Monday 10 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி... 2

முதன் முதலில் புதுச்சேரி சென்றதும் என்னை வரவேற்று அழைத்துச் சென்று, வீடு கிடைக்கும் வரை தனது அறையில் தங்க வைத்தது நண்பர் வேல்முருகன், அந்த ஊரில் எனது முதல் அறிமுகம். புதுச்சேரி நகரை முழுவதும் சுற்றிக் காண்பித்ததில் நண்பர் சிவகுமாருக்கு முக்கிய பங்கு உண்டு. முதல் நாளிலேயே புதுச்சேரி தினகரன் செய்தி ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டேன். அங்கு என்னுடைய குறுகிய அனுபவமே எனக்கு மிக நெடிய அனுபவம், வாழ்க்கையிலும் பணியிலும்…
கல்லூரி, எம்பிளாய்மென்ட் ஆபீஸ், தாலுகா ஆபீஸ் இப்படி சின்ன தேவைகளுக்கு கூட 30, 40 கிலோ மீட்டர் வரை சென்ற எனக்கு ஓரிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தலைமை செயலகம், சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை போன்றவற்றை பார்த்தபோது சற்றே பிரமிப்பு. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 3 பெரிய அரசு மருத்துவமனைகள். 10 நிமிட தொலைவில் அழகிய கடற்கரை (பல திரைப்படங்களில் அதை பின்னாளில் பார்த்தபோது கொஞ்சம் கர்வம்.. நிறைய ஆச்சரியம்) இப்படி புதுச்சேரியில் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயங்கள் பலப்பல…
சிக்னலில் டூ வீலரில் காத்து நிற்கும் முன்னாள் அமைச்சர்கள், நெரிசலில் டூ வீலர் ஓட்டி செல்லும் எம்.எல்.ஏக்கள், வாரிய தலைவர்கள், சைரன் எதுவும் இல்லாமல் கடந்து செல்லும் முதலமைச்சர், மத்திய அமைச்சரும் (இப்போதைய முதல்வர்) கூட அப்படித்தான்… இன்றைய முதல்வரின் மனைவி டூ வீலரில் சென்றபோது லாரி மோதி விபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர்களே பந்தாவாக அலைவதை பார்த்தபோது எனக்கு சற்று மிரட்சியாகவே இருந்தது. அதுவும், முதல்வர் அலுவலகத்துக்கே சென்று அவரிடம் உரிமையோடு நேரடியாக வாக்குவாதம் செய்த தொகுதியின் சாதாரண வாக்காளரையும் பார்த்திருக்கிறேன். வேறு எந்த மாநிலத்திலாவது இது சாத்தியமாகுமா…?


உண்மையில், புதுச்சேரி வித்தியாசமான பிரதேசம் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு ஊரைப் பற்றிய எனது தேடுதல் தொடர்ந்தது. அந்த தேடுதலில் விளைந்தது தான், ‘புதுவையின் பழமை’ தொடர்… நண்பர் குரூஸ் தனம் மற்றும் புதுச்சேரி தினகரன் நிருபர்கள் உள்ளிட்ட நல்ல நெஞ்சங்களின் ஒத்துழைப்பால் தினகரனில் 50 வாரங்களுக்கு பரந்து விரிந்த அந்த தொடர், பிறகு அதே பெயரில் சூரியன் பதிப்பக வெளியீடாக புத்தகமாகவும் மலர்ந்தது…
(அனுபவங்கள் இனிக்கும்…)

No comments: