Sunday, 10 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -9

இந்திய அரசியலில் 1967ம் ஆண்டு தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற தேர்தலுடன் பல மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில், அதுவரை 30 ஆண்டுகளாக மோனாபோலியாக ஆதிக்கம் செலுத்திய காங்கிரசின் கோட்டைகளில் ஓட்டைகள் விழுந்தன. 

அதுவரை 300க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மைக்கு சற்று அதிகமாக 283 இடங்களில் மட்டும் வென்றது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி 44, பாஜகவின் ஆதிக்கட்சியான ஜனசங்கம் 35 என பெற்றன. அன்றைய சென்னை மாகாணமான தமிழகத்தில் இருந்து 25 தொகுதிகளை வென்று 4வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் வளர்ந்திருந்தது திமுக.

தமிழகத்தின் 39 தொகுதிகளில் 36ஐ திமுக ராஜாஜி கட்சி கம்யூனிஸ்ட் கூட்டணி வென்றது. நாகை, தென்காசி, நாகர்கோவில் என 3 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிடம் ஆட்சியையும் பறி கொடுத்தது. அதன்பிறகு, 50 ஆண்டுகளை கடந்தும் காங்கிரசால் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியவில்லை.



அந்த தேர்தலின்போது முதல்வராக இருந்த பக்தவச்சலம் 9000 ஓட்டில் தோற்றுப்போனார். காங்கிரஸ் அமைச்சர்கள் பலரம் தோற்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் காமராஜர் வெற்றியை இழந்ததும் அப்போதுதான். அதே நேரத்தில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அண்ணா எம்பியாக வென்றிருந்தார். ஆனால், ஆட்சியை பிடித்ததால் அவர் எம்பி பதவியை ஏற்கவில்லை. எம்எல்சியாகி தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சரானார்.

தமிழகத்தில் திராவிட சரித்திரம் தொடங்கிய வேளையில், 1967 தேர்தலில் முதன்முறையாக நாடு முழுவதும் கேரளா, பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், உ.பி உட்பட 8 மாநிலங்களில் ஆட்சியை பறி கொடுத்தது, காங்கிரஸ். எனினும், மூத்த தலைவர்களின் அதிருப்தியால் மத்தியில் சரிவுடன் தத்தளித்து ஆட்சியை பிடித்த இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். துணை பிரதமரானார், மொரார்ஜி தேசாய்.



இந்த தேர்தலுக்கு பிறகு பிளவை நோக்கி பயணித்தது, காங்கிரஸ்.  நாடும் மற்றொரு யுத்தம் நோக்கி பயணமானது.

(நினைவுகள் சுழலும்)

நெல்லை ரவீந்திரன்

Friday, 8 March 2019

நாடாளுமன்ற தேர்தல் - 8

இந்திய பிரதமராக 1966ல் பதவியேற்ற சில மாதங்களிலேயே காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிருப்தியை இந்திரா ஏராளமாக சம்பாதிக்கத் தொடங்கினார். ஏற்கனவே நேருவின் போக்கால் பத்து ஆண்டுகளுக்கு முன் தனிக்கட்சியை ராஜாஜி தொடங்கியது போலவே, இந்திராவுக்கு எதிரான மனநிலைக்கு மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா போன்ற மூத்த தலைவர்கள் வந்திருந்தனர்.

கம்யூனிஸ்டை போலவே இந்தியாவின் முதல் பெரிய கட்சியும் பிளவை நோக்கிய பாதையில் பயணம் செய்தது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் 4வது பொதுத்தேர்தல் நெருங்கியது. இதற்குள் பாண்டிச்சேரி போன்ற மாநிலங்கள் இந்திய குடியரசுக்குள் முழுமையாக வந்திருந்தன. 1967ம் ஆண்டு நடந்த அந்த தேர்தலில், லோக்சபா இடங்களின் எண்ணிக்கை 26 அதிகரித்து 520 ஆக உயர்ந்திருந்தது.

இரண்டு நாடுகளுடன் நடந்த போர்கள். காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரதமர்களின் மறைவு. நேருவின் வாரிசு இந்திரா அறிமுகம் என பல சாதகங்களுடன் தேர்தலை சந்தித்தாலும் 1967 தேர்தல் காஙகிரசுக்கு இனிமையானதாக இல்லை என்றே கூறலாம்.



காங்கிரஸ் கட்சி மீதான இந்திய மக்களின் மயக்கமும் இந்த தேர்தலில் மெதுவாக தெளியத் தொடங்கியது. இருபது ஆண்டுகளாக ஏகபோகமாக இருந்த காங்கிரசின் ஆதிக்கம் சரிய தொடங்கியது.

நாடாளுமன்றத்தோடு மாநில சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து மொத்தமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும் காமராஜருக்கு பேரதிர்ச்சியையும் தந்தது 1967ம் ஆண்டு தேர்தல்.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 7


1962 தேர்தல் முடிந்து 1967 தேர்தலுக்குள் 5 ஆண்டுகளில் கட்சிகளில், ஆட்சியில் ஏராளமான மாற்றங்கள். எல்லாவற்றுக்கும் மேல் இரண்டு போர்களை இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா பார்த்தது. பதினைந்து ஆண்டுகளாக ஒரே பிரதமர் இருந்த நாட்டில் ஐந்து ஆண்டுகளில் 4 பிரதமர்கள் ஆட்சி செய்தார்கள். கிங் மேக்கராக காமராஜர் உயர்ந்ததும் இந்த 5 ஆண்டில் தான்.

1962 பிப்ரவரியில் தேர்தல் முடிந்த சில மாதங்களில் சீனாவுடன் போர் மேகம் சூழ்ந்தது. அக்டோபரில் அது போராக வெடித்தது. சுமார் 35 நாட்களுக்கு இந்தியா - சீனா போர் நடைபெற்றது. இந்த போர் முடிந்த இரண்டு ஆண்டுகளிலேயே அதன் நீட்சியாக மற்றொரு போர் மேகம் இந்தியாவை சூழ்ந்தது. 1965ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு யுத்தம் தொடங்கியது.

இது ஒருபுறம் இருக்க, அதுவரையிலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. 1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது.

1964ம் ஆண்டில் நேரு மறைந்ததும் காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து பிரச்னைகள் உருவாகின. முன்னதாக, கட்சிக்குள் ஒருவருக்கு ஒரு பதவி என 'கே' பிளானை அறிமுகப்படுத்தியதோடு, தமிழக முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார், காமராஜர். தேசிய அரசியலுக்குள் காமராஜர் நுழைந்ததும் தமிழகத்தில் காங்கிரஸ் சரிவை நோக்கி பயணித்தது.



நேரு மறைவுக்கு பிறகு, இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பதவியேற்றார். இரண்டு வாரங்களில் காமராஜர் தலையீட்டால் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவரும் பாகிஸ்தான் போர் முடிந்த சில வாரங்களில் 1966ல் மறைந்தார். மீண்டும் இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பதவியேற்க அடுத்த பிரதமர் தேடுதல் தொடங்கியது.



கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பலருக்குள் கடும் போட்டி. இறுதியாக, காமராஜரின் முயற்சியால் நேருவின் மகள் இந்திராகாந்தி பிரதமரானார். மொரார்ஜி தேசாய் துணை பிரதமராக பதவியேற்றார். இதுபோன்ற ஏராளமான சிக்கல்களுக்கிடையே 1967 தேர்தல் நெருங்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 6

சுதந்திர இந்தியாவின் 3வது பொதுத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் பெரிய அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. ஆளுங்கட்சியான காங்கிரசில் நேருவின் ஆதிக்கம் மிக அதிகமாக இருப்பதாக கூறி, தேர்தலுக்கு முன்னதாக 1959ல் தனிக்கட்சியை தொடங்கினார் ராஜாஜி. அதுதான் சுதந்திரா கட்சி. காமராஜரின் கை ஓங்கியதும் கூட ராஜாஜியின் முடிவுக்கு காரணம். 1954ல் சென்னை மாகாண முதல்வரான காமராஜரின் செல்வாக்கு தேசிய அளவில் அதிகரிக்கத் தொடங்கியது.



இதுபோல, தேர்தலுக்கு பின், இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்டில் பிளவு ஏற்பட்டு 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோன்றியது.
அதுவரையிலும் இருந்த இரட்டை உறுப்பினர்கள் தொகுதி முறை ஒழிக்கப்பட்டு முதன்முறையாக தொகுதிக்கு ஒரு எம்பி என 1962 தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 494 இடங்களுக்கு எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 361 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வானார், நேரு.

இந்திய கம்யூனிஸ்ட் 29, ராஜாஜியின் சுதந்திரா கட்சி 18, ஜனசங்கம் 14, சுயேச்சைகள் 20 என டபுள் டிஜிட் வெற்றிகள் ஏராளம். முதன் முறையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தது, திமுக. அந்த கட்சியில் 7 பேர் எம்பிக்களாக வெற்றி பெற்றனர்.

சென்னை மாகாணத்தில் மொத்தம் இருந்த 41 தொகுதிகளில் 31 தொகுதிகளை காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சி அள்ளியது. திமுக 7 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 2 இடத்திலும் பார்வர்டு பிளாக் ஒரு தொகுதியிலும் வென்றன. காங்கிசுக்கு மாற்றாக இந்திய கம்யூனிஸ்டுக்கு பதில் திமுக தலையெடுத்தது.

1962 பாராளுமன்ற தேர்தலுடன் சென்னை மாகாண சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், திமுக 50 இடங்களை வென்றும் காஞ்சிபுரத்தில் அண்ணா தோல்வியடைந்தார். இதனால், முதன்முறையாக மாநிலங்களவை மூலமாக நாடாளுமன்றத்துக்கு அடி எடுத்து வைத்தார், அண்ணா.

அதே நேரத்தில், நேருவுக்கு எதிராக ராஜாஜி உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் களமிறங்கியபோதும் 1962 பொதுத் தேர்தலில் நேருவே வென்று பிரதமரானார். ஆனால், அடுத்த பொதுத் தேர்தலுக்குள் 4 பிரதமர்களை இந்தியா பார்த்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 5

முதல் தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு நிறத்தில் பெட்டி இருக்கும். எந்த கட்சிக்கு வாக்களிக்க விருப்பமோ அதற்கான நிற பெட்டியில் வாக்குச் சீட்டை போட வேண்டும். ஆனால், 1957 தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அப்போதைய சின்னம் இரட்டை காளை மாடு. இந்திய கம்யூனிஸ்டுக்கு (அப்போது ஒரே கம்யூனிஸ்ட்) நெல்கதிர் அரிவாள் சின்னம். சுயேச்சைகளுக்கும் தனியாக சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.


வாக்குச்சீட்டுகளை பெட்டியில் போடும் முறை என்பதால், பெட்டிகளை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடுவது, பெட்டிக்குள் மையை ஊற்றுவது, வாக்குச் சாவடியையே கைப்பற்றி முறைகேடு செய்வது போன்றவை எல்லாம் பின்னாளில் நடைபெற்ற தேர்தல் சம்பவங்கள். அதுபோன்று சம்பவத்தை முதலில் அறிமுகம் செய்தது 1957 தேர்தல் தான். அறிமுகம் செய்தவர்கள் பீகார்காரர்கள். அந்த மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் மதிஹானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ரட்சியாகி கிராமத்தில் தான் சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். வாக்குச்சாவடியை கைப்பற்றி முறைகேடு நடந்தது.


ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைமுறை ஜரூராக நடந்ததால் 1957ல் அநேக மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் ஒன்றாக நடைபெற்றன. அதுபோல தமிழகத்திலும் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில்தான் முதன் முறையாக தேர்தலை சநதித்தது, திமுக. அங்கீகாரம் பெறவில்ல என்பதால் சுயேச்சை சின்னங்களிலேயே பலர் களமிறங்கினார்கள். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி உட்பட பலருக்கு உதயசூரியன் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் அண்ணாவுக்கு சேவல் சின்னம்தான் கிடைத்தது.



இந்த தேர்தலில் சென்னை மாகாணத்தின் 34 எம்பிக்களில் 24 பேர் காங்கிரசில் இருந்து வெற்றி பெற்றனர். திமுக, கம்யூனிஸ்டுக்கு தலா 2 பேர். சுயேச்சைகள் 6 பேர். 1957ம் ஆண்டு நடந்த இந்த தேர்தல் மூலம் முதன்முறையாக திமுக சார்பாக நாடாளுமன்றத்துக்கு எம்பிக்கள் சென்றனர்.


அகில இந்திய அளவில் 403 தொகுதிகளில் இருந்து தேர்வான 494 எம்பிக்களில் 371 பேர் காங்கிரஸ்காரர்கள். 27 பேர் கம்யூனிஸ்ட் கட்சியினர். இதுபோல, ஜெயபிரகாஷ் நாராயணின் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் 19 பேர் தேர்வாகினர். ஜனசங்கம் கட்சியில் இருந்து 4 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில்தான் மிக அதிக அளவிலான 42 சுயேச்சை எம்பிக்கள் வெற்றி பெற்றனர். இந்த சாதனை இதுவரை நடந்த எந்த ஒரு நாடாளுமன்ற தேர்தலிலும் முறியடிக்கப்படவே இல்லை. இப்படியான பல ருசிகரங்களை 1957 தேர்தல் பதிவு செய்தது.
(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Friday, 22 February 2019

நாடாளுமன்ற தேர்தல் 4

இந்தியாவின் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்கு முன், மொழிவாரி மாநில மறுவரையறை குழு தனது பரிந்துரைகளை அளித்திருந்தது. 1948ல் அமைக்கப்பட்ட அந்த குழு, ஏழெட்டு ஆண்டு ஆய்வுக்கு பிறகு அளித்த பரிந்துரையை 1956ம் ஆண்டில் மத்திய அரசு ஏற்று 'மாநில மறுவரையறை சட்ட'த்தை கொண்டு வந்தது. அதன்படி, சென்னை மாகாணமும் பிரிக்கப்பட்டு சிறியதானது.

கேரளா, மைசூரு, ஆந்திரா என புதிய மாநிலங்கள் உருவானதால் சென்னை மாகாணத்தின் பகுதிகள் அங்கு சென்றன. இதனால், 75 எம்பிக்களை கொண்டிருந்த சென்னை மாகாணம் 34 உறுப்பினர்களை கொண்டதாக சுருங்கியது. அதே நேரத்தில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 494ஆக அதிகரித்தது. மூன்று உறுப்பினரை தேர்வு செய்யும் தொகுதி ரத்து செய்யப்பட்டது.

மொத்த தொகுதிகளான 403ல் 312 தொகுதிகளில் தலா ஒரு எம்பியும் 91 தொகுதிகளில் தலா 2 எம்பிககளும் (கூடுதலாக எஸ்சி அல்லது எஸ்டி வேட்பாளர்) தேர்வு செய்யும் வகையில் அமைந்திருந்தன. இப்படியான மாற்றங்களுடன் 1957ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.




வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி, போக்குவரத்து வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இது போன்று ஐந்தாறு மாதங்களுக்கு தேர்தல் பணிகள் நீடித்தன. இந்தியாவின மேனோபோலி கட்சியாக காங்கிரஸ் இருந்ததால் மறுபடியும் அந்த கட்சியே ஆட்சியை கைப்பற்றியதில் வியப்பில்லை. ஆனால், திமுக களமிறங்கிய முதலாவது தேர்தல், சுயேச்சைகளின் ஆதிக்கம் என சுவாரஸ்யங்களுக்கு இந்த தேர்தலில் பஞ்சமில்லை.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 3

முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் 36 கோடி வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானோர் மட்டுமே, அதாவது பத்தரை கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான போது 489 இடங்களில் 364 இடங்களை நேரு தலைமையிலான காங்கிரஸ் கைப்பற்றியது. பதிவான மொத்த வாக்குகளில் நான்கே முக்கால் கோடி வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது.
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து நேரு தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. 1952ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதியன்று மீண்டும் பிரதமரானார், நேரு.
16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. இந்த தேர்தலில் பல பெருந் தலைகள் உருண்டன. ஆச்சார்யா கிருபளானியின் கிஸான் மஸ்தூர் கட்சி 9 இடங்களை பிடித்தபோதிலும் உத்திர பிரதேச மாகாணம் பைசாபாத்தில் கிருபளானி தோல்வியடைந்தார்.
இதுபோல அம்பேத்கரின் எஸ்சி பெடரேஷன் கட்சிக்கு இரண்டு இடம் கிடைத்தும் பம்பாய் வடக்கு மத்தி தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். 1954ல் நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலிலும் கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை. மேல்சபை வழியாக நியமன உறுப்பினராகத்தான் அவரால் நாடாளுமன்றம் செல்ல முடிந்தது.




1952 தேர்தலில் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம். இந்து அமைப்புகள் 10 இடங்களை பிடித்திருந்தன. இந்து மகாசபா கட்சிக்கு 4 ஜன சங்கம் மற்றும் ராம ராஜ்ய கட்சி ஆகியவற்றுக்கு தலா 3 இடங்களும் கிடைத்தன. இதில் ஜனசங்கம் மட்டும் 32.5 லட்சம் வாக்குகளை வாங்கியது. இரண்டாவது பெரிய கட்சியான கம்யூனிஸ்ட் வாங்கிய மொத்த வாக்குகள் 35 லட்சம் என்பதும் கவனிக்கத்தக்கது.
முதலாவது, தேர்தலின்போது சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டில் ஆந்திரா, கேரளா, மைசூர் போன்ற பகுதிகளும் இணைந்திருந்ததால் உ.பி. மாகாணத்துக்கு அடு்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய மாகாணமாக இருந்தது.
மொத்தம் 62 தொகுதிகளில் இருந்து 75 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாகாணத்தில் தேர்வான 75 பேரில் 35 பேர் காங்கிரஸ் கட்சியினர். கம்யூனிஸ்ட் சார்பாக 8 பேர் வெற்றி பெற்றனர்.
ஆனால், இரண்டாவது நாாளுமன்ற தேர்தல் 1957ல் நடந்தபோது சென்னை மாகாணத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 34ஆக குறைந்து விட்டது.
(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் 2

சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே தேர்தலில் களமிறங்க தலைவர்கள் பலர் தயாரானார்கள். ஜனநாயகம் என்றாலே பல கட்சிகளின் பங்களிப்பு தானே. நேரு தலைமையில் இருந்த தேசிய இடைக்கால அரசில் அங்கம் வகித்த தலைவர்கள் பலர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தனிக் கட்சிகளை தொடங்கினார்கள். தேர்தலில் போட்டியிடும் ஏற்பாடுகளையும் தொடங்கினார்கள்.
எஸ்சி பெடரேசன் என்ற கட்சியை அம்பேத்கர் தொடங்கினார். இந்த கட்சி தான் பின்னாளில் குடியரசு கட்சியாக மாறியது. கிஸான் மஸ்தூர் கட்சியை ஆச்சார்யா கிருபளானியும் ஜன சங்கம் கட்சியை ஷியாம் பிரசாத் முகர்ஜியும் தொடங்கினார்கள். இது போல ஏராளமான கட்சிகள் தொடங்கப்பட்டன. மாகாண அளவிலும் மாகாணங்கள் அளவிலும் செல்வாக்கு பெற்றிருந்தன, அந்த கட்சிகள். இது தவிர, அப்போது பலமாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலுக்கு தயாராக இருந்தது.
உண்மையான ஜனநாயக நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, 'சுதந்திரம் வாங்கிய கையோடு அதற்காக போராடிய காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம் எனவும் சுதந்திர போராட்டத்துக்காக தொடங்கப்பட்ட அமைப்பு அது' எனவும் காந்தி கூறியது உண்டு. ஆனால், சுதந்திரம் பெற்ற சில மாதங்களியே காந்தி மறைந்து விட்டதால் அது ஈடேறவில்லை.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, சுதந்திம் வாங்கித் தந்த கட்சி என்ற கிரெடிட்டுடனேயே தேர்தலில் களமிறங்கியது. மக்களுக்கும் அதன் மீது பெரிதான கிரேஸ் இருந்தது.
இப்படியான காட்சிகளுடன் புதுப்புது கட்சிகளும் களமிறங்கிய முதலாவது பொதுத் தேர்தல் 1951ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 1952 ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை பல கட்டங்களாக 120 நாட்கள் நடைபெற்றது. சென்னை மாகாணம் உட்பட 25 மாகாணங்கள். மொத்தம் 489 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. முதல் தேர்தலிலேயே காஷ்மீரின் பங்களிப்பு கிடையாது. இமாச்சலில் பனி காரணமாக ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.



இந்தியா முழுவதும் வாக்களிக்க தகுதியானவர்களாக 36 கோடி பேர் இருந்தனர். 6 மாதங்களுக்கு மேலாக நீடித்த தேர்தல் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கிலான ஊழியர்கள் ஈடுபட்டனர். அன்றைய தேர்தலில் எஸ்சி, எஸ்டி வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் ரிசர்வ் (தனி) தொகுதிகள் கிடையாது. மாற்றாக இரட்டை பிரதிநிதித்துவ முறை அமலில் இருந்தது. எப்படி..?
நாடாளுமன்றத்துக்கு 489 பேரை தேர்வு செய்யும் தேர்தல் என்றாலும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 401தான்.
இந்த 401ல் 314 தொகுதிகளில் தலா ஒரு எம்பி தேர்வானார். 86 தொகுதிகளில் எஸ்சி அல்லது எஸ்டி ஒருவரை கூடுதலாக தேர்வு செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டது. இது இரட்டை உறுப்பினர்கள் தொகுதிகள். ஒரே ஒரு தொகுதியில் மூன்று எம்பிக்கள் தேர்வானார்கள்.
இப்படியான பல்வேறு வித்தியாசமான அனுபவங்களுடன் நடந்த முதலாவது பொதுத் தேர்தலிலேயே பல அதிர்ச்சிகரமான முடிவுகளை இந்திய வாக்காளர்கள் அளித்தனர். முக்கியமான பிரபலமான தலைவர்கள் பலர் தோல்வியடையும் வரலாறும் அந்த தேர்தலிலேயே தொடங்கி விட்டது.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 1


2016 பிப்ரவரியில் இதே நாளில் சட்டப்பேரவை தேர்தல் ஜுரம் பரவத் தொடங்கியும், தமிழக தேர்தல் பற்றிய நினைவுகளை எனது வலைப்பூவில் (திலீபன் சிந்தனை) அசை போட்டபோது 35 பகுதிகள் வரை போனது.
இப்போது நாடாளுமன்ற தேர்தல் காய்ச்சல் பரவ தொடங்கி விட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் கோடிக்கணக்கில் புதிய வாக்காளர்களாக இளம் தலைமுறையினர் வருகின்றனர். இந்த தேர்தலிலும் தான். சட்டப்பேரவை தேர்தல் போலவே நாடாளுமன்ற தேர்தல் நினைவுகளையும் சுழல விடலாம் என்ற எண்ணத்தில் தொடங்குகிறேன்.
1947ல் சுதந்திரம் பெற்றபோது குத்தகைதாரரை காலி செய்து விட்டு ஹவுஸ் ஓனர் குடியேறிய வீடு போலத்தான் இந்தியா இருந்தது. இது, கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டு குத்தகையாக இருந்ததால் செப்பனிட வேண்டிய பணிகள் அதிகம். சமையலறை, ஹால் தொடங்கி ஒவ்வொன்றையும் பார்த்து பார்தது புதுப்பிக்க வேண்டியிருந்தது.
அதாவது, தனி அரசியலமைப்பு உட்பட ஒட்டு மொத்தமாக மாற்றம் தேவைப்பட்டது. இதைத்தான் 1947 ஆகஸ்டில் அமைந்த நேரு, படேல் தலைமையிலான அரசு செய்தது. இந்தியாவுக்கென தனி அரசியலமைப்பு சட்ட கொள்கைகளை அம்பேத்கர் வகுத்தார். 1949 நவம்பரில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உட்பட அனைத்து விதமான நிர்வாகங்களும் தயாரானது.
அடுத்தகட்டமாக குடியரசு நாடாக இந்தியாவை மாற்றும் பணிகள் தொடங்கின. நேரு தலைமையிலான அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் இடம் பெற்ற இடைக்கால தேசிய அரசு இந்த நடவடிக்கைகளை தொடங்கியது. 1950 ஜனவரியில் முறைப்படி குடியரசு எனப்படும் ஜனநாயக நாடாக இந்தியா மாறியது.
அதன் பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் ஏற்பாடுகளை தொடங்கும் பணி. சுதந்திர அமைப்பாக தேர்தல் ஆணையத்தை ஏற்படுத்தியதும் அதில் ஒன்று. இந்த ஜனநாயக பணிகளில் கொஞ்சம் கோக்கு மாக்கு நடந்திருந்தாலும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இப்போது நம்மால் பேச முடியாது. பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.
புது வீட்டுக்கு குடியேறுவது போல பார்த்து பார்த்து செய்த வேலைகள் எல்லாம் நிறைவடைவதற்கு முழுமையாக 4 ஆண்டுகள் பிடித்தது. அதுவரையிலும் நேரு தலைமையில் தேசிய அரசு தொடர்ந்தது.
இறுதியாக 1951 மத்தியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் அறிவிப்பு வெளியானது. மிக நீண்ட காலம் நடைபெற்ற தேர்தல் அது..




(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

Saturday, 8 December 2018

நீ வருவாய் என...

கிளைகளில் இளைப்பாறி
இலைகளின் ஊடாய்
வழிந்தோடுகிறது பனித்துளி
நூலிழையாய் பிணைந்து
நெஞ்சுக்குள் குளிரை தைக்கிறது
தெருவிளக்கின் மின்னொளியில்
தோற்றுப் போகிறது மின்மினிகள்
விடியலுடன் கூடிக் கரைய
காத்திருக்கும் பின்னிரவு
இரவு பாடல்கள் தீர்ந்த பின்னும்
முணுமுணுத்துக் கிடக்கும்
சுவத்துக் கோழி சுட்டிகள்
வைகறைப் பொழுதின்
ஏகாந்தத்தில் தனித்திருக்கிறேன்
நீ வருவாய் என....