Friday, 26 February 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 8


= வை.ரவீந்திரன்.

சென்னை மாகாணத்தில் 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, ‘1961ம் வருடத்திய இரட்டை வாக்குரிமை தொகுதிகள் கலைப்பு சட்டத்தின்’ கீழ் இரட்டை உறுப்பினர் தொகுதிகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. அதே நேரத்தில், தலித் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் அதே பிரதிநிதித்துவம் தொடர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 167ல் இருந்து 205 ஆக உயர்த்தப்பட்டது. அவற்றில் தனி தொகுதிகள் அடையாளம் காட்டப்பட்டன.  

இந்த தேர்தலில் காமராஜர் தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனியாக களம் இறங்கியது. இந்த தேர்தலிலும் காமராஜரை ஆதரித்து பெரியார் பிரச்சாரம் செய்தார். காமராஜரை தனது வாரிசு என்றும் அறிவித்தார்.

மற்றொரு புறம், திமுகவில் சர்வாதிகாரம் மேலோங்குவதாக கூறி கட்சியில் இருந்து ஈவிகே சம்பத் பிரிந்து சென்றார். அவர் தொடங்கிய தமிழ் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே நேரத்தில் அண்ணா தலைமையில் இரண்டாவது தேர்தலை திமுக சந்திக்க தயாரானது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி அங்கீகாரத்தை பெற்றதோடு கட்சிக்கு நிரந்தர சின்னமாக உதயசூரியன் சின்னத்தையும் திமுக பெற்றிருந்தது. 1957ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் என்பதாலேயே அந்த சின்னத்தை திமுக விரும்பி தேர்வு செய்தது.

10 ஆண்டுகளுக்கு முன் 1952ம் ஆண்டு குலக்கல்வி திட்டத்தை அறிமுகம் செய்ததோடு திமுகவை ஜென்ம விரோதியாக கருதிய ராஜாஜி, தனது சுதந்திரா கட்சியை இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். அந்த சமயத்தில் காங்கிரஸை தமிழகத்தில் அழித்து ஒழிக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்த ராஜாஜி, ‘‘தங்களை வகுப்புவாத கட்சி என வெளிப்படையாக கூறிக் கொள்ளும் கட்சிகளை விட மிக அதிகமான அளவில் வகுப்புவாத கொள்கைகளை கொண்ட கட்சி காங்கிரஸ்’ என கடுமையாக விமர்சித்தார்.  



திரையுலக பிரபலங்கள் நிறைந்த கட்சியாக திமுக இருந்தது. திரைப்படங்களில் திமுக கொள்கைகளை பிரபலப்படுத்தியதோடு கட்சி மேடைகளிலும் உரையாற்றி வந்த புரட்சி தலைவர் எம்ஜிஆர், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் போன்றோர் திமுகவுக்காக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக எஸ்எஸ்ஆர் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாமல் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனது ஆதரவை ஈவிகே சம்பத் கட்சிக்கு அளித்தார். 


 
1962ம் ஆண்டு நடைபெற்ற 3வது சட்டப்பேரவை தேர்தல் முடிவில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தார் காமராஜர். எனினும், முந்தைய தேர்தலை விட 12 இடங்கள் குறைவாக 139 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. மேலும்,  1962ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பெற்ற இந்த வெற்றிதான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த இறுதி வெற்றி. அதன்பிறகு 55 ஆண்டுகளாகியும் மீண்டும் தமிழக அரியணையை காங்கிரஸ் கைப்பற்றவில்லை.

முந்தைய 1957ம் ஆண்டு தேர்தலில் 13 இடங்களை பெற்றிருந்த திமுக, 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 50 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், கட்சித் தலைவரான அண்ணா, தனது சொந்த தொகுதியான காஞ்சிபுரத்தில் தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி தலைவராக நாவலர் நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி துணைத் தலைவரானார் கலைஞர் கருணாநிதி.

(நினைவுகள் சுழலும்...)

No comments: