Tuesday, 1 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 10

= வை.ரவீந்திரன். 

தமிழக முதல் அமைச்சர் பதவியை 1963ம் ஆண்டு காமராஜர் ராஜினாமா செய்து விட்டு கட்சிப் பணியாற்ற தீர்மானித்த சில மாதங்களில் 1964 மே 27ம் தேதி நேரு மறைந்தார். அதனால், தேசிய அரசியலில் காமராஜர் கவனம் செலுத்த நேரிட்டது. இதற்கிடையே, திமுகவில் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், அன்பழகன் என முதல்கட்ட தலைவர்கள் தொடங்கி கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் வரை மிகத் திறமையான பேச்சாளர்களாக வலம் வந்தனர்.

‘வெங்கட்ராமன் அண்ணாச்சி, வெங்காய விலை என்னாச்சி’, ‘பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி’, ‘அரியலூர் அழகேசா, அமைச்சர் பதவி ஒரு கேடா’ = என தமிழில் ரைமிங் வார்த்தைகளை தொடங்கி வைத்தது திமுக தான். 



அண்ணாவின் அடுக்கு மொழியில் கலைஞரின் கன்னித் தமிழில், நாவலரின் நாவன்மையில், எம்ஜிஆரின் திரைப்பட வழி கொள்கை பிரச்சாரத்தில் திமுக வலுப்பெறத் தொடங்கியது. இப்படி ஒரு சூழ்நிலையில், 1964ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய அளவில் திமுக வெற்றி வாகை சூடியது.

இந்த நிலையில், 1965ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் இந்தி மொழியே ஆட்சி மொழியாக இருக்கும் என்ற மத்திய அரசின் அறிவிப்புல் இந்தி பேசா மாநிலங்கள் கொந்தளிக்க தொடங்கின. இந்தி பேசாத மாநிலங்களில் கட்டாயமாக இந்தி கற்கும் விதத்தில் மும்மொழி கொள்கை திணிக்கப்பட்டது. கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முன்னிலையில் நின்றது. அந்த போராட்டத்தை திமுக முன்னெடுத்துச் சென்றது. 



1965ம் ஆண்டு குடியரசு தினத்தன்று தமிழகத்தில் பரவலாக நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் போலீஸ் தடியடியில் சுமார் 70 பேர் பலியாகினர். இதையடுத்து, இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என மத்திய அரசு சார்பாக உறுதி அளிக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு உணர்வு கனன்று கொண்டு இருந்த காலகட்டத்திலேயே தமிழகத்தில் 1967ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் காலம் உதிக்க தொடங்கியது.

(நினைவுகள் சுழலும்)

Monday, 29 February 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 9

= வை.ரவீந்திரன்.

தமிழகத்தில் 1962ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட தொடங்கியது. இதை அறிந்த காமராஜர், கட்சியை வளர்ப்பது அவசியம் என அறிந்தார். அதனால், உதயமானது ‘கே பிளான்’. அதாவது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும். 

அந்த திட்டத்தை அறிவித்ததோடு நிற்காமல், முதல் ஆளாக தனது முதல்வர் பதவியை 1963 காந்தி ஜெயந்தி அன்று ராஜினாமா செய்தார். காமராஜரை பின்பற்றி 6 மத்திய அமைச்சர்களும், 6 மாநில முதல் அமைச்சர்களும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னாளில் பிரதமர் பதவிக்கு வந்த லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

தமிழகத்தில் முதல்வர் பதவிக்காக 10 ஆண்டுக்கு முன் தன்னை தீவிரமாக எதிர்த்த பக்தவத்சலத்தையே முதல்வர் பதவியில் அமர்த்தினார் காமராஜர். 1963ம் ஆண்டு அக்.2ம் தேதி அன்று காந்தி பிறந்த தினத்தில் முதல்வர் பதவியேற்றார் பக்தவத்சலம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடைசி முதல்வர் என்ற பெயர் தனக்கு கிடைக்கும் என்று பக்தவத்சலம் அப்போது அறிந்திருக்கவில்லை.  


அவர் பொறுப்பேற்ற பிறகு, தமிழக அரசியல் வரலாறு மெதுவாக மாறத் தொடங்கியது. சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் மனம் நோகாமல் கருத்து சொல்வதில் பக்தவத்சலம் வல்லவர். ராஜாஜி கூட, அவரை பதிலளிக்குமாறு கூறுவது உண்டு. ஆனால், அவரது அரசின் நிர்வாக குறைபாடு, விலைவாசி உயர்வு, இந்தி திணிப்பு என காங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் ஆரம்பமானது.

போராட்ட களங்களில் முன்னிலை, இந்தி எதிர்ப்பு போராட்டம், தனித்துவமான தமிழ் நடை, மேடைச் சொற்பொழிவு என மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மனதிலும் திமுக விசுவரூபம் எடுக்கத் தொடங்கியது.

(நினைவுகள் சுழலும்)

Friday, 26 February 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 8


= வை.ரவீந்திரன்.

சென்னை மாகாணத்தில் 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, ‘1961ம் வருடத்திய இரட்டை வாக்குரிமை தொகுதிகள் கலைப்பு சட்டத்தின்’ கீழ் இரட்டை உறுப்பினர் தொகுதிகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. அதே நேரத்தில், தலித் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் அதே பிரதிநிதித்துவம் தொடர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 167ல் இருந்து 205 ஆக உயர்த்தப்பட்டது. அவற்றில் தனி தொகுதிகள் அடையாளம் காட்டப்பட்டன.  

இந்த தேர்தலில் காமராஜர் தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனியாக களம் இறங்கியது. இந்த தேர்தலிலும் காமராஜரை ஆதரித்து பெரியார் பிரச்சாரம் செய்தார். காமராஜரை தனது வாரிசு என்றும் அறிவித்தார்.

மற்றொரு புறம், திமுகவில் சர்வாதிகாரம் மேலோங்குவதாக கூறி கட்சியில் இருந்து ஈவிகே சம்பத் பிரிந்து சென்றார். அவர் தொடங்கிய தமிழ் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே நேரத்தில் அண்ணா தலைமையில் இரண்டாவது தேர்தலை திமுக சந்திக்க தயாரானது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி அங்கீகாரத்தை பெற்றதோடு கட்சிக்கு நிரந்தர சின்னமாக உதயசூரியன் சின்னத்தையும் திமுக பெற்றிருந்தது. 1957ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் என்பதாலேயே அந்த சின்னத்தை திமுக விரும்பி தேர்வு செய்தது.

10 ஆண்டுகளுக்கு முன் 1952ம் ஆண்டு குலக்கல்வி திட்டத்தை அறிமுகம் செய்ததோடு திமுகவை ஜென்ம விரோதியாக கருதிய ராஜாஜி, தனது சுதந்திரா கட்சியை இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். அந்த சமயத்தில் காங்கிரஸை தமிழகத்தில் அழித்து ஒழிக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்த ராஜாஜி, ‘‘தங்களை வகுப்புவாத கட்சி என வெளிப்படையாக கூறிக் கொள்ளும் கட்சிகளை விட மிக அதிகமான அளவில் வகுப்புவாத கொள்கைகளை கொண்ட கட்சி காங்கிரஸ்’ என கடுமையாக விமர்சித்தார்.  



திரையுலக பிரபலங்கள் நிறைந்த கட்சியாக திமுக இருந்தது. திரைப்படங்களில் திமுக கொள்கைகளை பிரபலப்படுத்தியதோடு கட்சி மேடைகளிலும் உரையாற்றி வந்த புரட்சி தலைவர் எம்ஜிஆர், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் போன்றோர் திமுகவுக்காக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக எஸ்எஸ்ஆர் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாமல் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனது ஆதரவை ஈவிகே சம்பத் கட்சிக்கு அளித்தார். 


