அன்பு, தோழமை, உறவு என்பது போன்ற வார்த்தைகளின் நிஜ வடிவங்களாலேயே மனித
வாழ்க்கை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வார்த்தைகளுக்கு முழுமையான உருவம்
கொடுத்தால்... அதுவே வாழ்க்கைத் துணை. ஒவ்வொருவரின் வாழ்விலும் இல் வாழ்க்கையின்
ஆரம்ப தருணம் என்பது மறக்க முடியாத திருநாள். அதுவும், கற்பு நெறி தவறா தமிழர்
பண்பாட்டில் அந்த நாளுக்கு கூடுதல் சிறப்பு நிச்சயமாக உண்டு.
அதே நேரத்தில், இரு மனங்கள் இணையும் திருமண விழாவின் கொண்டாட்டங்களை சற்றே
கூர்ந்து நோக்கினால் வெவ்வேறு விதமாக அமையும். சாதி, இனம், மதம் என பலவகையான
சடங்குகள், சம்பிரதாயங்கள். ஒவ்வொன்றும் தனித்தனி விதம். வீடியோ, புகைப்படங்கள் என
நினைவுகள் பொக்கிஷமாக இருந்தாலும், ‘எனது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா?’ என
கூறியபடி மனதுக்குள் பூட்டி கிடக்கும் ஒவ்வொரு நினைவையும் அசைபோடுவது மகிழ்வான
தருணமாக அமையும்.
ஆண் அல்லது பெண், அதுபோன்ற நினைவுகளில் மூழ்கி இருப்பதையும் அதன் வழியாக
திருமண சடங்கு வைபவங்களையும் எடுத்துக் கூறுவது கவிஞர்களின் மரபு. அதில், சங்க கால
புலவர்களும் விதிவிலக்கு இல்லை. சங்ககால அக இலக்கியமான அகநானூறில் நல்லாவூர்
கிழார் என்ற புலவர், ஒரு ஆண் மகன், தன்னுடைய திருமண நிகழ்வு தொடங்கி முதலிரவு வரை
நினைவுபடுத்திப் பார்ப்பதை பாடி வைத்திருக்கிறார். அது, பெற்றோரால் பார்த்து
முடித்து வைக்கப்பட்ட திருமணம்.
தமிழர்களின் திருமணம் என்பது அதிகாலை நேரத்தில் தான் நடைபெறுவது வழக்கம்.
நாகரீக மோகமும், சந்தை மயமாக்கலும் வருவதற்கு முன் சமீபகாலம் வரை பிரம்ம
முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் தான் திருமணத்தை நடத்துவது
தமிழர்களின் வழக்கம். இன்னமும் கூட, தமிழகத்தின் சில சிறிய கிராமங்களில் அந்த
நடைமுறை நீடிக்கிறது. அதுபோன்ற ஒரு அதிகாலை வேளையில் தான், அவனுடைய திருமண
நிகழ்வுகள் தொடங்குகின்றன. அதை, அவன் கூறுகிறான் பாருங்கள்...
“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி
மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப,
நிரைகால்
தண் பெரும் பந்தர்த் தருமணல்
ஞெமரி
மனை விளக்குறுத்தி, மாலை தொடரி
கனை இருள் அகன்ற கவின்பெறு
காலை
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடு இல் விழுப்புகழ் நாள்
தலைவந் தென...
உச்சிக் குடத்தர், புத்தகல்
மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம்
பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை
தரத்தர”
அதாவது,
கரிய இருள் நீங்கி அழகிய விடியற்காலை பொழுது உதிக்க தொடங்குகிறது.
கோள்களின் ஆதிக்கம் நீங்கிய (கிரகணம் இல்லா) வளைந்த வெண்மையான நிறத்துடன் உள்ள
நிலவை குற்றமற்ற சிறந்த புகழை உடைய ரோகிணி அடைகிறது. அந்த சமயத்தில் உளுந்து
பருப்பு போட்டு சமைத்த களி என்னும் ருசி மிகுந்த உணவை உற்றாரும் உறவினர்களும்
உண்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இருக்கின்றனர்.
அதனால், இல்லம் முழுவதும் கலகலப்பு நிறைந்து இருக்கிறது. வரிசையாக கால்களை
(கம்பங்கள்) நட்டு வைத்து பெரிய மணப்பந்தல் போடப்பட்டு இருக்கிறது. குளிர்ச்சி
தரும் அந்த பந்தலுக்குள் மணல் பரப்பி அதன் மீது விளக்கை ஏற்றிவைத்து அதில் மலர்
மாலைகளை தொங்க விட்டனர்.
அந்த மணப்பந்தல் அருகே உச்சந்தலையில் குடங்களை ஏந்தியவரும் (பூரண கும்பம்),
வாய் அகன்ற புதிய மண் பாத்திரம் சுமந்தவரும் வந்து நின்றனர். திருமணத்துக்கான
சம்பிரதாயம், சடங்குகளை அறிந்த வயதில் மூத்த பெண்கள் ஒன்று சேர்ந்து திருமண
நிகழ்ச்சிக்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தனர்.
