Sunday 2 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 7

"இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை.. நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை... வேருக்கு நீர் ஊற்றி உரமிட்ட தலைவா... உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை..." திருவிளையாடல் படத்தில் இப்படி பாடியதும் சிவ பெருமானே விறகு வெட்டியாக வந்து மதுரையின் மானத்தை காப்பாற்றுவாரே. சிவனையே அழைத்த பாட பத்திரர் தான், டிஆர் மகாலிங்கம்.


கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கால சினிமா, நாடகம், இசை வாழ்க்கைக்கு சொந்தக்காரரான அவர், எம்கே தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, பியு சின்னப்பா காலத்து ஆள். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நன்றாக பாடவும் தெரிந்திருந்தால் மட்டுமே ஹீரோவாக முடியும் என்ற நிலைமை நீடித்திருந்த 1940களில் திரைத் துறைக்கு வந்தவர். 


சினிமாவில் பின்னணி குரல் கொடுத்து பிரபலமானவர் திருச்சி லோகநாதன் என்றால் திரையில் தோன்றி பாடல்களால் மனதை கவர்ந்து ஹீரோவாக பத்தாண்டுகளுக்கு மேல் புகழ் நாட்டியவர் டிஆர் மகாலிங்கம். தியாகராஜ பாகவதருக்கு இணையாக கர்நாடக இசை அறிந்த இவர், கமல், ஜெமினி வரிசையில் முந்தைய தலைமுறையின் ஆண் அழகன். 


எஸ்வி சுப்பையா தொடங்கி எம்எஸ் விஸ்வநாதன் வரை பாடல்களை பாடிய டிஆர் மகாலிங்கம் ஹீரோவாக அறிமுகமான படம், 1940ல் வெளியான பூலோக ரம்பை.  இவருக்கு புகழ் வெளிச்சம் பாய்ச்சியது ஸ்ரீவள்ளி (1945) படம். அதில் நாயகன் முருக கடவுளாக நடித்தவர், டிஆர் மகாலிங்கம். மாலையிட்ட மங்கை, நாம் இருவர், வேதாள உலகம், பவளக்கொடி, ஞான சவுந்தரி, ஆடவந்த தெய்வம் என அக்கால ஹிட் படங்களின் நாயகன். 



டிஆர் மகாலிங்கம் பாடிய "செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்..", "ஆடை கட்டி வந்த நிலவோ..." பாடல்கள் எல்லாம் என்றும் தித்திக்கும் ரகம்.

சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று நான்காண்டுகள் நாடகங்களை நடத்தி வந்த டிஆர் மகாலிங்கத்தை கண்ணதாசன் திரும்ப அழைத்து வந்து நடிக்க வைத்தபோது அப்போதும் நாயகனாக ஹிட் கொடுத்தவர் டிஆர் மகாலிங்கம்.


பாடகர், நடிகர் என இருந்தவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததால் நஷ்டமடைந்து சினிமாவை விலக்கி வைக்க நேரிட்டது. குடும்பப் பின்னணி கதைகளுடன் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் 1960களில் வரவேற்பை பெறத் துவங்கியதும் நாயகனில் இருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். பாடவும் நடிக்கவும் வாய்ப்பு உள்ள படங்களை ஒப்புக் கொண்டார். அதில் ஒன்று தான் திருவிளையாடல்.



இதுபோல அகத்தியர் (1972)படத்தில் சீர்காழி கோவிந்த ராஜனுடன் இணைந்து நாரதர் வேடத்தில் நடித்திருப்பார். இருவரும் இணைந்து பாடும் இசையாய் செந்தமிழாய் இருப்பவனே... பாடலும் மலை நின்ற திருக்குமரா, மால் மருகா பாடலும் இன்றளவும் முணுமுணுக்க வைக்கும் ரகம்.

திருநீலகண்டர், திருமலை தெய்வம் மற்றும் ராஜராஜ சோழன் படத்தில் கருவூர் தேவர் என நடித்த டிஆர் மகாலிங்கம், சிவாஜி கணேசனுடன் "தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்.." பாடலை பாடி இருக்கிறார். நடிகர் திலகம் பாடிய ஒரே பாடல் இதுதான். 

டி.ஆர். மகாலிங்கத்தின் பாடல்களை கவனித்தால் ஒன்று தெரியும். செந்தமிழ் தேன் மொழியாள் தொடங்கி தென்றலோடு உடன் பிறந்தாள் வரை பலவும் தமிழின் புகழ் பாடல்கள் தான். அண்ணா, கலைஞர், காமராஜருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த  இவர், கவலை இல்லா மனிதன் படத்தில் பாடிய பாடல் "திராவிட பொன் நாடே, எங்கள் திராவிட பொன் நாடே..."



உச்சஸ்தாயில் பாடும் திறமை கொண்ட மகாலிங்கம், படங்களில் நடித்த போதிலும் மேடை நாடகங்கள் போடுவதிலும் பிசியாகவே இருந்தார். 53வது வயதில் இறக்கும்போது கூட அவரது கைவசம் 70க்கும் மேற்பட்ட நாடக ஒப்பந்தங்கள் இருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: