Saturday 22 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 7

புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் ஒரு சட்டமன்ற தேர்தலையும் நேரில் பார்க்கும் அனுபவமும் எனக்கு வாய்ந்தது. தேர்தல் என்றாலே புதுச்சேரி மக்களிடம் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. என்னவென்று பார்த்தபோது, உண்மை முகத்தில் அறைந்தது. வேட்பாளர்கள் வாரி வழங்கும் பரிசு பொருட்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு வேனில் வந்து, தெரு முனைகளில் நின்றபடி வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஓட்டுக்கு ஒரு டோக்கன் வீதம் விநியோகித்தனர். அந்த டோக்கனை பெற ரேஷன் கார்டுடன் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடந்தனர். ரேஷன் கார்டு எதற்கு என குழப்பத்தில் இருந்தபோது, அவர்களிடம் டோக்கன் வழங்கியதை ரேஷன் கார்டிலும் பதிவு செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அரசு ஆவணமான ரேஷன் அட்டையில் அரசியல் கட்சி வேட்பாளரின் பிரதிநிதி முத்திரை குத்துகிறார். பல்வேறு தேர்தல்களிலும் வெவ்வேறு முறைகேடுகளை பார்த்த எனக்கு இது புது மாதிரியாக இருந்தது. நீங்கள் டோக்கன் வாங்கவில்லையா என பக்கத்து வீட்டு பெண்மணி கேட்டபோது கூடுதல் அதிர்ச்சி.

ஏம்மா… இது ஓட்டுக்காக அவர்கள் தரும் லஞ்சம், அதை நாம் வாங்கலாமா..? என அறிவுரை கூறும் எண்ணத்தோடு ஆரம்பித்தால், அப்போ, இலவச மிக்சி, கிரைண்டர் மட்டும் வாங்கலாமா என எதிர்க்கேள்வி கேட்டார். அது, ரேஷன் கடை மூலமாக அரசாங்கமே இலவசமாக தரும் பொருள், இது, நம்மிடம் ஓட்டு வாங்குவதற்காக வேட்பாளர் தனது சொந்த பணத்தில் தரும் பொருள் என விளக்கினால், அதுவும் ரேஷன் கார்டுல தான் தர்றாங்க…? என கேட்டார். எவ்வளவோ பேசிப்பார்த்தும் கடைசி வரை அவருக்கு இரண்டுக்கும் வேறுபாடு புரியவில்லை. அந்த அளவுக்கு மக்களை அரசியல்வாதிகள் கெடுத்து வைத்திருக்கின்றனர்.

பின்னர், அந்த டோக்கனை காண்பித்து குக்கர், கடாய், கேஸ் ஸ்டவ், ஹாட் பாக்ஸ் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக வாங்கி வந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொடுத்த பொருட்களை பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டிலேயே வாங்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த தொகுதியில் வேறு விதமான பொருட்கள். பெரும் பண முதலைகள் போட்டியிடும் தொகுதி மக்கள் அந்த வகையில் அதிர்ஷ்டசாலிகள். மற்ற தொகுதி மக்கள், அது பற்றி பொறாமையுடன் பேசிக் கொள்வார்கள்.

நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, லாஸ்பேட்டை, இந்திரா நகர் போன்ற நகரில் உள்ள சில தொகுதிகளும் புறநகரில் உள்ள சில தொகுதிகளும் கொடுத்த வைத்த தொகுதிகள். இவர்களை இன்னொரு விதமாகவும் அரசியல்வாதிகள் கெடுத்து வைத்திருக்கின்றனர்….

(அனுபவம் இனிக்கும்…)

No comments: