Monday 10 October 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 4

புதுச்சேரிக்குள் ஏராளமான சித்தர் சமாதிகள் இருக்கின்றன. அதில் முதலாவது சித்தர் மணக்குள விநாயகர் கோயிலுக்குள் உள்ள தொள்ளைக் காது சித்தர். பிரெஞ்சியரின் மத குரோதத்தை எதிர்கொண்டவர். 300 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மணக்குள விநாயகர் துணையாக இருந்து சில சித்து வேலைகளை பிரெஞ்சியருக்கு காட்டியதாக வரலாறு. கடலுக்குள் கட்டி வீசப்பட்ட மணக்குள விநாயகர் மீண்டும் எழுந்தருளி ஆச்சரியம் ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள்.
தட்டாஞ்சாவடியில், கம்பளி சாமியார் சமாதி மற்றும் கோயில் இருக்கிறது. தினகரன், தினமலர் பத்திரிகை அலுவலகங்கள் அருகிலேயே இருக்கும் இந்த கோயிலின் நுழைவு வாயிலில் பதஞ்சலி முனிவரின் பிரமாண்டமான சிலை அனைவரையும் கவரும். சித்தர் சமாதியின் மீதுள்ள சிவலிங்கமும் சித்தர் அமர்ந்ததாக கருதப்படும் இருக்கையும் தெய்வீக அனுபவத்தை தருபவை.
விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் வில்லியனூர் ரயில்வே கேட் அருகில் உள்ள சித்தரின் சமாதி, அக்கா சாமி மடம். இப்படி புதுச்சேரி முழுவதுமே சித்தர்களின் சமாதிகளும் ஆலயங்களும் இருப்பதால் இயற்கையாகவே அந்த மண்ணில் ஒரு சாந்தமும், அறிவுச் சுடரும் புதைந்து கிடக்கிறதோ என்னவோ? முதல்வராக இருந்த ரங்கசாமி, தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு தனது வீட்டு அருகிலேயே (ஜிப்மர் எதிர் பகுதியில்) கோயில் கட்டி இருக்கிறார்.


சென்னையில் இருந்து ஈசிஆர் வழியாக சென்றால் புதுச்சேரியின் நுழைவு வாயிலிலேயே கருவடிக் குப்பத்தில் சுவாமி சித்தானந்தர் என்ற சித்தரின் சமாதி உள்ளது. குரு ஸ்தலமாக கருதப்படும் இங்கு வியாழக்கிழமைகளில் புதுச்சேரி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை பார்க்க முடியும். சித்தரின் சமாதி மீதுள்ள சிவனுக்கு சிவராத்திரி நாளில் சலங்கை பூஜையுடன் விழா நடைபெறும். இந்த சித்தர் கோவிலிலும் சுற்றியிருந்த குயில் தோப்பிலும் தான் மகாகவி பாரதியார் அமர்ந்திருந்து ஏராளமான கவிதைகளை எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


கருவடிகுப்பம் சித்தானந்தர் கோயில் அருகிலேயே ஒரு மயானம் இருக்கிறது. மின் மயானமாக மாற்றப்பட்ட இங்கு தான், நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதி உள்ளது. ஆண்டுதோறும் நாடக, திரைப்பட கலைஞர்கள் ஊர்வலமாக சென்று இங்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த மயானத்தில் தான் எனது தந்தையின் இறுதி சடங்குகளும் நடைபெற்றது. மண்ணுலகில் 73 ஆண்டுகள் வாழ்ந்த அவரது ஜீவன், இந்த சித்தர்களின் பூமியில் தான் முக்தி பெற்றது.

(அனுபவங்கள் இனிக்கும்)

No comments: