Saturday 26 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 21



= வை.ரவீந்திரன். 

தேர்தல் நேர கூட்டணிகளில் கொள்கை என்பது இரண்டாம்பட்சமே என்ற பார்முலா அறிமுகமான காலகட்டம் அது. 1977 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு, மத்தியில் ஜனதா அரசு அமைந்ததும் அதற்கு அதிமுக ஆதரவு அளித்தது. பின்னர், பிரதமர் சரண்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் பதவிகளையும் அதிமுக பெற்றது.

இது ஒருபுறம் இருக்க, எமர்ஜென்சியை தீவிரமாக எதிர்த்து, மிசா கால சிறைக் கொடுமைகளை அனுபவித்து, 1976ல் ஆட்சியை பறிகொடுத்து, மதுரையில் இந்திரா காந்தியை தாக்கிய திமுகவின் நிலைப்பாட்டில் இரண்டே ஆண்டில் மிகப்பெரிய மாற்றம். எந்த இந்திரா காந்தியை கடுமையாக எதிர்த்தாரோ அவருடனேயே கூட்டணி அமைத்தார் கருணாநிதி.


மத்தியில் ஆண்ட ஜனதா கட்சி பிளவுபட்டு மத்திய அரசு கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி அமைத்து 37 எம்பி தொகுதிகளை கைப்பற்றின. அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆரின் அதிமுக அணிக்கு (அதிமுக, இரண்டு கம்யூனிஸ்டுகள், ஜனதா) 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சிவகாசி, கோபிசெட்டிப் பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்று மிருகபலத்துடன் மீண்டும் பிரதமரானார் இந்திரா. பாராளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் கிடைத்த அபரிமிதமான வெற்றியால், எம்ஜிஆர் ஆட்சியை உடனடியாக கலைக்குமாறு இந்திராவுக்கு திமுக நெருக்கடி கொடுத்தது. ஏற்கனவே, ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநில அரசுகளை கலைக்கும் முடிவில் இருந்த இந்திரா காந்தி, திமுக விடுத்த இந்த கோரிக்கையையும் ஏற்றார்.  

1980ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி, தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதிமுக அரசு மட்டுமல்லாமல், ஒரே நாளில் 9 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளை கலைத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.



அப்போதெல்லாம், நினைத்த மாத்திரத்தில் மாநில அரசுகளை அரசியல் அமைப்பு சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு எளிதாக கலைத்து விடுவது வழக்கம். 1988ம் ஆண்டு கர்நாடக முதல்வர் எஸ்.ஆர். பொம்மை ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த 9 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், 1994ம் ஆண்டு  மிகக் கடுமையான தீர்ப்பை வழங்கியது. 


அதில், உள்நோக்கத்துடன் மாநில அரசை கலைத்தால் அதை மீண்டும் பதவியில் அமர்த்த சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு என்றது. அதன்பிறகு தான், ஆட்சி கலைப்பு சம்பவங்கள் கட்டுக்குள் வந்தன. அந்த தீர்ப்பு வரும் வரையிலும் (1994 வரை) ஆட்சி கலைப்பு வைபவங்கள் இந்தியாவில் ஏகபோகமாக அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது.  

நினைவுகள் சுழலும்)

No comments: