Monday, 10 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 3

புதுச்சேரி என்றாலே மருத்துவம், கல்வி இரண்டுக்கும் பிரசித்தம் என்று கூறுவது உண்டு. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். மிகச் சிறிய மைதானம், வகுப்பு அறையிலேயே மதிய உணவு என சென்ற சென்னை பள்ளி வாழ்க்கையில் இருந்து புதுச்சேரியில் நான்கு ஆண்டு பள்ளி அனுபவம் வித்தியாசமாகவே அமைந்தது எனது செல்வங்(ன்)களுக்கு.
பரந்து விரிந்த மைதானம், மைதானத்தில் நண்பர்களுடன் மதிய உணவு, ஆண்டுக்கு ஒருமுறை கல்வி சுற்றுலா, ஆசிரியர் தினம் முதற்கொண்டு ஒவ்வொன்றுக்கும் விழா, கெட் டுகதர் போல முதல்வராக இருக்கும் ரெவ்.பாதரே மாணவர்களுடன் உரையாடி திரைப் பாடல்களை பாடி மகிழ்வது (விழா தினத்தில் மட்டும்) … என அந்த கொண்டாட்டங்கள் வேறுபட்ட அனுபவம்... கொண்டாட்டங்களுக்கான பூமி புதுச்சேரி என்பதை டான்பாஸ்கோ பள்ளியிலும் உணர முடிந்தது.
எந்தவொரு இடத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை அமைந்தாலே போதும், நம்முடைய பணிகளும் முன்னேற்றமும் தானாகவே விரிந்து உயரும். அங்கு பள்ளிக் கல்வியும் அப்படித்தான். தமிழகத்தை ஒப்பிட்டால் பள்ளிக் கல்வியில் புதுச்சேரி ஒரு படி மேல் என்பது எனது எண்ணம்.
நகருக்குள் மட்டும் மூன்று அரசு மருத்துவமனைகள், அரசு மகப்பேறு மருத்துவமனை, சுற்றிலும் ஏழு மருத்துவ கல்லூரிகள் புறநகர் பகுதிகளில் ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் என சுகாதார வசதியில் புதுச்சேரி கொஞ்சம் உயர்வாகவே உள்ளது. அதனால், சிறந்த மருத்துவ சிகிச்சைக்கு சந்தேகம் இல்லை. சொந்த ஊரில் முடக்குவாதத்தால் முடங்கிய என்னுடைய தந்தைக்கு சிறப்பான சிகிச்சை அளித்த ஜிப்மர் மருத்துவமனையையும் மறக்க முடியாது. அங்கு உள் நோயாளியாக சேர்ப்பதற்கு பெரிதும் உதவிய நண்பர் ஆதி கேசவன், மருத்துவமனை டீன் (பொறுப்பு) பாலச்சந்திரன் ஆகியோரின் உதவிகளை நன்றி என்ற மூன்று எழுத்துகளில் அடக்க முடியாது.


புதுச்சேரியை சுற்றிலும் உள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டம் வரையிலான தமிழக மக்களுக்கும் ஜிப்மர் மருத்துவமனை தான் ஆபத்பாந்தவன் என்பது மிகையான வார்த்தை கிடையாது. எனினும், ஓபன் ஹார்ட் சர்ஜரி போன்ற சில மிகவும் சிக்கலான சிகிச்சைக்கு புதுச்சேரி இன்னமும் பக்குவப்படவில்லை. அதுபோன்ற சிகிச்சைக்கு சென்னை வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதில், ஆட்சியாளர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவதிக்குள்ளான என்னுடன் பணியாற்றிய மூத்த ஊழியர் மோகன்ராஜ் சாரின் அனுபவமே அதற்கு சான்று.


அதற்காக அரசு மருத்துவமனையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து கூற முடியாது. எக்ஸ் ரே எடுப்பதில் தொடங்கி ஒவ்வொரு சிகிச்சை முறைகளையும் பார்க்கும்போது, தமிழகத்தின் பெரிய அரசு மருத்துவமனைகளை விட கொஞ்சம் நல்ல மாதிரியாகவே அணுகுமுறைகள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட சிகிச்சை சரியில்லை என்றால் உடனடியாக போராட்டமும், முதல்வர் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு.
(அனுபவங்கள் இனிக்கும்….)

என்னை கவர்ந்த புதுச்சேரி... 2

முதன் முதலில் புதுச்சேரி சென்றதும் என்னை வரவேற்று அழைத்துச் சென்று, வீடு கிடைக்கும் வரை தனது அறையில் தங்க வைத்தது நண்பர் வேல்முருகன், அந்த ஊரில் எனது முதல் அறிமுகம். புதுச்சேரி நகரை முழுவதும் சுற்றிக் காண்பித்ததில் நண்பர் சிவகுமாருக்கு முக்கிய பங்கு உண்டு. முதல் நாளிலேயே புதுச்சேரி தினகரன் செய்தி ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டேன். அங்கு என்னுடைய குறுகிய அனுபவமே எனக்கு மிக நெடிய அனுபவம், வாழ்க்கையிலும் பணியிலும்…
கல்லூரி, எம்பிளாய்மென்ட் ஆபீஸ், தாலுகா ஆபீஸ் இப்படி சின்ன தேவைகளுக்கு கூட 30, 40 கிலோ மீட்டர் வரை சென்ற எனக்கு ஓரிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தலைமை செயலகம், சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை போன்றவற்றை பார்த்தபோது சற்றே பிரமிப்பு. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 3 பெரிய அரசு மருத்துவமனைகள். 10 நிமிட தொலைவில் அழகிய கடற்கரை (பல திரைப்படங்களில் அதை பின்னாளில் பார்த்தபோது கொஞ்சம் கர்வம்.. நிறைய ஆச்சரியம்) இப்படி புதுச்சேரியில் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயங்கள் பலப்பல…
சிக்னலில் டூ வீலரில் காத்து நிற்கும் முன்னாள் அமைச்சர்கள், நெரிசலில் டூ வீலர் ஓட்டி செல்லும் எம்.எல்.ஏக்கள், வாரிய தலைவர்கள், சைரன் எதுவும் இல்லாமல் கடந்து செல்லும் முதலமைச்சர், மத்திய அமைச்சரும் (இப்போதைய முதல்வர்) கூட அப்படித்தான்… இன்றைய முதல்வரின் மனைவி டூ வீலரில் சென்றபோது லாரி மோதி விபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர்களே பந்தாவாக அலைவதை பார்த்தபோது எனக்கு சற்று மிரட்சியாகவே இருந்தது. அதுவும், முதல்வர் அலுவலகத்துக்கே சென்று அவரிடம் உரிமையோடு நேரடியாக வாக்குவாதம் செய்த தொகுதியின் சாதாரண வாக்காளரையும் பார்த்திருக்கிறேன். வேறு எந்த மாநிலத்திலாவது இது சாத்தியமாகுமா…?


உண்மையில், புதுச்சேரி வித்தியாசமான பிரதேசம் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு ஊரைப் பற்றிய எனது தேடுதல் தொடர்ந்தது. அந்த தேடுதலில் விளைந்தது தான், ‘புதுவையின் பழமை’ தொடர்… நண்பர் குரூஸ் தனம் மற்றும் புதுச்சேரி தினகரன் நிருபர்கள் உள்ளிட்ட நல்ல நெஞ்சங்களின் ஒத்துழைப்பால் தினகரனில் 50 வாரங்களுக்கு பரந்து விரிந்த அந்த தொடர், பிறகு அதே பெயரில் சூரியன் பதிப்பக வெளியீடாக புத்தகமாகவும் மலர்ந்தது…
(அனுபவங்கள் இனிக்கும்…)

தேவகுமாரன் வருவான்...?