 
1962ம் ஆண்டு நடைபெற்ற 3வது சட்டப்பேரவை தேர்தல் முடிவில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தார் காமராஜர். எனினும், முந்தைய தேர்தலை விட 12 இடங்கள் குறைவாக 139 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. மேலும்,  1962ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பெற்ற இந்த வெற்றிதான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த இறுதி வெற்றி. அதன்பிறகு 55 ஆண்டுகளாகியும் மீண்டும் தமிழக அரியணையை காங்கிரஸ் கைப்பற்றவில்லை.

முந்தைய 1957ம் ஆண்டு தேர்தலில் 13 இடங்களை பெற்றிருந்த திமுக, 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 50 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், கட்சித் தலைவரான அண்ணா, தனது சொந்த தொகுதியான காஞ்சிபுரத்தில் தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி தலைவராக நாவலர் நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி துணைத் தலைவரானார் கலைஞர் கருணாநிதி.

(நினைவுகள் சுழலும்...)

Thursday, 25 February 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 7

= வை.ரவீந்திரன். 

ஒரு சின்னதாக ‘கோட்டை’யை பற்றிய ரீவைண்ட் பிளஸ் அலசல். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ‘கோட்டை’யை பிடிப்பது தான் கனவாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழக ஆட்சி நிர்வாகத்துடன் இரண்டற கலந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அது தனிக்கதை. ஆனால், ஆரம்ப காலங்களில் புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக சட்டப்பேரவை (சென்னை மாகாணம்) கூட்டம் நடைபெற்றது இல்லை.




1935ம் ஆண்டில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டப்பேரவையாக சென்னை மாகாணத்தில் அமைவதற்கு முன்பு, 1920ல் மேலவை மட்டும் கொண்ட சென்னை மாகாண சட்டப்பேரவையை ஆங்கிலேயர்கள் அமைத்திருந்தனர். அதன் முதல் கூட்டம் 1921ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கவுன்சிலர் அறைகளில் நடைபெற்றது. 1937 வரை இங்கு தான் கூட்டங்கள் நடைபெற்றன.

1935ம் ஆண்டில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது.
இதனால், 1937 முதல் 1938 வரை சென்னை சேப்பாக்கத்தில் சென்னை பல்கலைக் கழகத்தில் உள்ள செனட் இல்லம், 1938 முதல் 1939 வரை அரசினர் தோட்டத்தில் (கலைஞர் ஆட்சியில் கட்டிய புதிய சட்டசபை வளாகம் என்னும் பல்நோக்கு மருத்துவமனை) உள்ள ராஜாஜி மண்டபம் ஆகியவற்றில் சட்டப்பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்பிறகு, 1946ல் புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப்பேரவை திரும்பியது.

ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் சட்டப்பேரவையில் 375 பேர் தேர்வு செய்யப்பட்டதால் இடப்பற்றாக்குறை காரணமாக, 1952ம் ஆண்டு முதல் அரசினர் தோட்டத்தினுள் உள்ள கலைவாணர் அரங்கத்தில் (வாலாஜா சாலையில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம்) சட்டப்பேரவை கூடியது. 1956ம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் முதலாவது சட்டப்பேரவை கூட்டம் அனைத்தும் கலைவாணர் அரங்கில் தான் நடைபெற்றது. 



மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, கேரளா, ஆந்திரா, கர்நாகடக மாநிலங்கள் பிரிந்து சென்னை மாகாண உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தது. இதனால், 1957ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்னை மாகாண (தமிழக) சட்டப்பேரவை திரும்பியது. மேலும், கூட்டம் நடத்துவதற்காக சட்டமன்ற கூடம் அமைக்கப்பட்டது. தற்போது, கூட்டம் நடைபெறும் இடம் தான் அது. இந்த அரங்கில் தான், 1957ம் ஆண்டு இரண்டாவது சட்டப்பேரவை முதல் தொடர்ச்சியாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 

இந்த கால இடைவெளிக்குள், 1959ம் ஆண்டில் ஒரு மாதம் ஊட்டி அரண்மனையில் சட்டப்பேரவை கூடியது. அதுபோல, 2006ம் ஆண்டு பொறுப்புக்கு வந்த திமுக ஆட்சியின்போது அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டிய சட்டப்பேரவை கட்டிடத்தில் (இப்போது பல்நோக்கு பொது மருத்துவமனை) 2010 மார்ச் முதல் 2011 மே வரை தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய தகவல்.  

(நினைவுகள் சுழலும்...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 6

= வை.ரவீந்திரன். 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு முற்றிலுமாக தமிழக பகுதிகளை மட்டுமே கொண்டதாக அமைந்த சென்னை மாகாணத்துக்கு முதன் முறையாக நடந்த தேர்தலாக 1957 சட்டப்பேரவை தேர்தலை கூறலாம். மொத்தம் 167 தொகுதிகள். அதில் இரட்டை உறுப்பினர் தொகுதிகள் 38 (தலித் 37, பழங்குடி 1). இதை சேர்த்தால் மொத்தம் 205 எம்எல்ஏக்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு நியமன எம்எல்ஏ பதவியும் உண்டு.

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்குள் காமராஜரால் தோற்கடிக்கப்பட்ட ராஜாஜி, அந்த கட்சியில் இருந்து வெளியேறி, ‘இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ்’ என்ற தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், சோசிலிஸ்ட் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் போன்றவையும் இந்த தேர்தலில் களத்தில் நின்றன.

ராஜாஜி கட்சியும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சியும் கூட்டணி அமைத்து 59 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தாமல் வெளிப்படையான ஆதரவை இந்த கூட்டணி அளித்தது.



இந்த கட்சிகளுக்கு இடையே புது வரவாக ஒரு கட்சியும் இந்த தேர்தலை சந்தித்தது. அது திமுக. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தொடங்கி வைத்த அண்ணா தலைமையிலான திமுகவுக்கு இதுவே முதல் தேர்தல். கட்சி ஆரம்பித்து சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் களத்தில் இறங்கியது. 1956ம் ஆண்டு திருச்சி மாநாட்டில் எடுத்த முடிவின்படி தேர்தலில் குதித்த திமுகவுக்கு அரசியல் கட்சி அங்கீகாரம் இல்லை.

சுயேச்சை சின்னத்தை தேர்வு செய்யும் கட்டாயம் நேரிட்டதால், ‘உதய சூரியன்’ சின்னத்தை திமுக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். ஆனால், திமுக நிறுத்திய 117 வேட்பாளர்களில் பலருக்கு உதய சூரியன் சின்னம் கிடைக்கவில்லை. காஞ்சியில் அண்ணாவும், சேலம் தொகுதியில் நெடுஞ்செழியனும் சேவல் சின்னத்தில் தான் போட்டியிட்டனர். ஆனால், குளித்தலையில் கலைஞருக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.



அந்த தேர்தலில் முதல்வர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீண்டும் வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என பெரியார் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். திமுக தலைவர்களை ‘கண்ணீர் துளிகள்’ என்றே வருணித்த பெரியார், ‘கல்வி, வேலை என தமிழனுக்கு உயர்வை தந்த காமராஜரை ஆட்சியில் இருந்து அகற்ற திமுக கருதுகிறது’ என்று பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் முடிவில் 151 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. தொடர்ந்து 2வது முறையாக முதல்வரானார், காமராஜர். அவரது அமைச்சரவையில் அவர் தவிர 7 அமைச்சர்கள் மட்டுமே.

இந்த தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கிய திமுக 13 இடங்களை பெற்றது. ராஜாஜி கட்சிக்கும் 13 இடங்கள் கிடைத்தன. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கட்சி அங்கீகாரம் இல்லாததால் திமுகவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், ராஜாஜி கட்சிக்கு சுயேச்சைகள் சிலர் தாவியதால் எதிர்க்கட்சி அந்தஸ்து அவரது கட்சிக்கு கிடைத்தது.

காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணா, குளித்தலையில் இருந்து கருணாநிதி, எழும்பூரில் இருந்து அன்பழகன், ஆயிரம் விளக்கில் இருந்து ஆசைத்தம்பி என திமுகவின் பெரிய தலைவர்கள் முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 5

= வை.ரவீந்திரன். 

சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை பதவியேற்ற பிறகு ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி மாநில கோரிக்கை வலிமையாக எழுந்தது. இந்த கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு மரணம், ராஜாஜி அமல்படுத்திய குலக்கல்வி திட்டம் என சிக்கல்கள் தொடர்ந்தன. இதற்கிடையே, மொழிவாரி மாநிலமாக சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 375 உறுப்பினர்களில் 140 பேர் ஆந்திராவுக்கும் 4 பேர் (பெல்லாரி மாவட்டம்) மைசூருக்கும் சென்றதால், தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 231 ஆக குறைந்தது. பின்னாளில் மலபார் பகுதி கேரளாவுடன் இணைந்ததால் 190 என சுருங்கியது. இப்படி ஒரு சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் காமராஜரின் செல்வாக்கு வளர்ந்தது.
 
குறிப்பாக, ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற பிளவு காங்கிரஸ் கட்சிக்குள் அதிகரித்தது. பக்தவத்சலம், சி.சுப்பிரமணியன் போன்ற தலைவர்கள் எதிர்ப்பையும் மீறி காமராஜர், பெருந்தலைவரானார். வேறு வழியே இல்லாத நிலைமையில், உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜாஜி அறிவித்தார். எனினும், தனக்கு பிறகு சி.சுப்ரமணியம் முதல்வராக ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் நடந்த வாக்கெடுப்பில் ராஜாஜி ஆதரவு பெற்ற சுப்ரமணியம் தோல்வி அடைந்தார். காமராஜர் வென்றார் 1954 மார்ச் 31ம் தேதி அன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களால் முதல்வராக தேர்வானார் காமராஜர். பின்னர், ஏப்ரல் 13ம் தேதி பதவியேற்றார்.



தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு, அப்போது காலியாக இருந்த குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவைக்குள் காமராஜர் அடியெடுத்து வைத்தார். 1954ல் காமராஜர் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 7. அப்போது, சுயமரியாதை இயக்கத்தினரும் கூட காமராஜரை கொண்டாடினர். ‘குணாளா, குலக் கொழுந்தே’ என காமராஜரை பெருமையுடன் அண்ணா அழைத்ததும் இந்த காலகட்டத்தில் தான். திமுகவின் ஆரம்ப காலம் அது.   

1952 முதல் 1957 வரையிலான முதலாவது சட்டப்பேரவை கால கட்டத்துக்குள் சென்னை மாகாணத்தில் இருந்து கிட்டத்தட்ட ஆந்திரா, கேரளா, கர்நாடக பகுதிகள் பிரிந்து சென்று விட்டன. அதே நேரத்தில், மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு காரணமாக கேரளாவில் இருந்த தமிழ் பேசும் பகுதிகளான கன்னியாகுமரி, செங்கோட்டை போன்றவை தமிழகத்துடன் இணைந்தன.

அதனால், பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் புதிய மறு வரையறை உத்தரவு‘ 1956-ன் கீழ் தமிழக பகுதிகளை மட்டுமே கொண்டதாக சென்னை மாகாணம் மாறியது. அதன், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 என வரையறுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையிலேயே 1957ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை நோக்கி தமிழகம் சென்றது.

(நினைவுகள் சுழலும்...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 4

= வை.ரவீந்திரன். 

இந்தியாவில் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்குரிமை பெற்ற முதலாவது தேர்தல் 1952ம் ஆண்டு தேர்தல் தான். அந்த தேர்தல் முடிவில், சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சியினர் உரிமை கோரினர். உடனே, ராஜாஜியை அனுப்பி காங்கிரஸ் ஆட்சிக்கு வழி ஏற்படுத்த காங்கிரஸ் தலைமை தீர்மானித்தது. அந்த திட்டத்தை எதிர்த்த காமராஜர், ‘கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க விடுவோம். அதுதான் ஜனநாயகம். பல கட்சிகள் அடங்கிய அந்த கூட்டணி அரசு விரைவிலேயே கவிழ்ந்து விடும்’ என்று அறிவுறுத்தினார். 

அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. காங்கிரஸ்காரரான ஆளுநர் பிரகாசாவும் அதை விரும்பவில்லை. ராஜாஜியை மேலவை நியமன எம்எல்ஏவாக நியமித்து,, அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் பிரகாசா அழைத்தார். அமைச்சரவை சிபாரிசின் படியே நியமன எம்எல்ஏ நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அந்த விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டார் ஆளுநர் பிரகாசா.



இதற்கிடையே, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சைகள் பேரம் பேசப்பட்டனர். பேரம் கூடி வந்தது. 1939ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது ஆளுநரிடம் அதிகாரம் குவிந்திருப்பதாக கூறி ஆட்சியில் இருந்து வெளியேறிய அதே காங்கிரஸ், 1952ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஆளுநரின் அபரிமிதமான அதிகாரத்தின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தது. 
 
இதையடுத்து, நடந்த சபாநாயகர் தேர்தலில் காங்கிரசை சேர்ந்த சிவசண்முகம் பிள்ளை, 206 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். பின்னர், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அந்த வகையில், சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய பெருமையை சென்னை மாகாண சட்டப்பேரவை பெற்றது. 1952 ஜூலை 3ம் தேதி நடந்த அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 200 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ராஜாஜி அமைச்சரவை வெற்றி பெற்றது. ஆட்சியை எதிர்த்து 150 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். 



ஒரு வழியாக பல்வேறு சதுரங்க வேட்டைகளுக்கு பிறகு, சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. காமன்வீல் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவு, 15 சுயேச்சைகள் காங்கிரசில் சேர்ந்தது, கிரிசிகார் கட்சியை உடைத்தது என பல்வேறு கோல்மால்களுடன் காங்கிரஸ் ஆட்சி சாத்தியமானது. அப்போது, கட்சித் தாவல் தடைச்சட்டம் இல்லாதது வசதியாக இருந்தது.

இப்படியாக, முதல்வர் பொறுப்புக்கு வந்த ராஜாஜி அமைச்சரவையில் 14 பேர் அமைச்சர்களாகினர். ஆனால், இவ்வளவு களேபரங்களுக்கு இடையே அமைந்த ராஜாஜி ஆட்சி, ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றி பெற்றிருந்த காமராஜர், சென்னை மாகாண முதல்வரானார். அது எப்படி சாத்தியமானது ...?

(நினைவுகள் சுழலும் ...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 3

= வை.ரவீந்திரன். 

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, 1950ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சென்னை மாகாணத்தில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 375. அதில், 66 இரட்டை உறுப்பினர் தொகுதிகள். தற்போது, தனித் தொகுதிகள் போன்று தலித், பழங்குடி இனத்தவருக்காக அப்போது அதிகமான வாக்குகள் உள்ள தொகுதிகளில் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வது வழக்கம். அதன்படி, 66 இரட்டை உறுப்பினர்களில் 62 தலித், 4 பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கணக்குப்படி பார்த்தால் தொகுதிகள் 306. ஆனால், தேர்வாகும் உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) எண்ணிக்கை 375.

ஆங்கிலேய ஆட்சியில் இருந்தது போலவே, சென்னை மாகாண எல்லைக்குள் தமிழக பகுதிகள் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளும் உள்ளடங்கி இருந்தன. இதுபோன்ற சூழலில், 1952ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் கட்சி, கிஷான் மஸ்தூர் கட்சி, பி.டி.ராஜன் தலைமையிலான நீதிக்கட்சி, காமன்வீல் கட்சி என பல்வேறு கட்சிகள் களமிறங்கின. இந்த தேர்தலில் சென்னை மாகாணம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு பரவலாக கடும் எதிர்ப்பு இருந்தது.

எனினும், சென்னை மாகாணம் முழுவதும் பரவலாக 367 வேட்பாளர்களை நிறுத்திய ஒரே கட்சி காங்கிரஸ்தான். கம்யூனிஸ்ட் 131 இடங்களிலும் சோசலிஸ்ட் கட்சி 163 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மற்றவை எல்லாம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் என அந்தந்த பிராந்தியங்களில் செல்வாக்கு பெற்ற பிராந்திய கட்சிகள். ஆனாலும், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலே காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

1952ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு 152 இடங்களே கிடைத்தன. ஆட்சி அமைக்க 188 உறுப்பினர்கள் தேவை. இந்த தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் முதல்வர் குமாரசாமி ராஜா தோல்வி அடைந்தார். அவருடைய அமைச்சரவையில் இருந்த பக்தவத்சலம், மாதவ மேனன் உட்பட 5 அமைச்சர்களும் தோல்வியை தழுவினர். மலபார் பிராந்தியத்தில் 4, ஆந்திராவில் 43, கர்நாடகத்தில் 9, தமிழகத்தில் 96 என்ற கணக்கில் காங்கிரசுக்கு வெற்றி கிட்டியது. 


இந்திய கம்யூனிஸ்ட் (62) பிரகாசம் தலைமையிலான கிஷான் மஸ்தூர் பிரஜா (35) உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் 166 இடங்களுடன் சுயேச்சைகள் ஆதரவோடு ஆட்சி அமைக்க தயாராகினர். மேலும், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஸ்ரீ பிரகாசாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மத்தியில் உட்பட நாடு முழுவதும் வெற்றிக் கொடி நாட்டி இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

நாடு விடுதலை பெற்ற பிறகு சென்னை மாகாணத்துக்கு நடந்த முதல் தேர்தலிலேயே மாற்று கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிப்பதா? அதுவும் கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சியா? என்ற எண்ணம் காங்கிரஸ் தலைமைக்கும் காங்கிரஸால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் தோன்றியது. அதன் பிறகு என்ன நடந்தது ...?

(நினைவுகள் சுழலும் ...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 2

= வை.ரவீந்திரன். 

சென்னை மாகாணத்தில் 1939ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி ராஜினாமா செய்த பிறகு, இரண்டாம் உலகப் போர் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது. சுமார் 7 ஆண்டு கால ஆளுநர் ஆட்சிக்கு பிறகு 1946ம் ஆண்டு பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த கால இடைவெளிக்குள் அரசியலில் எவ்வளவோ மாற்றங்கள். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது.

இடையில் சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ராஜாஜி, மீண்டும் கட்சிக்குள் வந்திருந்தார். அவருக்கும் காமராஜருக்கும் இடையிலான மோதலை தணிக்க ஆசிப் அலியை கட்சி மேலிடம் அனுப்பி வைத்தது. படேலும் உட்கட்சி பூசலில் கவனம் செலுத்தினார்.

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் வேகமாக வேரூன்றத் 1944ம் ஆண்டு பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் உதயமானது. ஆனால், தேர்தல் அரசியலில் இருந்து அந்த கட்சி ஒதுங்கி இருக்க தீர்மானித்தது. அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டதால் தேர்தலை சந்திக்க தயாராக இருந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் களத்தில் இறங்க ஆயத்தமானது.  