“புதல்வற் பயந்த திதலை
அவ்வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடி
‘கற்பின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக’
என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங்கதுப்பின் நெல்லொடு
தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை
கல்லென் கம்மையர், ஞெரேரெனப்
புகுதந்து
‘பேர் இற் கிழத்தி ஆக’
எனத்தமர் தர”
குழந்தைகளை பெற்றெடுத்ததால் தோன்றிய தேமல் கொண்ட அழகிய வயிற்றை உடைய
பெண்கள் (குழந்தை குட்டிகளுடன் உள்ள சுமங்கலிப் பெண்கள்) நான்கு பேர், தூய
ஆடைகளும் அழகிய அணிகலன்களும் அணிந்து கொண்டு சூழ்ந்து நின்றனர். பின்னர், ‘கற்பு
நெறி தவறாமல், இல்லற வாழ்வில் நல்ல உதவிகளை
செய்து, உன்னை மனைவியாக பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்பும் பெண்ணாக ஆவாய்’ என
கூறி வாழ்த்தினர்.
கூடவே, பூக்களை கலந்த மங்கள நீருடன் நெல் மணிகளையும் (அட்சதை) தூவினர். அவை
அனைத்தும் கருங்கூந்தலில் சிதறி கிடக்க இனிதாக திருமணம் நடந்து முடிந்தது.
அதன்பிறகு... உறவினர்களும் சுற்றத்தாரும் விரைந்து வந்து, ‘இல்லற வாழ்வில்
மிகப்பெரிய இன்பத்தை பெற்று நீ சிறந்த இல்லாளாக ஆகுக’ என வாழ்த்தினர். மேலும்,
அவளின் கரம் பிடித்து என்னிடம் அவளை முழுமையாக ஒப்படைத்தனர். திருமணம் நிறைவாக
முடிந்தது.
அடுத்ததாக, அவனும் அவளும் முதன் முதலாக தனி அறையில் சந்திக்கின்றனர். அந்த
முதல் சந்திப்பும், மணப்பெண்ணின் நாணமும் எப்படி இருந்தது என்பதை மணமகன் வாயிலாக
புலவர் விவரிக்கிறார் பாருங்கள்.
“ஓர் இற் கூடிய உடன் புணர்
கங்குல்
கொடுமம் புறம் வளைஇ, கோடிக்
கலிங்கத்து
ஓடுங்கினள் கிடந்த ஓர் புறம்
தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்
புதை திறப்ப”
முதலிரவில், ஒரு அறையில் தனியாக விடப்பட்டோம். அவள், நாணத்தால் தனது முதுகை
வளைத்து கிடந்தாள். புடவைக்குள் முற்றிலுமாக அவள் ஒடுங்கிக் கிடந்த இடத்தை நான்
அடைந்தேன். அவளை கட்டித் தழுவும் விருப்பத்தோடு அவள் முகத்தை மூடி இருந்த புடவையை
சற்று திறந்தேன். அப்போது, அவளின் நிலைமை எப்படி இருந்தது.
“அஞ்சினள் உயிர்த்த காலை,
யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை
என
இன் நகை இருக்கை, பின் யான்
வினவலின்
செஞ்சூட்டு ஒண் குழை வண்காது
துயல்வர்
அகம்மலி உவகையள் ஆகி, முகன்
இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே - மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்”
அவளது புடவையை எடுத்ததுமே, தனது பெண்மையால் அஞ்சி நெஞ்சம் படபடக்க
பெருமூச்செறிந்தாள். அவளிடம் நான், ‘பயப்படாதே, உன் மனதில் நினைப்பதை மறைக்காமல்
துணிவுடன் கூறு’ என ஆறுதலுடன் கூறினேன். அதனால், அவள் மகிழ்ச்சி அடைந்தாள்.
கலைமானின் குணமான மடம், செருக்கு நிறைந்த பார்வை, ஒடுங்கிய கூந்தல், மாலை நிறம்
ஆகியவற்றுடன் கூடிய அவளுடைய காதில் சிவப்பு மணிகள் பதித்த குழை (ஜிமிக்கி) மெதுவாக
காற்றில் அசைந்தாடியது. அவள், மேலும் வெட்கத்துடன் கூடிய மகிழ்ச்சியால் முகத்தை
தாழ்த்தி தலை குனிந்தாள்.
இவ்வாறாக, தனது திருமண நாளின் நிகழ்வுகளை மனம் மகிழ்ச்சியுடன் நினைவு
கூறுகிறான், அகநானூறு காலத்து தமிழ் இளைஞன். புலவர் நல்லாவூர் கிழாரின் இந்த
செய்யுள் பாடலை படித்ததும், கண்ணதாசனும் அவரது பாடலும் நினைவில் வந்து செல்வதை
தவிர்க்க முடியவில்லை. அது, 1962ம் ஆண்டு வெளியான, ‘குடும்பத் தலைவன்’ திரைப்படப்
பாடல். அந்த குடும்பத் தலைவனும் தனது திருமண நிகழ்வை கனாக் காண்கிறான் பாருங்கள்.
“திருமணமாம்
திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு
கூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்
சேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம் - நல்ல
சீரகச்சம்பா அரிசி போலச் சிரிச்சிருப்பாளாம்
செம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத்
துணியப்
போலக்
காற்றில்
அசைந்திருப்பாளாம்
செப்புச்
சிலை
போல
உருண்டு
தெரண்டிருப்பாளாம்
- நல்ல
சேலஞ்சில்லா
மாம்பழம்
போல்
கனிந்திருப்பாளாம்”
சங்க கால அகநானூறு செய்யுள் பாடலுக்கும் கவிஞரின் 20ம் நூற்றாண்டு திரைப்பட
பாடலுக்கும் இடையில் தான் என்ன அழகான பொருத்தம்.
= வை.ரவீந்திரன்
http://issuu.com/kaatruveli/docs/____________________________________2364b2aee627d5/87?e=1847692/34493156