= வை.ரவீந்திரன்.
தமிழக முதல் அமைச்சர் பதவியை 1963ம் ஆண்டு காமராஜர்
ராஜினாமா செய்து விட்டு கட்சிப் பணியாற்ற தீர்மானித்த சில மாதங்களில் 1964 மே 27ம்
தேதி நேரு மறைந்தார். அதனால், தேசிய அரசியலில் காமராஜர் கவனம் செலுத்த நேரிட்டது.
இதற்கிடையே, திமுகவில் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், அன்பழகன் என முதல்கட்ட
தலைவர்கள் தொடங்கி கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் வரை மிகத் திறமையான
பேச்சாளர்களாக வலம் வந்தனர்.
‘வெங்கட்ராமன் அண்ணாச்சி, வெங்காய விலை என்னாச்சி’,
‘பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி’, ‘அரியலூர் அழகேசா, அமைச்சர் பதவி
ஒரு கேடா’ = என தமிழில் ரைமிங் வார்த்தைகளை தொடங்கி வைத்தது திமுக தான்.
அண்ணாவின் அடுக்கு மொழியில் கலைஞரின் கன்னித் தமிழில்,
நாவலரின் நாவன்மையில், எம்ஜிஆரின் திரைப்பட வழி கொள்கை பிரச்சாரத்தில் திமுக
வலுப்பெறத் தொடங்கியது. இப்படி ஒரு சூழ்நிலையில், 1964ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி
தேர்தலில் மிகப் பெரிய அளவில் திமுக வெற்றி வாகை சூடியது.
இந்த நிலையில், 1965ம் ஆண்டில் இருந்து இந்தியாவில்
இந்தி மொழியே ஆட்சி மொழியாக இருக்கும் என்ற மத்திய அரசின் அறிவிப்புல் இந்தி பேசா
மாநிலங்கள் கொந்தளிக்க தொடங்கின. இந்தி பேசாத மாநிலங்களில் கட்டாயமாக இந்தி
கற்கும் விதத்தில் மும்மொழி கொள்கை திணிக்கப்பட்டது. கட்டாய இந்தி திணிப்பை
எதிர்த்து தமிழகம் முன்னிலையில் நின்றது. அந்த போராட்டத்தை திமுக முன்னெடுத்துச்
சென்றது.
1965ம் ஆண்டு குடியரசு தினத்தன்று தமிழகத்தில் பரவலாக
நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் போலீஸ் தடியடியில் சுமார் 70 பேர்
பலியாகினர். இதையடுத்து, இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக
இருக்கும் என மத்திய அரசு சார்பாக உறுதி அளிக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு உணர்வு கனன்று கொண்டு இருந்த
காலகட்டத்திலேயே தமிழகத்தில் 1967ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் காலம் உதிக்க
தொடங்கியது.
(நினைவுகள் சுழலும்)
No comments:
Post a Comment