று
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருதினர். அடுத்த ஆட்சி நம்முடையதே என்ற உற்சாகத்துடன் வலம்
வரத் தொடங்கினர்.
முன்னதாக, அதிமுக ஜெயலலிதா அணியுடன் கூட்டணி அமைத்தால்
என்ன என்ற யோசனையும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மத்தியில் எழுந்தது. அப்போது
காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த சிவாஜி கணேசன், அந்த யோசனைக்கு எதிர்ப்பு
தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறினார். 1988 பிப்ரவரியில் தமிழக முன்னேற்ற
முன்னணி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இதற்கிடையே, மத்தியில் ராஜீவ் அரசுக்கு எதிராக போபார்ஸ்
பீரங்கி பேர ஊழல் விஸ்வரூபமெடுத்தது. அவர் மீது குற்றச்சாட்டு கூறிய அமைச்சர்
வி.பி.சிங் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். எனவே, ‘ஜன மோர்ச்சா’ என்ற கட்சியை தொடங்கிய
வி.பி.சிங், பின்னாளில் ஜனதா தளத்துடன் இணைந்து லோக்தளம், அசாம் கணபரிஷத்,
தெலுங்கு தேசம் என பல்வேறு மாநில கட்சிகளை இணைத்துக் கொண்டு அகில இந்திய அளவில்
காங்கிரசுக்கு எதிராக ‘தேசிய முன்னணி’ என்று கூட்டணியை உருவாக்கினார். அந்த
கூட்டணியில் தமிழகத்தில் இருந்து திமுக இணைந்தது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில்
1989ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியது.
(நினைவுகள் சுழலும்)
No comments:
Post a Comment