Tuesday, 19 August 2014

வெயிலோடு விளையாடி .... வெயிலோடு உறவாடி .....

வெயில்.

நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. வெயிலை சுவாசித்து வெயிலை தோழனாக பாவித்து வெயிலோடு விளையாடிய அனுபவம்  நிச்சயமாக இருக்கும். ஜன்னல் வழியே நூலிழையாக வீட்டினுள் நுழைவதும் படிக்கட்டுகளில் வழிந்து செல்வதும் வயல் வெளியில் வெளிச்சம்  பாய்ச்சுவதும் வெயிலின் பன்முகங்களில் சில முகங்கள். ஆடு மாடுகளின் முதுகில் தவழும் வெயில். சாலையில் சறுக்கி செல்லும் வாகன  முகடுகளில் மின்னல் கீற்றை ஏற்படுத்தும் வெயில் என வெயிலோடு வளர்ந்த மனிதர்கள், நாம்.

ஆனால், வெயிலுக்கு பெயர் பெற்ற பாலைவன வெயில் முற்றிலும் மாறுபட்டது. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உள்வாங்கி நிற்கும்  மூர்க்கத்தனமான வெயிலையும் அதை தாங்கி நிற்கும் பாலைவனத்தையும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் காணலாம். அங்குள்ள தார்  பாலைவனத்தில்தான் கரைகளற்று ஓடும் நதியென வெயில் பரவி நிற்கிறது. திக்கு தெரியாமல் வியாபித்து நிற்கும் வெயிலை பிரதிபலிக்கும  மணற்பரப்புடன் கூடிய தார் பாலைவனம், தனி உலகம். சூரியனுக்கு மிகவும் பிடித்த பகுதி.

அதிகாலையில் கடலில் குளித்தெழும் உதயசூரியனை கண்டு மகிழ்ந்திருப்போம். பாலைவன மணலில் விழித்தெழும் சூரியனை பார்த்து  இருக்கிறீர்களா? அதை தார் பாலைவனத்தில் காணலாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தார் பாலைவனம்.  அங்கிருந்து பாகிஸ்தான் எல்லை 15 கி.மீ. மார்ச் மாதத்தில் கூட அதிகாலை 6 மணியை தாண்டியும் இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. இருட்டு என்றால்  குறைவான வெளிச்சம் அவ்வளவு தான். அந்த குறைந்த வெளிச்சத்திலும் பாலைவன காற்றுடன் கலந்து மணல் துகள்கள் எழுந்து நின்று  வரவேற்கின்றன.



இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட மஞ்சள் நிற மணல் துகள்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொலைதூரத்தில் மிக  மெல்லிய புள்ளியாக தோன்றி மெதுமெதுவாக சூரியப்பந்து விரிவடைய துவங்குகிறது. அது, பாலைவன சூரியோதயம். கடலில் குளித்தெழும்  சூரியனை போலவே பாலைவன மணலில் குளித்தெழுகிறது, சூரியன். மணலில் இருந்து எழும்பிய வேகத்தில் சில மணித் துளிகளிலேயே தனது  பெரிய கால்களால் வானத்தை நோக்கி சரசரவென ஏறத் துவங்குகிறது. காலை நேர மஞ்சள் ஒளிச் சிதறல் பட்டதும் மணல் பரப்பில் புதுப் பொலிவு  கூடுகிறது. அந்த மணலை ஆவலுடன் அள்ளி எடுத்தால் காதலனை தேடிச் செல்லும் காதலியாக ஆற்றாமையுடன் வந்து சேரும் காற்று அதை  கலைத்து விடுகிறது.

வளைந்து யெளிந்து செல்லும் காற்றின் காலடித் தடத்தை பாலைவன மணலில் தெளிவாக பார்க்கலாம். காற்றின் காலடி தடங்கள் தான் பாலைவன  மணலில் ஓவியமாகவும் அலை போன்ற கோடுகளாகவும் கிடக்கின்றன. காற்றின் மூர்க்கம் அதிகமாகும்போது ஒரு மணல் குன்றையே பெயர்த்து  எடுத்து சற்று தள்ளிச் சென்று வைக்கிறது. பாலைவனத்தில் மணல் குன்றுகளை கட்டுவதும் அழிப்பதுமாக இருக்கும் காற்றின் சேட்டையை ரசித்துக்  கொண்டிருக்கும்போதே வியர்த்துக் கொட்டுகிறது.

சுறு சுறுவென வானில் ஏறிய சூரியன், சில மணி நேரத்துக்குள் 40 டிகிரி செல்சியசில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடுகிறது. வெயிலையே குடித்து  வளர்ந்த வெப்ப பிரதேசத்து மனிதனாக இருந்தால் கூட, அந்த வெயிலை எதிர் கொள்வது மிகவும் கடினம். பாலை வனத்தில் பகல் நேரம் என்பது  சிக்னலுக்கு காத்திருக்கும் சமயத்தில் ஊர்ந்து செல்லும் சரக்கு ரயில் போன்றது. மணல் குன்றுகளுக்கு இடையே தோன்றும் கானல் நீர் கூட அருகில்  செல்லும் வரை நீரோடை போல காட்சியளித்து மாயாஜாலம் செய்கிறது.



பாலைவனத்தில் குவிந்து கிடக்கும் மிக நுண்ணிய மணல் துகள் ஒவ்வொன்றும் ஆச்சரியம். மணல் துகள்களை தன்னுள் வைத்துள்ள பாலைவனம்  ஒரு புரியாத புதிர். உள்ளே தொலைதூரம் சென்று விட்டால் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து ஆகாரமின்றி அவதிப்பட நேரிடலாம். அதை  நினைத்தால், சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தில் செல்லும் காதலர்களின் நிலைமை காட்சியாக மனத் திரையில் விரிகிறது.

ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத் என இந்தியாவின் 4 மாகாணங்கள் மற்றும் பஞ்சாப், சிந்து என பாகிஸ்தானின் 2 மாகாணங்களில் விரிந்து  பரவி கிடக்கும். தார் பாலைவனத்தின் தொத்த பரப்பளவு 2 லட்சம் சதுர கி.மீட்டர். தார் பாலைவனத்தை ஆரவல்லி மலை சூழ்ந்திருக்கிறது. எனினும்,  ராஜஸ்தான் என்ற பெயருடன் மட்டுமே தார் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் அணுகுண்டு சோதனைகளுக்கு களம் அமைத்து தருவதும் தார்  பாலைவனம் தான் என்பது கூடுதல் தகவல்.

= வை.ரவீந்திரன்,
    புதுச்சேரி.

Saturday, 12 July 2014

மழையின் பரிமாணங்கள்

மழைத்துளி விழுந்து மண்ணின்
மணம் எழுந்ததால் எழுதினேன்!
ஜலதோஷம் பிடிக்கிறது என்றாலும்
குழந்தைக்கு நனைவதே பிடிக்கிறது

கூரையில் இருந்து வழியும்
மழையில் நனைந்த சுகம்
அடுக்கு மாடி கட்டிடத்தின்
சன்னல்களில் இல்லை

ஒவ்வொரு முதல் மழையிலும்
பாட்டியின் குரல் ஒலிக்கிறது
முதல் மழையில் நனையாதே
உடலுக்கு சுகவீனம் வரும்

இது மழைத்துளி அல்ல
சோர்வு வடுக்களை துடைத்தெறிய
மேகப்பஞ்சு நெய்து அனுப்பிய
மழைத் துணி!

= வை.ரவீந்திரன் 

Saturday, 21 June 2014

புதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறு



புதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறு

ஒவ்வொரு மனிதரையும் அடையாளம் காண்பதில் முகம் எவ்வளவு பங்கு வகிக்கிறதோ, அதே அளவிலான பங்கை முகவரி வகிக்கிறது. முகவரி என்பது சில வேளைகளில் சரித்திர பதிவுகளாகவும் மாறுகின்றன. அதுபோன்ற முகவரிக்கு முதுகு தண்டாக இருப்பது வீதி.

வீதிகளை அடையாளம் காண்பதற்கு பெயர் சூட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாகவே நீடித்து வருகிறது. ஆனால், ஒருமுறை சூட்டப்பட்ட பெயர், நூற்றாண்டு கடந்து இருக்குமா என்பது சந்தேகமே? சென்னை மாநகரில் தமிழ் பெயர்களை சூட்டும் திட்டத்தினால் பல்வேறு வீதிகளின் பெயர்கள் மாற்றம் பெற்று விட்டன. அத்துடன் சாதி பெயர்களையும் நீக்கியதால் பாரம்பரியம் மிக்க வீதிகளும் கூட புதிய பெயரை ஆடையாக போர்த்தி நிற்கின்றன.

ஆனால், சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் உள்ள சில தெருக்களின் பெயர்கள் நூற்றாண்டுகள் கடந்தும் அப்படியே நீடித்து வருகின்றன. அதில் ஒன்று புஸ்சி வீதி. 

யார் அந்த புஸ்சி?

இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றிய டூப்ளக்ஸ், புதுச்சேரி கவர்னராக பதவி வகித்தபோது அவருடைய தளபதியாக இருந்தவர் புஸ்சி. 1747 முதல் 1754ம் ஆண்டு வரை டூப்ளக்ஸ் தலைமையில் பிரெஞ்சிந்திய தளபதியாக புஸ்சி இருந்தார். டூப்ளக்ஸ் காலத்துக்கு பின் 1783 முதல் 1785 வரை புதுச்சேரியில் கவர்னராகவும் இருந்துள்ளார்.

புஸ்சியின் வீரத்தினால் புதுச்சேரியில் இருந்து செஞ்சி, வந்தவாசி, தக்காணம் என பிரெஞ்சு எல்லை விரிவடைந்தது.  ‘எனக்கு இன்னும் ஒரு புஸ்சி கிடைத்திருந்தால் கர்நாடகத்தில் ஆங்கிலேயரை வேரறுத்து இருப்பேன்’ என டூப்ளக்ஸ் கூறிய வார்த்தைகளில் இருந்து புஸ்சியின் வீரத்தை அறியலாம். அதே நேரத்தில், புஸ்சி ஒரு மனித நேயர். ‘வெற்றிகளால் கிடைக்கும் விருதுகளை விட மனித உயிர் மிகவும் மதிப்பு மிக்கது’ என்பது புஸ்சி அடிக்கடி கூறும் வார்த்தைகள்.

அவரை பெருமை படுத்தும் வகையில் புதுச்சேரி நகரின் தென்பகுதியில் ஒரு வீதிக்கு அவரது பெயரை பிரெஞ்சியர் சூட்டினர். புதுச்சேரி பஸ் நிலையத்துக்கு கிழக்கு பகுதியில் அந்த வீதி உள்ளது. புஸ்சி வீதியை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி புஸ்சி சட்டப்பேரவை தொகுதி ஒன்றும் சமீப காலம் வரை இருந்தது. தொகுதி சீரமைப்பின்போது அந்த தொகுதி மாறி விட்டது. எனினும், புஸ்சி வீதி அப்படியே இருக்கிறது.

பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு வந்து காலனி ஆதிக்கத்தில் மின்னல் கீற்றாய் ஒளி வீசிய புஸ்சியின் இறுதி மூச்சு, புதுச்சேரி மண்ணில் தான் 1785ம் ஆண்டு அடங்கியது. கடற்கரையோரம் உள்ள கப்ஸ் கோயிலின் (புனித மேரி தேவாலயம்) தென் பகுதியில் புஸ்சி சமாதி உள்ளது.



ஊர் பெயரில் வீதிகள்

ஒரு நகரத்தை நோக்கி செல்லும் சாலையை அந்த நகரின் பெயரால் அழைப்பது வழக்கம். திருச்சி நெடுஞ்சாலை, மதுரை ரோடு இப்படி பெயர்கள் சூட்டப்படுவது உண்டு. ஆனால், புதுச்சேரி நகருக்குள் செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை என வித்தியாசமான பெயர்களை காணலாம். இதற்கும் பிரெஞ்சியரே காரணம்

ஏற்கனவே கூறியபடி, புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் காலனி ஆதிக்கம் செலுத்த பிரெஞ்சியர் தீவிரம் காட்டி வந்தனர். அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து 3 திசைகளிலும் அவர்களின் எல்லையை முடிந்த அளவுக்கு விரிவு படுத்தி சென்றனர். அதில் மேற்கு நோக்கிய அவர்களின் பயணத்துக்கு முழுமையான வெற்றி கிடைத்தது.
அதாவது செஞ்சி, ஆம்பூர், ஆற்காடு, வந்தவாசி என தொடங்கி கர்நாடகம் வரை பிரெஞ்சு ஆட்சி எல்லையை விரிவு படுத்தி வந்தனர். ஒவ்வொரு நகரையும் கைப்பற்றும்போது புதுச்சேரியில் வெற்றி கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அதுபோன்று செஞ்சி மற்றும் ஆம்பூர் நகரங்களை கைப்பற்றிய தருணத்தில் அதை காலம் காலமாக நினைவு கூறும் வகையில் புதுச்சேரி தெருக்களுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு நூற்றாண்டை கடந்தும் பிரெஞ்சியர் சூட்டிய பெயர்கள் இன்றும் புதுச்சேரி வீதிகளில் நிலைத்து நிற்கிறது. 

= வை.ரவீந்திரன் 


Monday, 16 June 2014

கடவுளின் பூமி மாகே




மதுவுக்கும் பிரெஞ்சு கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்ற புதுச்சேரிக்கு மற்ற மாநிலங்களை விட வித்தியாசமான சிறப்பு உண்டு. இதன் 4 பிராந்தியங்களும் வெவ்வேறு இடங்களில்


பிரிந்து கிடக்கின்றன. புதுச்சேரியை தவிர்த்த மற்ற  பிராந்தியங்களான ஏனாம் ஆந்திராவிலும், காரைக்கால் தமிழகத்திலும், மாகே கேரளாவிலும் சிதறிக் கிடக்கிறது.

இதில் மாகே, கடவுளின் பூமி எனப்படும் கேரள மாநிலத்தின் அருகே அரபிக் கடலோரம் முத்துச் சிப்பியாய் கரை ஒதுங்கி கிடக்கும் எழில்மிகு நகரம்.  கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இடையே குட்டி மல்லிகையாக மணம் பரப்பி நிற்கிறது. பசுஞ்சோலையாக பரவி கிடக்கும் மாகே நகரின் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பெயர் மய்யழி. மய்யழி ஆற்று கரையோரம் இருந்ததால் அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டது. மய்யழி எப்படி மாகே ஆனது என்பது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த கதை. 

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வந்த பிரெஞ்சியரை சூரத்தில் இருந்து ஆங்கிலேயர் விரட்டியதால் 1720ம் ஆண்டு மய்யழி வந்து தஞ்சம் புகுந்தனர். அங்கு ஆட்சி செய்த படகரா மன்னர் அனுமதியோடு ஒரு கோட்டையை கட்டினர். ஆனால், ஆங்கிலேயரின் துரத்தல் தொடர்ந்தது. எனவே, பிரெஞ்சியரை காப்பாற்றுவதற்காக பிரான்சில் இருந்து வந்தார், கடற்படை தளபதி பிரான்சுவா மாகே லாபோர்தனே. ஆங்கிலேயரை அடக்கி பிரெஞ்சியர் நிரந்தரமாக தங்க வழி வகுத்து கொடுத்ததால் அவர் பெயரையே அந்த பகுதிக்கு பிரெஞ்சியர் சூட்டினர். இப்படித்தான் மய்யழி, மாகே ஆனது.

