Thursday 25 February 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 3

= வை.ரவீந்திரன். 

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, 1950ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சென்னை மாகாணத்தில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 375. அதில், 66 இரட்டை உறுப்பினர் தொகுதிகள். தற்போது, தனித் தொகுதிகள் போன்று தலித், பழங்குடி இனத்தவருக்காக அப்போது அதிகமான வாக்குகள் உள்ள தொகுதிகளில் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வது வழக்கம். அதன்படி, 66 இரட்டை உறுப்பினர்களில் 62 தலித், 4 பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கணக்குப்படி பார்த்தால் தொகுதிகள் 306. ஆனால், தேர்வாகும் உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) எண்ணிக்கை 375.

ஆங்கிலேய ஆட்சியில் இருந்தது போலவே, சென்னை மாகாண எல்லைக்குள் தமிழக பகுதிகள் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளும் உள்ளடங்கி இருந்தன. இதுபோன்ற சூழலில், 1952ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் கட்சி, கிஷான் மஸ்தூர் கட்சி, பி.டி.ராஜன் தலைமையிலான நீதிக்கட்சி, காமன்வீல் கட்சி என பல்வேறு கட்சிகள் களமிறங்கின. இந்த தேர்தலில் சென்னை மாகாணம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு பரவலாக கடும் எதிர்ப்பு இருந்தது.

எனினும், சென்னை மாகாணம் முழுவதும் பரவலாக 367 வேட்பாளர்களை நிறுத்திய ஒரே கட்சி காங்கிரஸ்தான். கம்யூனிஸ்ட் 131 இடங்களிலும் சோசலிஸ்ட் கட்சி 163 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மற்றவை எல்லாம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் என அந்தந்த பிராந்தியங்களில் செல்வாக்கு பெற்ற பிராந்திய கட்சிகள். ஆனாலும், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலே காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

1952ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு 152 இடங்களே கிடைத்தன. ஆட்சி அமைக்க 188 உறுப்பினர்கள் தேவை. இந்த தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் முதல்வர் குமாரசாமி ராஜா தோல்வி அடைந்தார். அவருடைய அமைச்சரவையில் இருந்த பக்தவத்சலம், மாதவ மேனன் உட்பட 5 அமைச்சர்களும் தோல்வியை தழுவினர். மலபார் பிராந்தியத்தில் 4, ஆந்திராவில் 43, கர்நாடகத்தில் 9, தமிழகத்தில் 96 என்ற கணக்கில் காங்கிரசுக்கு வெற்றி கிட்டியது. 


இந்திய கம்யூனிஸ்ட் (62) பிரகாசம் தலைமையிலான கிஷான் மஸ்தூர் பிரஜா (35) உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் 166 இடங்களுடன் சுயேச்சைகள் ஆதரவோடு ஆட்சி அமைக்க தயாராகினர். மேலும், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஸ்ரீ பிரகாசாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மத்தியில் உட்பட நாடு முழுவதும் வெற்றிக் கொடி நாட்டி இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

நாடு விடுதலை பெற்ற பிறகு சென்னை மாகாணத்துக்கு நடந்த முதல் தேர்தலிலேயே மாற்று கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிப்பதா? அதுவும் கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சியா? என்ற எண்ணம் காங்கிரஸ் தலைமைக்கும் காங்கிரஸால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் தோன்றியது. அதன் பிறகு என்ன நடந்தது ...?

(நினைவுகள் சுழலும் ...)

No comments: