Sunday 16 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 5

புதுச்சேரி மக்களின் வாழ்வியல் மற்றும் கொண்டாட்டம் நிறைந்த வாழ்க்கை பற்றி கூற ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. தமிழகத்தின் சிறு நகரங்களில் வாழும் மக்களை போலவே மிகவும் அன்பானவர்கள். ஒரு குடியிருப்பு பகுதியை எடுத்துக் கொண்டால் அங்குள்ள அனைவரை பற்றிய தகவல்களையும் பெரும்பாலானோர் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். புதிதாக வந்தவர்களை கூட….. சிலருக்கு பெரும்பாலான நகரவாசிகளைப் பற்றிய தகவல்கள் அத்துப்படி… அந்த விஷயத்தில் கிராமம் போன்ற நகரம் அது.

வீதியில் ஏதாவது பிரச்சினை என்றால் கை கொடுப்பது, விபத்து என்றால் வேடிக்கை பார்க்காமல் ஓடி வந்து உதவுவது என ஒவ்வான்றிலும் உதவும் எண்ணம் கொண்ட நல்ல மனசுக்காரர்கள். கொண்டாட்டத்திலும் குறைவு கிடையாது. சனி, ஞாயிறு நிச்சயம் ஓய்வு. பெரும்பாலான வார இறுதிகளில் கடற்கரையில் ஏதேனும் ஒரு விழா களை கட்டும். சில தினங்களில் காவல்துறையின் பாண்டு வாத்திய குழுவினரே கடற்கரையில் பாடல்களை இசைத்து மக்களை மகிழ்விப்பதுண்டு.

பொங்கல், தீபாவளி நாட்களில் ஒரு வார கொண்டாட்டம். குறைந்தது நான்கு நாட்களாவது எந்த கடைகளுமே இருக்காது. தீபாவளி முன் தினம் நள்ளிரவிலேயே மட்டன் கடைகள் களை கட்டும். அதிகாலையில் வெறிச்சோடி விடும்.

ஞாயிறுகளில் ஜொலிக்கும் சண்டே பஜார். விழா மற்றும் பள்ளி திறப்பு போன்ற காலங்களில் திண்டிவனம், கடலூர் வரையிலான பகுதிகளை சேர்ந்த ஏழை, நடுத்தர மக்களின் அட்சய பாத்திரம், இந்த சந்தை. மிகவும் அரிதான பழைய புத்தகங்கள் கூட சண்டே பஜாரில் கிடைக்கும்.

வலிந்து வேலை பார்ப்பதோ, வேலையை திணித்துக் கொள்வதோ கிடையாது என்பதால் ரிலாக்ஸ் மனதுக்கு சொந்தக்காரர்கள். காது குத்தில் தொடங்கி, திருமணம், இறுதி அஞ்சலி வரை டிஜிடல் பேனர்களுக்கு பஞ்சமில்லை. அரசியல் நிகழ்வு என்றால் கேட்கவே வேண்டாம். ஆகஸ்ட்டில் ரங்கசாமி பிறந்த நாளில் நகரமே பேனர்களால் களை கட்டும். ராம்போ சில்வஸ்டர் ஸ்டாலன் தொடங்கி பாகுபலி பிரபாஸ் வரை விதம் விதமான கெட்டப்களில் ரங்கசாமி சிரிப்பது கண்கொள்ளா காட்சி. புதுச்சேரி நகரை சுற்றி வந்தால் நல்ல பொழுதுபோக்கு. ரங்கசாமியே அதிகாலை வேளையில் பைக்கில் வலம் வந்து அவற்றை ரசிப்பார் என்பது கொசுறு தகவல்.



சுவாசமே, இதயமே, உயிரே இப்படியாக ஒற்றைச் சொல்லிலேயே பேனர்களில் கதறடிப்பார்கள். இது, அனைத்து கட்சியினருக்குமே பொதுவான விதி. உள்ளூர் கேபிள் சேனல்களும் அப்படித்தான். கிட்டத்தட்ட 100 சேனல்களை எட்டும். சினிமா பாடல்கள் ஒலிக்க பிறந்தநாள், திருமண நாள் விளம்பரங்கள் களை கட்டும். ஒரு வயது குழந்தை பிறந்த நாளுக்கு ‘யாரென்று தெரிகிறதா…இவன் வீரனென்று புரிகிறதா’ என்ற பாடல் ஒலிக்கும். இந்த அட்ராசிட்டிகளை வேடிக்கை பார்ப்பதே ரசனையான அனுபவம். வீட்டில் அதற்காகவே, டிஷ் கூட பொருத்தாமல் கேபிள் இணைப்பு வைத்திருந்தேன்.

அந்த சேனல்களில் பெரும்பாலானவற்றில் செய்திகளும் ஒளிபரப்பாகும். புதுச்சேரியை தாண்டிய வேறு செய்திகளில் மக்களுக்கு அதிக அளவு ஆர்வம் இல்லை என்பதால் அந்த சேனல்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகம்.

(அனுபவங்கள் இனிக்கும்)

No comments: