= வை.ரவீந்திரன்.
சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் சுதந்திர
இந்தியாவின் முதல் அமைச்சரவை பதவியேற்ற பிறகு ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி
மாநில கோரிக்கை வலிமையாக எழுந்தது. இந்த கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்த பொட்டி
ஸ்ரீராமுலு மரணம், ராஜாஜி அமல்படுத்திய குலக்கல்வி திட்டம் என சிக்கல்கள்
தொடர்ந்தன. இதற்கிடையே, மொழிவாரி மாநிலமாக சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா
பிரிக்கப்பட்டது.
மொத்தம் உள்ள 375 உறுப்பினர்களில் 140 பேர்
ஆந்திராவுக்கும் 4 பேர் (பெல்லாரி மாவட்டம்) மைசூருக்கும் சென்றதால், தமிழகத்தை
உள்ளடக்கிய சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 231 ஆக குறைந்தது. பின்னாளில்
மலபார் பகுதி கேரளாவுடன் இணைந்ததால் 190 என சுருங்கியது. இப்படி ஒரு சூழ்நிலையில்,
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் காமராஜரின் செல்வாக்கு வளர்ந்தது.
குறிப்பாக, ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் பிராமணர்,
பிராமணர் அல்லாதோர் என்ற பிளவு காங்கிரஸ் கட்சிக்குள் அதிகரித்தது. பக்தவத்சலம்,
சி.சுப்பிரமணியன் போன்ற தலைவர்கள் எதிர்ப்பையும் மீறி காமராஜர், பெருந்தலைவரானார்.
வேறு வழியே இல்லாத நிலைமையில், உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து
விலகுவதாக ராஜாஜி அறிவித்தார். எனினும், தனக்கு பிறகு சி.சுப்ரமணியம் முதல்வராக
ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் நடந்த வாக்கெடுப்பில்
ராஜாஜி ஆதரவு பெற்ற சுப்ரமணியம் தோல்வி அடைந்தார். காமராஜர் வென்றார் 1954 மார்ச்
31ம் தேதி அன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களால் முதல்வராக தேர்வானார் காமராஜர். பின்னர்,
ஏப்ரல் 13ம் தேதி பதவியேற்றார்.
தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு, அப்போது
காலியாக இருந்த குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று
சட்டப்பேரவைக்குள் காமராஜர் அடியெடுத்து வைத்தார். 1954ல் காமராஜர் அமைச்சரவையில்
அமைச்சர்களின் எண்ணிக்கை 7. அப்போது, சுயமரியாதை இயக்கத்தினரும் கூட காமராஜரை
கொண்டாடினர். ‘குணாளா, குலக் கொழுந்தே’ என காமராஜரை பெருமையுடன் அண்ணா அழைத்ததும்
இந்த காலகட்டத்தில் தான். திமுகவின் ஆரம்ப காலம் அது.
1952 முதல் 1957 வரையிலான முதலாவது சட்டப்பேரவை கால
கட்டத்துக்குள் சென்னை மாகாணத்தில் இருந்து கிட்டத்தட்ட ஆந்திரா, கேரளா, கர்நாடக
பகுதிகள் பிரிந்து சென்று விட்டன. அதே நேரத்தில், மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு
காரணமாக கேரளாவில் இருந்த தமிழ் பேசும் பகுதிகளான கன்னியாகுமரி, செங்கோட்டை போன்றவை
தமிழகத்துடன் இணைந்தன.
அதனால், பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள்
புதிய மறு வரையறை உத்தரவு‘ 1956-ன் கீழ் தமிழக பகுதிகளை மட்டுமே கொண்டதாக சென்னை
மாகாணம் மாறியது. அதன், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 என
வரையறுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையிலேயே 1957ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை நோக்கி
தமிழகம் சென்றது.
(நினைவுகள் சுழலும்...)
No comments:
Post a Comment