ஆயிரம் ஏக்கருக்குள்
லட்சம் மக்களை
அடைத்தபோது கூட
நம்பிக்கை கண்ணி அறுபடவில்லை
நண்பர்களென நம்பியோர்
கட்டியணைத்து முதுகில்
கத்தி செருகியபோது
கண்ணியில் தொய்வு நேரிட்டது
எல்லாம் முடிந்ததென
எக்காள குரல் எழும்பியபோது
நந்திக் கடலின் சிவப்பினுள்
கண்ணியின் ஒரு இழை அறுந்தது
முள்ளி வாய்க்காலில்
முற்றுப்புள்ளியிட்ட தருணத்தில்
கண்ணியின் மற்றொரு
இழை தொடர்பும் அறுந்தது
சர்வதேசம் பார்த்து
நம்பிக்கை கண்ணிகளின்
மிச்ச இணைப்புகள்
எதிர் நோக்கி காத்திருந்தன
பேயின் சதிராட்டத்துக்கு
பிசாசு, குட்டிச்சாத்தான்களிடம்
நீதி, நியாயம் கேட்டு
நம்பிக்கை கொள்ளலாமா?
ஆனாலும், தனித்தனியாக அறுந்து விட்ட
நம்பிக்கை கண்ணிகள்
ஒவ்வொன்றும் நம்புகின்றன
இன்னும் ஒரு தேவகுமாரன்
நீதி வழங்க வருவானென.

Tuesday, 4 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி… 1

இங்கிலாந்தில் ஐ.சி.எஸ். பட்டம் பெற்று இந்தியா திரும்பி, ஆங்கிலேயருக்கு எதிராக வெடிகுண்டு போராட்டம் நடத்திய அரவிந்த் கோஷ் என்ற இளைஞரை பண்படுத்தி ஆன்மிக நாட்டத்தில் திருப்பியது, புதுச்சேரி மண். மறைவுக்கு பிறகும் ஸ்ரீ அரவிந்தர் என இந்த உலகத்தை திரும்பி பார்க்கச் செய்ததும் புதுச்சேரியே.



கொலை பாதகம் அறியாதவராக வளர்ந்த வாஞ்சிநாதனை, மணம் முடிந்து சில வாரங்களேயான அந்த இளைஞரை, சுதந்திர கனல் ஊட்டி, நெல்லை மாவட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை கொல்லும் அளவுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்ததும் புதுச்சேரியே….

எழுத்து வெடிகுண்டு வீசியதால் ஆங்கிலேயரின் கோபத்துக்கு ஆளாகி, தன்னை நாடி வந்த சுப்பிரமணியை, மகாகவி பாரதியாக்கி அழகு பார்த்ததும் புதுச்சேரி மண் தான். தன்னுள் வந்த ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அனுபவத்தை அளித்த புதுச்சேரி மண்ணில் எனக்கும் ஓர் ஐந்தாண்டு அனுபவம்…



அதன் ஈராயிரம் ஆண்டு பழமையை பற்றி ஒரு புத்தகம் எழுதியது…, பத்திரிகை பணியில் உயர்ந்த ஒரு இடம்…, சித்தர்களின் பூமியான புதுவையில், எனது தந்தையின் இறுதி மூச்சு அடங்கியது…., என மறக்க முடியா பல்வேறு அனுபவங்கள் நிறைந்தது, அந்த ஐந்தாண்டுகள்…

பல நூற்றாண்டு பழமை பற்றிய ஆய்வின்போது அகக்கண்ணால் நான் பார்த்த புதுச்சேரி, நிகழ் காலத்தில் புறக்கண்ணால் நான் கண்ட புதுச்சேரி… இரண்டுமே கண்ணில் நிழலாடுகிறது. அதை சுருக்கமாக பதிவு செய்வதில் மகிழ்கிறேன். அது, ஒரு குடியரசு நன்னாள்… அந்த நாளில் தான் முதன் முதலாக அந்த மண்ணில் அடியெடுத்து வைக்கும் பாக்கியம் எனக்கு வாய்த்தது….

(அனுபவம் இனிக்கும்…)

Sunday, 2 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 0

மனித வாழ்க்கையில் பயணம் தவிர்க்க முடியாதது. உள்ளங் கைக்குள் உலகை சுருக்கும் முன்பே யாதும் ஊரே என உலகுக்கு உரத்த குரலில் உரைத்தவன் தமிழன். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து பயணம் செய்து அந்த அனுபவங்களை பதிவு செய்த வரலாறும் உண்டு.
ஒவ்வொருவரின் அனுபவமும் வெவ்வேறு. ஓரிரு நாட்களின் பயண அனுபவமே பல நூறு கதைகளை நமக்கு சொல்லும். ஐந்தாண்டு வாழ்க்கை அனுபவம் என்றால்...?

நீரில் போடும் கோலம் போன்றது மனித வாழ்க்கை என்பது ராமாயணத்தில் கும்பகர்ணன் வழியாக கம்பர் கூறும் வார்த்தைகள். அதுபோன்ற இந்த நாடோடி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பரவச அனுபவம் புதுச்சேரி வாழ்க்கை. 

மனதில் தோன்றுவதை எழுதிச் செல்லும் இந்த வழிப்போக்கன் மனதுக்குள் புதுச்சேரி அனுபவங்களையும் எழுதும் எண்ணம் துளிர் விடுகிறது. ஈராயிரம் ஆண்டு பழமையான புதுச்சேரி பற்றி எழுதிய கரங்களால் சமகால புதுவை குறித்து குறிப்புகளை எழுத விழைகிறேன்.



அனந்த ரங்க பிள்ளையின் நாட்குறிப்பாக இல்லாவிட்டாலும் எனக்குள் ஆனந்தம் தருவதாக இருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கும் கூட....

(அனுபவம் இனிக்கும்...)

Wednesday, 24 August 2016

சட்டை உரிக்கும் பாம்பு

முகத்தை பாறை மீது சரசரவென உரசியதும், ஆம்லெட் போடுவதற்கு மெதுவாக முட்டை ஓட்டை தட்டினால் மெலிதாக விரிசல் வருமே... அப்படி ஒரு விரிசல் உதடு பகுதியில் தோன்றும். அந்த விரிசலை சீரற்ற கருங்கல் அல்லது பாறையில் வாகாய் கோர்த்துக் கொள்ளும். கட்டிடத்தில் கயிறு போட்டு ஏறுவது போல இதுவும் முன்னேறிச் செல்ல போடப்படும் ஏற்பாடு.
உதட்டு வெடிப்பை பாறை இடுக்கில் நன்கு தோதாக மாட்டியதும் மெதுவாக வேலையை ஆரம்பிக்கும். வளைந்து நெளிந்து செல்வதுதான் இயல்பான குணம் என்றாலும் அந்த சமயத்தில் மட்டும் மூங்கில் கம்பு போல விறைப்பாக நீண்டு கிடக்கும். நீண்ட போராட்டத்துக்கு பிறகு பஞ்சு நுரை போல தலைப் பக்கத்தில் இருந்து வெளிவரத் தொடங்கும். அப்படியே தலையை நகல் எடுத்தது போல மற்றொரு தலை வெளியேறும்.
எலியையோ முட்டைகளையோ ஜீரணிக்க முடியாமல் துப்புவதை கேள்விப்பட்டு இருப்போம். இது தன்னையே துப்புவதை போன்றது. கிட்டத்தட்ட இரை எடுத்துக்கொண்டு நகர முடியாமல் கிடப்பது போலவே இப்போதும் கிடக்கும். தலை வந்த சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல முழு உடலும் வெளிவரத் தொடங்கும். இது குகைப் பாதையை கடந்து வெளி வரும் ரயில் போலவே இருக்கும். தலையை வெளியேற்றும்போது இருந்த சிரமம் இப்போது இருக்காது என்பதால் உடல் பகுதி சற்று வேகமாகவே வெளியேறிவிடும்.
வெளிர் மஞ்சள் நிறத்தில் தங்கத்தை உருக்கியது போல தக தகவென மின்னும் அந்த உயிர், உயிரற்று கிடக்கும் தனது கூட்டை இப்போது பார்க்கும். அதற்கு இது ஒரு புதுப்பிறவி. உடலை முழுமையாக வெளியேற்ற வசதியாக தோலில் சுரந்த பிசுபிசுப்பும் கலந்து ஒருவித மதமதப்புடன் மயங்கி கிடக்கும். நீண்ட நேரம் உடலை விரைப்பாக வைத்திருந்த களைப்போ என்னவோ அப்படியே சுருண்டு ஓய்வெடுக்கத் தொடங்கும்.
பாம்பு சட்டை உரிப்பதைத்தான் சொல்கிறேன்....