மலபார் கடற்கரைக்கே உரித்தான இளமை ததும்பும் அழகுடன் சுற்றுலா தலமாக ஜொலிக்கும் இன்றைய மாகே பகுதியில் கலங்கரை விளக்கம், மீன்பிடி துறைமுகம், தாகூர் பூங்கா என முக்கியமான இடங்களுடன் கோயில், தேவாலயம், மசூதி என ஏராளமான வழிபாட்டு தலங்களும் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுச்சேரி அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

மய்யழி ஆற்றின் கரையோரத்தில் walk way எனப்படும் நடைபாதை அமைக்கும் திட்டம், அதில் ஒன்று. 5 கோடி ரூபாய் செலவில் ஆற்றின் இரு கரைகளிலும் கற்களை பதித்து நடைபாதை அமைத்துள்ளனர். இந்த நடைபாதையில் மாலை நேரத்தில் ஆற்றங்கரையோரம் நடைபயில்வது அலாதியான அனுபவமாக இருக்கும். இது தவிர, மய்யழி ஆற்றில் படகு சவாரி செய்யவும் புதுச்சேரி சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது. மாகே பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அலுவலகம் இயங்கும் கட்டிடம் பிரெஞ்சியர் காலத்தில் கட்டப்பட்டது. அதை புனரமைப்பு செய்து சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

அடுத்த முறை கேரள கரையோரம் சென்றால் பிரெஞ்சு, மலையாளம், தமிழ் கலந்து கதம்ப மணம் வீசும் மாகே பகுதியையும் கண்டு வரலாமே? 
••••••••••

ராபர்ட் கிளைவை வென்ற மாகே
==================================

மய்யழியில் ஆங்கிலேயரை ஒடுக்கிய பிறகு புதுச்சேரியில் நிரந்தரமாக தங்கி இருந்து பிரெஞ்சு எல்லையை விரிவு படுத்தும் பணியில் மாகே லாபோர்தனே ஈடுபட்டார். அப்போது நடந்த ஒரு போரில் இந்தியாவில் இன்றளவும் நினைவு கூறப்படும் ஆங்கிலேய தளபதி ராபர்ட் கிளைவ் இவரிடம் தோற்றுப்போய் சரண் அடைந்தார் என்பது ஆச்சரியமூட்டும் தகவல். கிபி 1746ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி சென்னையில் இந்த சரித்திர அதிசயம் நிகழ்ந்தது.

புதுச்சேரியில் இருந்து சின்னஞ்சிறு படையுடன் கடல் மார்க்கமாக வந்து சென்னை நகரை மாகே கைப்பற்றினார். ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயப் படை மாகேயிடம் தோற்றுப்போனது. ஆனால், பிரெஞ்சு ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பதிலாக  ரூ.4 லட்சம் பவுண்டு பெற்றுக் கொண்டு ஒரு மாதத்தில் திரும்பவும் ஆங்கிலேயரிடமே சென்னையை ஒப்படைத்தார், மாகே. இதனால், பின்னாளில் பிரான்சுக்கு அவர் திரும்ப அழைக்கப்பட்டு ராஜ துரோக தண்டனை விதிக்கப்பட்டது.

= வை.ரவீந்திரன் 

Monday, 9 June 2014

ஆச்சரியமூட்டும் ஆயி மண்டபம்






மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்த பிறகும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனி அரசு முத்திரைகளை வைத்துள்ளன. முத்திரை என்பது அந்தந்த அரசுகளின் தனித்துவ அடையாளம். அந்த வரிசையில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் புண்ணிய பூமியாம் புதுச்சேரி மாநிலத்தின் அரச முத்திரையாக ஜொலிப்பது, ஆயி மண்டபம்.
புதுச்சேரி கடற்கரையோரத்தில் பாரதி பூங்காவின் நடு நாயகமாக வீற்றிருக்கும் வெள்ளை நிற ஆயி மண்டபத்துக்கு சுமார் 200 ஆண்டு கால நெடிய வரலாறு உண்டு. கிரேக்க ரோமானிய கட்டிடக் கலை கலந்து அழகுற கட்டி எழுப்பப்பட்டுள்ள ஆயி மண்டபம் எதற்காக கட்டப்பட்டது? இந்த மண்டபத்தை கட்டியவர் யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை பின் தொடர்ந்து சென்றால் ஆச்சரியமான தகவல்கள் நம்மை வரவேற்று விழி விரிய செய்கின்றன.  
இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் தேவதாசி தொழில் அதிகமாக இருந்தது. அப்போது, கோயிலுக்கென்றே தங்களை அர்ப்பணித்து உழவார பணிகளை செய்பவர்கள், செல்வந்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் எ பல்வேறு பிரிவினர் இருந்தனர். அதுபோன்ற இனத்தில் பிறந்த ஒரு பெண் தான் ஆயி. புதுச்சேரியை அடுத்த முத்தரையர் பாளையத்தில் 16ம் நூற்றாண்டில் மிகப் பெரிய மாளிகையில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தவர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தனது மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு குளம் ஒன்றை வெட்டினார். அது தான் ஆயி குளம். புதுச்சேரியை அடுத்த முத்தரையார் பாளையத்தில் இன்றும் கூட ஆயி பெயரிலான அந்த குளத்தை காணலாம்.
ஆயி வாழ்ந்த காலத்தில் புதுச்சேரி எல்லை வரை கிருஷ்ண தேவராயரின் ஆட்சி பரவி இருந்தது. ஒருமுறை முத்தரையர் பாளையம் பகுதிக்கு அவர் நகர்வலம் வந்தபோது ஆயி உடன் மோதல் ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக ஆயி வாழ்ந்த மாளிகையை இடித்து தள்ளி தரைமட்டமாக்க கிருஷ்ண தேவராயர் உத்தரவிட்டதாகவும் அதனால் மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தில் குளத்தை ஆயி வெட்டியதாகவும் செவி வழி கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.
17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுச்சேரிக்குள் வலுவாக காலூன்றிய பிரெஞ்சியர், கடலோர பகுதியை கைப்பற்றி அங்கேயே நகரை நிர்மாணித்து வசிக்க துவங்கினர். கடலோரம் என்பதால் அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. 1850களில் இந்த பிரச்சினை பெரிதாக எதிரொலிக்க துவங்கியதும் பிரான்சில் ஆட்சி செய்த மூன்றாம் நெப்போலியனிடம் முறையிட்டனர். அப்போதைய புதுச்சேரி கவர்னர் போன்டெம்ப்ஸ் மூலமாக இந்த புகார் சென்றது.
உடனே, தனது தலைமை பொறியாளர் லாமைரெஸ்சே என்பவரை புதுச்சேரிக்கு நெப்போலியன் அனுப்பி வைத்தார். அவரோ, புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் எங்காவது நல்ல குடிநீர் கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது லாமைரெஸ்சே கண்ணில் பட்டது, ஆயி குளம். அங்கிருந்தே நகருக்குள் குடிநீர் கொண்டு வரலாம் என லாமைரெஸ்செ தீர்மானித்தார். அதன்படி, அங்கிருந்து புதுச்சேரி நகருக்கு வாய்க்கால் வெட்டப்பட்டது அந்த வாய்க்கால் வழியாக வந்த நீரை தேக்கி வைத்த இடம் தான் இப்போதைய பாரதி பூங்கா. அங்கிருந்தே நகருக்குள் வசித்த பிரெஞ்சியருக்கு தண்ணீர் விநியோகம் துவங்கியது.
புதுச்சேரியில் பிரெஞ்சியருக்கு தண்ணீர் பிரச்சினை நீங்கிய தகவலையும் லாமைரெஸ்சே பணியையும் பாராட்டி மூன்றாம் நெப்போலியனுக்கு கவர்னர் போன்டெம்ப்ஸ் கடிதம் அனுப்பினார். அதில், லாமைரெஸ்சேயை கவுரவிக்கும் வகையில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மூன்றாம் நெப்போலியனோ, முழு விவரத்தையும் கேட்டதோடு புதுச்சேரி அருகிலேயே அருமையான குளம் எப்படி உருவானது என்றும் அதன் பின்னணியையும் விசாரித்தார்.
தாசி குலத்தில் பிறந்தாலும் உயர்ந்த எண்ணத்துடன் இருந்த ஆயி குணம் அவரை கவர்ந்தது. எனவே, அவள் நினைவாகவே ஒரு நினைவு சிக்கம் எழுப்பலாமே என முடிவு செய்தார். அதன் விளைவாக, ‘ஆயி என்ற தாசிப் பெண்ணின் நல்ல மனதை கவுரவிக்கும் வகையில் அவள் நினைவாக ஒரு மண்டபம் எழுப்புங்கள்’ என உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவால் எழுந்ததே ஆயி மண்டபம்.
கிரேக்க-ரோமானிய கட்டடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் அந்த மண்டபம், பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் ஆட்சி செய்த கி.பி.1852-1870 காலத்தில் கட்டப்பட்டது. புதுச்சேரி மக்களின் குடிநீர் தேவைக்காக குளம் வெட்டிய ஆயி என்ற தாசிப் பெண்ணுக்கு  எங்கிருந்தோ வந்த பிரெஞ்சியர் கவுரவம் அளித்த நிலையில், சுதந்திரத்துக்கு பிறகு புதுச்சேரி அரசும் அந்த மண்டபத்தை அரசு சின்னமாக்கி மேலும் பெருமை படுத்தியது. புதுச்சேரி வரும் மக்களை வரவேற்றபடி, இரண்டு நூற்றாண்டுகளாக இளமை மாறாமல் ஜொலிப்புடன் வரவேற்கிறது, ஆயி மண்டபம். 

= வை.ரவீந்திரன் 

Sunday, 30 March 2014

புதுவையின் பழமை - நூல்


‘புதுவையின் பழமை என்ற புத்தகம் 
புதுச்சேரி பற்றிய நல்ல தொகுப்பு
மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்
எளிய நடையில் தகவல்களை கூறுகிறது’


திறனாய்வு விழாவில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.


உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மல்லிகை மணம் அலாதியானது அதுபோல உருவத்தில் சுருங்கி கிடந்தாலும் புதுச்சேரியின் பிரெஞ்சு மணம் தனித்துவம் நிறைந்தது.

சிறப்பு வாய்ந்த புதுவை மாநிலத்தின் அரசு சின்னமான ஆயி மண்டபத்தின் பின்னணி என்ன  ஆயி என்பது யார் அந்த மண்டபத்துக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் உள்ள தொடர்பு என்ன?

 புதுவையில் உள்ள ஆயிரம் ஆண்டு அதிசயம் புதுவையின் அடையாளமான மணக்குள விநாயகரின் அதிசயிக்க வைக்கும் கதை

புதுச்சேரி தேவாலயங்களின் பிரெஞ்சு பின்னணி அவற்றை கட்டி எழுப்பியவர்கள் யார் யார்

இந்தியாவை பிரெஞ்சு சாம்ராஜ்யமாக மாற்ற நினைத்து புயலாக புறப்பட்ட டூப்ளக்ஸ் புதுவைக்குள் மடங்கி போன கதை

அவரால் கட்டப்பட்ட கவர்னர் மாளிகையின் நூற்றாண்டுகளை கடந்த வரலாறு

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை போலவே புதுவையில் பிரெஞ்சியர் கட்டிய கோட்டை

கடலுக்குள் ஒரு கி மீ வரை அமைத்த ரயில்பாதை

நூற்றாண்டுகளை கடந்த புதுச்சேரி பள்ளிகள் அவற்றை தொடங்கியாவர்கள் வரலாறுடன்

பதுச்சேரி கல்லறை தோட்டங்களுக்கு கூட நீண்ட பழம் பெருமை உண்டு
காரைக்கால் மாகி யேனம் என பிரிந்து கிடக்கும் மாநிலத்தின ரகசியம்

இதுபோன்ற பல்வேறு அரிய தகவல் களஞ்சியம்

கிடைத்தற்கு அரிதான படங்களுடன் எளிமை நடையில் புதுவை வரலாறு
 புதுவையின் பழமை

எனது எழுத்தில் உருவான புத்தம் புதிய புத்தகம்

சூரியன் பதிப்பகம் வெளியீடு











Tuesday, 6 August 2013

ஆசிரியர் தின கவிதை.


 அன்னையின் தாலாட்டில் 
கண்ணிலோ நித்திரை
உங்களுடைய தாலாட்டில்
பதித்ததோ முத்திரை

தந்தையின் வழிகாட்டுதலில்
சந்தைக்கு பயணம்
உங்களுடைய வழிகாட்டுதலில்
வாழ்க்கைப் பயணம்

நண்பனின் அரவணைப்பில்
கண்டதோ சகோதரத்துவம்
உங்களுடைய அரவணைப்பில் 
வென்றதோ முதலிடம்

கல்லும் கலையாமல்
சிலையும் சிதறாமல்
சிற்பமாய் செதுக்கினீர்
எம்மை

கை குவித்து வணங்குகிறேன்
மாதா பிதா குரு என
ஓருருவாய் திகளும்
உம்மை.

= வை.ரவீந்திரன் 




Tuesday, 22 November 2011

குழந்தைகள் தினக் கவிதை

குழந்தைகள் கடவுளின் அன்பு பரிசு
சகலத்தையும் கற்றுத் தரும் அன்பு உரு

பேதம் பார்த்து எங்களை வெறுக்காதீர்கள்
எங்களின் எதிர்கால கனவுகளை சிதைக்காதீர்கள்
அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றாதீர்கள்
நாளைய தலைவர்களான எங்களை தடுக்காதீர்கள்& ஏனெனில்

குழந்தைகள் கடவுளின் அன்பு பரிசு
சகலத்தையும் கற்றுத் தரும் அன்பு உரு

அற்ப வெற்றிக்காக திறமைகளுக்கு திரையிடாதீர்கள்
உங்களின் அச்சத்தில் உண்மையை மறைக்காதீர்கள்
மகிழ்ச்சி என்னும் வாகனமாக எங்களை கருதாதீர்கள்
உங்களின் தவறுகளுக்கு எங்களை கண்டிக்காதீர்கள் & ஏனெனில்

குழந்தைகள் கடவுளின் அன்பு பரிசு
சகலத்தையும் கற்றுத் தரும் அன்பு உரு

நாங்கள் உங்களுடைய நம்பிக்கை; உங்களின் எதிர்காலம்
ஊழ்வினையையும் மாற்ற முடியும் எங்களால் & ஆனால்
உங்களின் உதவியின்றி எதுவும் சாத்தியமல்ல ஏனெனில்
நாங்கள் குழந்தைகள். கடவுளின் அன்பு பரிசு

= வை.ரவீந்திரன் 

Sunday, 6 November 2011

மாறிய மனம்

மாறிய மனம்
=========
= வை.ரவீந்திரன்

அப்போது எனக்கு 5 வயது இருக்கும், வீட்டில் அனைவருக்கும் நான் தான் செல்லப் பிள்ளை. செல்லப் பிள்ளை என்றாலே பாசத்தோடு தடைகளும் இருப்பது வழக்கம் தானே. போக்குவரத்து என்பதையே சிறிதும் அறிந்திராத அந்த சிறிய தெருவில் நான் இறங்குவதற்கு கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனக்கு வெளி உலகை அறிமுகம் செய்து வைத்தது வீட்டின் ஜன்னல் தான். என்னை விட உயரமாக இருந்ததால் நாற்காலி அல்லது ஏதாவது ஒரு பலகையை எடுத்து வந்து அதன் மீது நின்றபடி, ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு நிற்பது எனது வாடிக்கை. அதன் வழியாகவே, எனது வெளி உலகம் தொடங்கியது.

சுட்டெரிக்கும் நண்பகலுக்கு சற்று முந்தைய, அமைதியான முற்பகல் பொழுதை நீங்கள் கவனித்து பார்த்திருக்கிறீர்களா? நான் அனுபவித்து பார்த்திருக்கிறேன். அந்த அமைதியும் குருவிகளின் கீச்சொலிகளுமே எனது நண்பர்கள். அந்த சமயத்தில் பரவி நிற்கும் வெயிலின் அழகு மிகவும் ரம்மியமாக இருக்கும்.

