Thursday 25 February 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 6

= வை.ரவீந்திரன். 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு முற்றிலுமாக தமிழக பகுதிகளை மட்டுமே கொண்டதாக அமைந்த சென்னை மாகாணத்துக்கு முதன் முறையாக நடந்த தேர்தலாக 1957 சட்டப்பேரவை தேர்தலை கூறலாம். மொத்தம் 167 தொகுதிகள். அதில் இரட்டை உறுப்பினர் தொகுதிகள் 38 (தலித் 37, பழங்குடி 1). இதை சேர்த்தால் மொத்தம் 205 எம்எல்ஏக்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு நியமன எம்எல்ஏ பதவியும் உண்டு.

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்குள் காமராஜரால் தோற்கடிக்கப்பட்ட ராஜாஜி, அந்த கட்சியில் இருந்து வெளியேறி, ‘இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ்’ என்ற தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், சோசிலிஸ்ட் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் போன்றவையும் இந்த தேர்தலில் களத்தில் நின்றன.

ராஜாஜி கட்சியும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சியும் கூட்டணி அமைத்து 59 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தாமல் வெளிப்படையான ஆதரவை இந்த கூட்டணி அளித்தது.



இந்த கட்சிகளுக்கு இடையே புது வரவாக ஒரு கட்சியும் இந்த தேர்தலை சந்தித்தது. அது திமுக. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தொடங்கி வைத்த அண்ணா தலைமையிலான திமுகவுக்கு இதுவே முதல் தேர்தல். கட்சி ஆரம்பித்து சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் களத்தில் இறங்கியது. 1956ம் ஆண்டு திருச்சி மாநாட்டில் எடுத்த முடிவின்படி தேர்தலில் குதித்த திமுகவுக்கு அரசியல் கட்சி அங்கீகாரம் இல்லை.

சுயேச்சை சின்னத்தை தேர்வு செய்யும் கட்டாயம் நேரிட்டதால், ‘உதய சூரியன்’ சின்னத்தை திமுக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். ஆனால், திமுக நிறுத்திய 117 வேட்பாளர்களில் பலருக்கு உதய சூரியன் சின்னம் கிடைக்கவில்லை. காஞ்சியில் அண்ணாவும், சேலம் தொகுதியில் நெடுஞ்செழியனும் சேவல் சின்னத்தில் தான் போட்டியிட்டனர். ஆனால், குளித்தலையில் கலைஞருக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.



அந்த தேர்தலில் முதல்வர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீண்டும் வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என பெரியார் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். திமுக தலைவர்களை ‘கண்ணீர் துளிகள்’ என்றே வருணித்த பெரியார், ‘கல்வி, வேலை என தமிழனுக்கு உயர்வை தந்த காமராஜரை ஆட்சியில் இருந்து அகற்ற திமுக கருதுகிறது’ என்று பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் முடிவில் 151 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. தொடர்ந்து 2வது முறையாக முதல்வரானார், காமராஜர். அவரது அமைச்சரவையில் அவர் தவிர 7 அமைச்சர்கள் மட்டுமே.

இந்த தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கிய திமுக 13 இடங்களை பெற்றது. ராஜாஜி கட்சிக்கும் 13 இடங்கள் கிடைத்தன. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கட்சி அங்கீகாரம் இல்லாததால் திமுகவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், ராஜாஜி கட்சிக்கு சுயேச்சைகள் சிலர் தாவியதால் எதிர்க்கட்சி அந்தஸ்து அவரது கட்சிக்கு கிடைத்தது.

காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணா, குளித்தலையில் இருந்து கருணாநிதி, எழும்பூரில் இருந்து அன்பழகன், ஆயிரம் விளக்கில் இருந்து ஆசைத்தம்பி என திமுகவின் பெரிய தலைவர்கள் முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்.

(நினைவுகள் சுழலும்)

No comments: