Wednesday, March 30, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 23


= வை.ரவீந்திரன்
 
தமிழகத்தில் 1980 சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆர் பெற்ற வெற்றிக்கு பிறகு, அவரது செல்வாக்கைக் கண்டு இந்திரா காந்தி மனம் மாறத் தொடங்கியது. மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் மாநில வளர்ச்சி என்பது கானல் நீராகும் என்பதை எம்ஜிஆரும் அறிந்திருந்தார். அதனால், சில மாதங்களிலேயே அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் நெருக்கமாகின. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை என்பதால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் (3-ல் 2 பங்கு), சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கி கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இது எம்ஜிஆர் பார்முலா.தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்க தொடங்கிய கால கட்டமும் அதுதான். இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஆட்சி செய்த தருணம் அது. இனக்கலவரம் உச்சத்தில் இருந்தது. எல்டிடிஈ. ஈபிஆர்எல்எப், டெலோ என பல்வேறு போராளி குழுக்களும் தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி போராடினர். இந்த சூழ்நிலையில், 1983ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மறக்க முடியா நிகழ்வு அரங்கேறியது.

இலங்கை அரசுக்கு எதிராக போராடிய தமிழ் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருந்த வெலிக்கடை சிறையில் மாபெரும் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஜூலை 25 மற்றும் 27 என இரண்டு நாட்களில் நடந்த அந்த கொடூர தாக்குதலில் முதல் நாளில் 35 பேர், இரண்டாவது நாளில் 18 பேர் என மொத்தம் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.அது, தமிழக அரசியல் களத்திலும் பேரதிர்வை ஏற்படுத்தியது. இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் மிகப்பெரிய பேரணியை திமுக நடத்தியது. தனது எம்எல்ஏ பதவியை ஆகஸ்ட் 10ம் தேதி கருணாநிதி ராஜினாமா செய்தார். மறுபுறம், இலங்கை பிரச்சினையில் தலையிடுமாறு பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் எம்ஜிஆர் வலியுறுத்தி வந்தார். தமிழகத்துக்கு பிரபாகரன் வந்து எம்ஜிஆரை சந்தித்தது, இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத பயிற்சி அளித்தது என்பதெல்லாம் இந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் தான். இப்படியாக, தமிழக அரசியல் களத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை தமிழர் விவகாரம் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது. இதற்கிடையே, 1984ம் ஆண்டு அக்டோபரில் எம்ஜிஆருக்கு சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு என உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக, அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் டவுண் ஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது, தமிழகத்தின் இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பொறுப்பு வகித்தார். மத்தியிலும் இதேபோன்ற இக்கட்டான நிலைமை உருவானது. காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாட பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதால், 1984 அக்டோபர் 31 அன்று சீக்கியர்களான தனது மெய்க்காப்பாளர்கள் இருவராலேயே பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை உருவாகி, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ்காந்தி, உடனடியாக பிரதமராக்கப்பட்டார். இதுபோன்ற சிக்கல்களுக்கு இடையே, 1984 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியது.

(நினைவுகள் சுழலும்...)
Post a Comment