இப்படியான சூழ்நிலைகளுக்கு இடையே 1946ம் ஆண்டு சென்னை மாகாண தேர்தல் நடந்தது. தேர்தலில் 163 இடங்களுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வென்றது. காயிதே மில்லத் தலைமையிலான முஸ்லிம் லீக், 28 இடங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஏற்கனவே, உட்கட்சி பூசலில் தவித்த காங்கிரசுக்குள் ஆட்சி அமைப்பதில் பெரிய ரகளையே நடந்தது. ராஜாஜியை முதல்வராக்க கட்சி மேலிடம் (காந்தி, நேரு) விரும்பியது.

அதை காமராஜர் (தமிழகம்), மாதவ மேனன் (கேரளம்) போன்ற மாகாண காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். இறுதியாக நடந்த ஓட்டெடுப்பில் ராஜாஜி தோல்வி அடைந்தார். அதனால், சென்னை மகாண முதல்வராக 1946ம் ஆண்டு டி.பிரகாசம் பொறுப்பு ஏற்றார். உட்கட்சி குழப்பத்தால் அடுத்த ஆண்டே அவரது அமைச்சரவை கவிழ்ந்தது.



அதனால், 1947ம் ஆண்டில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் அவருக்கு பிறகு 1949ம் ஆண்டில் குமாரசாமி ராஜாவும் அடுத்தடுத்து முதல்வராகினர். 1951ம் ஆண்டு வரை இந்த ஆட்சி நீடித்தது. இந்த இடைவெளிக்குள் இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசு நாடானது என்பதும் அதன்பிறகு, சுதந்திர இந்தியாவுக்கு தனியாக அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதும், பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையை இந்தியா சுவீகரித்து கொண்டதும் தனி வரலாறு. 

(நினைவுகள் சுழலும் ...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 1

= வை.ரவீந்திரன்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்திய அரசு சட்டம்'1935-ன் படி, 1937ம் ஆண்டு சென்னை மாகாணம் உட்பட இந்தியா முழுவதும் 11 மாகாணங்களுக்கு சட்டப்பேரவை, மேலவை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்துக்கு நடந்த இந்த தேர்தலில் 215 இடங்களில் 159 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

பொப்பிலி ராஜா தலைமையிலான நீதிக்கட்சி 21 இடங்களை பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் பொப்பிலி ராஜா தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் அநேக இடங்களில் பலரும் போட்டியின்றி (அன் ஆப்போஸ்டு) தேர்வாகி இருந்தனர். சாத்தூரில் இருந்து தேர்வான காமராஜரும் அவர்களில் ஒருவர்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதிலும் மாகாண ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க மறுத்தது. அதனால், 2வது பெரிய கட்சியான நீதிக்கட்சி தலைமையில் 1937 ஏப்ரல் 1ம் தேதி இடைக்கால அரசு அமைந்தது. சுமார் 4 மாதங்கள் நீடித்த அந்த அரசின் முதல்வர் கர்மா வெங்கட ரெட்டி நாயுடு. நீதிக் கட்சியின் மூத்த தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், எம்.ஏ. முத்தையா செட்டியார் உட்பட 5 பேர் அமைச்சர்களாகினர்.
அதன்பிறகு, ஆங்கிலேயருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தாங்கள் வெற்றி பெற்ற மாகாணங்களில் ஆட்சி பொறுப்பை ஏற்க காங்கிரஸ் காரியக் கமிட்டி முன் வந்தது. அதனால், சென்னை மாகாண முதல்வராக 1937 ஜூலையில் ராஜாஜி பொறுப்பேற்க அவர் தலைமையில் 9 பேர் சென்னை மாகாண அமைச்சர்களாக பதவியேற்றனர். 


ஆனால், இரண்டாம் உலகப்போரில் இந்தியாவையும் பங்கெடுக்கச் செய்வதை கண்டித்து 1939ம் ஆண்டில் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதனால், சென்னை மாகாணத்தில் ஆளுநர் ஆட்சியை பிரிட்டிஷ் அரசு அமல்படுத்தியது.

(நினைவுகள் சுழலும்...)