சற்று வளர்ந்த பிறகு, தெருவில் செல்லவும் மற்ற குழந்தைகளுடன் அளவளாவவும் எனக்கு சிறிது சுதந்திரம் கிடைத்தது. வெளியூர்களில் இருந்து ஊருக்குள் வந்து பொருட்களை விற்பனை செய்யும் ஒவ்வொருத்தரையும் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஏக்கம் முளை விடும். ஊர் ஊராக சுற்றி திரிவதை என்னை அறியாமலேயே ஆர்வத்துடன் விரும்பத் தொடங்கினேன்.

பின்னிரவு நேரத்தில் குறி சொன்னதற்காக காலை நேரத்தில் மீண்டும் வந்து காசு கேட்கும் ராக்கோடங்கி, குரங்காட்டி, சைக்கிளில் துணிகளை ஏற்றி வந்து விற்பவர், பாத்திர வண்டிக்காரர், எண்ணெய் வியாபாரி, முன்னிரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பொருட்கள் விற்பனை செய்யும் ஏலக்காரர் என ஒவ்வொருவரும் எனது ஏக்கப் பயிருக்கு தண்ணீர் விட்டுச் சென்றனர்.

அன்று, இளவேனில் பருவத்தின் காலைப் பொழுது. தெரு முனையில் சிறுவர்களின் ஆரவாரமும் சந்தோஷ கூச்சலும் என்னை வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்தன. கூச்சல் எழுந்த திசையை நோக்கியபோது வியப்பால் எனது விழிகள் விரிந்தன.

ஆம். கரிய நிற குன்று போல ஆடி அசைந்து வந்தது ஒரு யானை. யானைப் பாகனை சுமந்து கொண்டு, தும்பிக்கையை அங்கும் இங்கும் ஆட்டியபடி வந்த அந்த சைவப் புதிரை பார்க்க சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கூடி விட்டனர். யானையின் பின்னாலேயே ஒரு மாட்டு வண்டியில் தென்னை ஓலை, மரக் கிளைகள் என யானைக்கு தேவையான தீவனங்கள் வந்து கொண்டிருந்தன.

கடைகளில் தும்பிக்கையை நீட்டி காசுகளை பெற்றுக் கொண்டிருந்த யானை, தவறாமல் அவற்றை பாகனிடம் தந்தது. அதற்காக மேல் நோக்கி தும்பிக்கையை தூக்கும்போது தந்தமும், யானையின் பெரிய உதடுகளுடன் கூடிய வாயும் என்னை ஆச்சரியப்படுத்தின.

ஒரு சில சிறுவர்களை யானை மீது ஏற்றி சில அடி தூரம் யானைப் பாகன் கூட்டிச் சென்றான். அச்சத்தால் வீறிட்டு அலறிய சிறுவர்களின் முகத்தில் யானையின் தும்பிக்கையில் தண்ணீர் ஊற்றி தெளிக்கச் செய்தான்.

பக்கத்து வீட்டு பொன்னம்மா பாட்டிக்கு பெரிய உருவம். உட்கார்ந்த இடத்தில் இருந்து அவரால் எழுந்திருக்க முடியாது. ஆனால், சிறிய மலைக் குன்று போல இருக்கும் இந்த யானை மட்டும் எப்படி தனது பருத்த உடலை சுமந்து கொண்டு அசைந்தாடி நடக்கிறது. எனக்குள் ஆச்சர்யம். தும்பிக்கை, தந்தம், வால், அதில் இருக்கும் முடி, பரந்த நெற்றி, தூண்களை போன்ற கால்கள் என அனைத்துமே வியப்பை ஆழ்த்தின.

இந்த உலகில் உள்ளவைகளில் எந்த நேரம் பார்த்தாலும் வியப்பை தருபவைகளில் யானையும் ஒன்று அல்லவா?

எங்கள் ஊர் பெரிய கோவிலில் தான் அன்றைய இரவு யானையும் பாகன் உள்ளிட்டோரும் தங்கினார்கள். யானையை பார்த்த வியப்பு விலகாமலேயே இருந்த நானும் வீட்டை மறந்து கோவிலிலேயே தங்கி விட்டேன். என்னைப் போலவே வேறு சில சிறுவர்களும் இருந்தனர். அண்ணன் வந்து அழைத்த பிறகே வீடு திரும்பினேன், ஏக்கத்துடன் யானையை திரும்பி திரும்பி பார்த்தபடி.

அன்றைய தினம் முழுவதும் யானை பற்றிய பேச்சே ஊர் முழுவதும் நிலவியது. ஆனால், எனது எண்ணம் மட்டும் பாகனை சுற்றியே சிறகடித்தது. யானைப் பாகனாகி விட்டால் ஊரை சுற்றி வரலாமே? பெரியவனானதும் யானைப் பாகனாக வேண்டும் என்ற உறுதியுடனேயே தூங்கிப் போனேன்.

நாட்கள் சில கழிந்தன. கருப்பு நிற உருவம் ஒன்றை கையில் பிடித்தபடி ஒருவன் வந்து கொண்டிருந்தான். தட்டையான கால்களில் கூரிய நகங்களுடன் உருட்டி விழித்தபடி காணப்பட்ட அது, ஒரு கரடி. கரடியை அழைத்து வந்து வித்தை காட்டுபவர் யாராவது அவ்வப்போது எங்கள் ஊர் வழியாக செல்வது உண்டு.

கரடிக்கு பின்னாலும் ஒரு சிறிய கும்பல் வந்து கொண்டு இருந்தது. உடல் முழுவதும் நீண்ட முடிகளுடன் காணப்பட்ட கரடியை பார்த்த மிரட்சியா அல்லது பயமா என தெரியவில்லை. ஒரு நாய், தலையை சிலிர்த்தபடி எழுந்தாலும் குரைப்பதா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டு இருந்தது.

எங்கள் வீட்டு அருகே வந்த கரடிக்காரன், மலைப் பகுதியில் இருந்து வருவதாகவும் தென்காசி நகருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அம்மாவிடம் கூறினான். சாப்பிட ஏதாவது தருமாறு கேட்டான். காலையில் சூடாக செய்த இட்லிகளில் சிலவற்றை அம்மா கொடுத்தார்.

கரடிக்காரன் கைகளில் ஏராளமான கருப்பு நிற கயிறுகள் இருந்தன. ஒரு சிலர் அந்த கயிறை காசு கொடுத்து வாங்கிச் சென்றார்கள். அவர்களிடம் கொடுக்கும் முன் கரடியிடம் கயிறை நீட்டினான், அந்த கரடிக்காரன். உடனே, முன்னங்கால்களில் வலது காலை உயர்த்தி அந்த கயிறு மீது விசிறுவது போல கரடி ஆட்டியது. இப்படி, கரடியால் ஆசிர்வதிக்கப்பட்ட கயிறை கரடிக்காரன் காசுக்கு விற்றான். அந்த கயிறை கட்டினால் பேய், பிசாசு பயம் இருக்காது என்றார்கள்.

இப்போது கரடிக்காரனும் எனது மனதுக்குள் இடம் பிடித்து விட்டான். அவனைப் போலாகி விட்டால் ஊர் ஊராக சுற்றித் திரியலாமே?

ராக்கோடாங்கி, குரங்காட்டி, பாத்திரக்காரன், துணி விற்பவன், ஏலக்காரன், யானைப் பாகன், கரடிக்காரன் இப்படி ஊர் சுற்றிகள் அனைவருமே எனது மனதை சுற்றி சுற்றி வந்தனர். படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறேன்.

ஏதோ தொலைவில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘ஏங்க, இன்னும் என்ன தூக்கம். சீக்கிரம் எழுந்திருங்க’ நேரம் செல்ல செல்ல செவியின் அருகில் அந்த குரல் கேட்கத் தொடங்கியது. அட. என் மனைவி ராதா. அப்போ. இவ்வளவு நேரம் நான் கண்டது எல்லாம் கனவா?

‘ஏங்க, காலையில கோயம்புத்தூர் டிரயின புடிக்கணும்னு சொல்லிட்டு இப்படி தூங்கிக்கிட்டு இருந்தா எப்படி? எந்திரிங்க. வென்னீர், டிபன் எல்லாம் ரெடி. கிளம்புங்க!’ ராதா என்னை விரட்டினாள்.

பிரபலமான பெரிய நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறேன். இன்று மாலை கோவையில் ஒருவரை சந்திக்க வேண்டும். அப்படியே, திருச்சி சென்று அங்கு ஒரு கம்பெனியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அடுத்த வாரம் டெல்லி செல்வதற்காக கம்பெனியிலேயே விமான டிக்கெட் எடுத்து வைத்துள்ளனர்.

ச்சே! ஓய்வே இல்லாமல் காலில் சக்கரத்தை கட்டியபடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த பொழப்பு என்ன பொழப்பு? மனைவி, குழந்தைகளுடன் விடுமுறை தினத்தை மகிழ்ச்சியாக கழிக்க முடிகிறதா? அடுத்தகட்ட ஊர் சுற்றும் பயணத் திட்டத்தை மனதுக்குள் சபித்தபடியே குளியறை நோக்கி புறப்பட்டேன்.

Wednesday, 31 August 2011

சந்தைக்கு வந்த சித்தாளு

மாநகரின் மையப்பகுதி
பன்னாட்டு வங்கிகள்
கணிப்பொறி அலுவலகங்கள் & என
கர்ப்பம் தரித்து நிற்கிறது
பிரமாண்ட கட்டிடம்

அதோ தெரியும்
அஞ்சாவது மாடியில் தான்
வேலை பார்த்தேன்
அறிமுகம் செய்தாள் & மகனுக்கு
சித்தாளு, பொன்னாத்தா!

இதோ ஒரு கூண்டு போல
இருக்குதல்லவா-?
இங்கே தான் & கட்டுமானம்
முடியும் வரையிலும்
தங்கியிருந்தோம்

விண்ணை முட்டி
பிரமாண்டமாக நிற்கும்
கட்டிடத்தை
அங்குலம் அங்குலமாக
அறிமுகம் செய்தாள்,

ஏய், இந்தா, தள்ளிப் போ
காவல்காரரின் அதிகாரக் குரல்
கட்டிடத்தின் வெளி வாயிலில்
இருந்து வீதிக்கு துரத்தியது
சித்தாளு பொன்னாத்தாவை

கணிப்பொறி அலுவலக
பெயர் பலகை மின்னுகிறதே?
அங்கிருந்து தானே
கீழே விழுந்து இறந்தாள்
கல் சுமந்து வந்த கண்ணம்மா

நினைவலைகளின் எச்சம்
கண்களை திரைபோட்டு
மறைக்க
திரும்பி பார்த்தபடியே
சென்றாள், பொன்னாத்தா,

= வை.ரவீந்திரன்