நல்ல பாம்பு, சாரை தொடங்கி தண்ணீர் பாம்பு பச்சை பாம்பு வரை பொது விதி இதுதான்.
சிறிய வயதில் ஊருக்கு தெற்கே இருக்கும் பரம்பு காட்டில் உள்ள கிணற்றில் இறங்கி குளிக்கும்போது சுவரில் (கல் பாறை) இதுபோன்ற பாம்பு சட்டைகள் தொங்குவதை வைத்து அதன் நடமாட்டத்தை அனுமானிப்போம். தண்ணீர் பாம்பு , பச்சை பாம்பு போன்றவை மனித பயமின்றி திடீரென கிளம்பி வருவதுண்டு. மற்றவை எல்லாம் ஆள் அரவமற்ற தருணங்களில் தான் அவற்றின் வேலைகளை செய்யும். நம்மை அவை கவனிக்காத தருணங்களில் மூச்சை பிடித்துக் கொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை பீதியில் உறைந்தபடி இது போன்ற அரிய நிகழ்வுகளை பார்த்ததுண்டு....

Sunday, 21 August 2016

தேவதை மொழி..

வார்த்தைகள் இல்லா
வர்ணமற்ற பொழுதொன்றில் 
புருவத்தை சற்றே உயர்த்தி
கறுப்பு வெள்ளை விழிகளால்
வினா எழுப்பி நின்றாய்...
கண்களாலேயே
அபிநயம் பிடித்தபடி
புருவத்தை மட்டும்
சில கணம் நெளித்து
கண்ணின் மணிகளை
சுழற்றியபடி நீ எழுதிய
எழுத்தில்லா சொற்காவியங்கள்
காற்றில் நீந்தி வந்து
என்னை சேர்ந்த சமயத்தில்
கற்றுக் கொள்ள தொடங்கினேன்
தேவதை விழி மொழியை...

மனித நேயம்....

உலகெலாம் உறவென
பூச்செண்டு கரம் நீட்டிய
பூங்குன்றனாரும்
வாடிய பயிர் கண்டு
வாடிய வள்ளலாரும்
அவதரித்த மண் இது...

சமய குரோதங்கள்
சங்கறுத்து நிற்க
சாதி பேதங்களும்
சுற்றி நின்று அச்சுறுத்த
வீச்சரிவாளின் நுனியில்
பேச்சின்றி கிடக்கிறது
இன்றைய மனித நேயம்...

கடல் கடந்த தேசத்தின்
ஐந்தறிவு ஜீவனுக்கும்
கண் காணா ஊரில்
துடிக்கும் உயிருக்கும்
கண்ணீர் வடிக்கும்
இதயங்களில் இருந்து
கண்ணெதிரில் நசுங்கும்
மனித நேயத்துக்காக
துளியும் ஈரமில்லை....

இனி ஒரு விதி செய்வோம்
நம் வீதிகளில் இருந்தே
மனித நேய சாலையை
செப்பனிடுவோம்...

தொடங்கும் இப்பணியால்
நாளைய நம் உலகில்
மனித நேயம் பூச்செடி
மலர்ந்து மணம் வீசட்டும்...
சாதி சமய மாச்சரியங்கள்
அதற்கு எருவாகட்டும்...

நவீன மனு நீதி

ஆராய்ச்சி மணி ஒலிக்க
யாரங்கே என விளித்தான்
நவீன மனு நீதி
சேதியுடன் வந்தனர்
சேனையின் வீரர்கள்
கண்ணீருடன் நிற்கிறது
அபலை பசு ஒன்று
இளவரசர் தேரில் சிக்கி
சிதைந்து போனதாம்,
அந்த பசுவின் கன்று...
யோசித்தான் மனு நீதி,
பின்னர், அழைத்தான்...
லகுட பாண்டிகளுள்
ஒரு அப்பாவி
லகுட பாண்டியை
பசுங் கன்றின்
உயிர் கொலைக்கு
காலையில் விசாரணை
தப்பாமல் ஆஜராகுமாறு
ஆணையிட்டான்
வீட்டுக்கு மானியம்
குழந்தைகளுக்கு சொத்து
மனைவிக்கு அரண்மனை பணி
அடுக்கடுக்காக வழங்கினான்
நவீன மனு நீதி
விசாரணை மண்டபம்...
தேருக்கு முன் சென்றது
பசுவின் குற்றமாக கருதி ...
தேரோட்டிக்கு விதித்தனர்
ஆயுள் தண்டனை
புகார் இந்திர விழாவில்
கருணையின் பேரில்
தேரோட்டியை விடுவிக்கலாம்
மனு நீதியும், மகனும்
மனதினுள் யோசித்தனர்
நீதியை யாசித்த பசுவின்
கண்ணீர் உறைந்தது
பசுவும் கல்லாய் சமைந்தது
நவீன மனு நீதி சோழன்
மகிழ்கிறான், மகனுடன்...

கழுதை....

கழுதை கெட்டா குட்டிச் சுவரு. இந்த பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், கழுதை என்ற விலங்கை இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பார்கள்...? இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.

முன்பெல்லாம், கிராமங்களில் வீடு, வீடாக அழுக்குத் துணிகளை சேகரித்து கழுதை மீது பெரிய பொட்டலமாக (பொதி மூட்டை) கட்டி, துவைப்பதற்கு கொண்டு செல்வார்கள். அந்த தொழிலில் ஈடுபடுவோர், அதற்கென வீடுகளில் கழுதைகளை வளர்த்து வந்தனர். அதிக அளவில் அழுக்கு இருக்கும் துணியை வீட்டில் வெள்ளாவி (வெந்நீரில் துணியை வேக) வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, ஊருக்கு வெளியே உள்ள குளம், ஊருணி போன்றவற்றில் துவைத்து கழுதையின்மீது ஏற்றி கொண்டு வருவார்கள். விசேஷ தினங்கள் தான் கழுதைக்கு விடுமுறை தினம்.

எங்கள் ஊரில் சித்திரை மாத கொடை விழாவின்போது, ஊரில் உள்ள கழுதைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரு இடத்தில் கூடி நிற்கும். கழுதை வாலில் பட்டாசு கொளுத்தி ஓட விடுவதும், பனை ஓலையை கட்டி விடுவதும் சிறிய வயது விளையாட்டுகள். தனக்கு பின்னால் இருந்து வினோதமாக ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அச்சத்தில் கழுதை ஓட்டம் பிடிக்க, அந்த சத்தமும் அதன் பின்னாலேயே செல்வதால் மிக வேகமாக ஓட்டம் பிடிக்கும்.



இப்போது குளமும் இல்லை. ஊருணியும் இல்லை. கழுதையும் இல்லை. இது வாஷிங் மெஷின் காலம். வீதிகளில் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து ஓடி விளையாண்ட சிறுவர்களும் இப்போது இல்லை. ஏனென்றால், இது டெம்பிள் ரன் காலம். அதனால் தான், ‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற அதிர்ஷ்ட சட்டங்களுக்கு இடையே புகைப்படமாக மாறி விட்டது, கழுதை.
= பாரு. இங்க ஒரு கழுத கம்ப்யூட்டர் முன்னால ஒக்காந்துகிட்டு பழச கிளறிகிட்டு இருக்கு..ன்னு ‘சின்ன கவுண்டர்’ கவுண்டமணி பாணியில நீங்க நெனைக்கிறது எனக்கு கேட்குது...