= வை.ரவீந்திரன்.
சென்னை மாகாணத்தில் 1939ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி
ராஜினாமா செய்த பிறகு, இரண்டாம் உலகப் போர் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது. சுமார்
7 ஆண்டு கால ஆளுநர் ஆட்சிக்கு பிறகு 1946ம் ஆண்டு பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த
கால இடைவெளிக்குள் அரசியலில் எவ்வளவோ மாற்றங்கள். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்
பதவி தொடர்பாக கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது.
இடையில் சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து
வெளியேறிய ராஜாஜி, மீண்டும் கட்சிக்குள் வந்திருந்தார். அவருக்கும் காமராஜருக்கும்
இடையிலான மோதலை தணிக்க ஆசிப் அலியை கட்சி மேலிடம் அனுப்பி வைத்தது. படேலும் உட்கட்சி
பூசலில் கவனம் செலுத்தினார்.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம்
வேகமாக வேரூன்றத் 1944ம் ஆண்டு பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் உதயமானது.
ஆனால், தேர்தல் அரசியலில் இருந்து அந்த கட்சி ஒதுங்கி இருக்க தீர்மானித்தது. அதே
நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டதால் தேர்தலை சந்திக்க தயாராக
இருந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் களத்தில் இறங்க ஆயத்தமானது.
இப்படியான சூழ்நிலைகளுக்கு இடையே 1946ம் ஆண்டு சென்னை
மாகாண தேர்தல் நடந்தது. தேர்தலில் 163 இடங்களுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சியே
வென்றது. காயிதே மில்லத் தலைமையிலான முஸ்லிம் லீக், 28 இடங்களுடன் இரண்டாம் இடத்தை
பிடித்தது. ஏற்கனவே, உட்கட்சி பூசலில் தவித்த காங்கிரசுக்குள் ஆட்சி அமைப்பதில்
பெரிய ரகளையே நடந்தது. ராஜாஜியை முதல்வராக்க கட்சி மேலிடம் (காந்தி, நேரு)
விரும்பியது.
அதை காமராஜர் (தமிழகம்), மாதவ மேனன் (கேரளம்) போன்ற
மாகாண காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். இறுதியாக நடந்த ஓட்டெடுப்பில் ராஜாஜி
தோல்வி அடைந்தார். அதனால், சென்னை மகாண முதல்வராக 1946ம் ஆண்டு டி.பிரகாசம்
பொறுப்பு ஏற்றார். உட்கட்சி குழப்பத்தால் அடுத்த ஆண்டே அவரது அமைச்சரவை
கவிழ்ந்தது.
அதனால், 1947ம் ஆண்டில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும்
அவருக்கு பிறகு 1949ம் ஆண்டில் குமாரசாமி ராஜாவும் அடுத்தடுத்து முதல்வராகினர். 1951ம்
ஆண்டு வரை இந்த ஆட்சி நீடித்தது. இந்த இடைவெளிக்குள் இந்தியா சுதந்திரம் பெற்று
குடியரசு நாடானது என்பதும் அதன்பிறகு, சுதந்திர இந்தியாவுக்கு தனியாக அரசியலமைப்பு
சட்டம் இயற்றப்பட்டதும், பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையை இந்தியா சுவீகரித்து
கொண்டதும் தனி வரலாறு.
(நினைவுகள் சுழலும் ...)
No comments:
Post a Comment