கால் காசு உத்தியோகம்
என்றாலும் கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கணும். 40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த
அறிவுரை இப்போதும் நினைவில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட அரசு வேலையை
கைப்பற்ற 20 ஆண்டுகளுக்கு முன் முக்கிய தகுதியாக கருதப்பட்டது, தட்டச்சு. இதனால்,
1990களில் தட்டச்சு பயிற்சிக்கு இருந்த மவுசு தனி. சில பகுதிகளில் அட்மிஷன்
கிடைப்பதே குதிரைக் கொம்பு என்ற நிலைமை எல்லாம் இருந்தது. மையங்களில் உள்ள
தட்டச்சு இயந்திரங்களை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் உள்ளூர்
பெரிய மனிதர்களின் சிபாரிசுகளும் கூட தேவைப்பட்ட காலம் அது. சில மையங்களில்
டூடோரியலும் இணைந்து செயல்பட்டது. மினி கல்லூரி போல இயங்கிய தட்டச்சு மையங்களில்
காதல் மலர்கள் மலர்ந்த அனுபவத்தை நடுத்தர வயதை கடந்தவர்களிடம் கேட்டு பார்க்கலாம்.
அப்போது 10வது
தேர்ச்சி பெற்றால் மட்டுமே தட்டச்சு தேர்வு எழுத முடியும். இப்போது, 7வது
முடித்தாலே ‘பிரி ஜூனியர்’ தேர்வை எழுதலாம். ஆனாலும், தட்டச்சு வழக்கொழிந்து
வருகிறது. மகாராஷ்டிராவில், 2015ம் ஆண்டு நவம்பருக்குள் தட்டச்சு மையங்களை
முற்றிலுமாக நீக்கி விட்டு கம்ப்யூட்டர் டைப்பிங் கற்றுத் தருமாறு அரசு
உத்தரவிட்டுள்ளது. இதனால், தட்டச்சு மையங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் தட்டச்சு
மையங்களாக மாறி வருகின்றன. டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இது அமலாகி
விட்டது. காகித பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கை என இதற்கான காரணம்
கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றாலும்
தட்டச்சு மையங்கள் தட்டழிந்து தான் வருகின்றன.
இன்றைய தட்டச்சு
மையங்களில் பெரும்பாலானவை, முந்தைய தலைமுறையால் விட்டு செல்லப்பட்டு வாரிசுகள்
நடத்தி வருபவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தட்டச்சு மையங்களின் நிலைமை
குறித்து அவற்றின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘எங்கள் தந்தை நினைவாக இதை தொடர்ந்து
நடத்தி வருகிறோம்’ கம்ப்யூட்டர் கீ போர்டு பயிற்சிக்காகவே மாலை நேரங்களில்
மாணவர்கள் வந்து செல்கின்றனர். அந்த காலத்தில் மணவர்களுக்கு மெஷின்களை ஒதுக்கி கால
அட்டவணை போடுவதே தனி வேலையாக இருந்தது. இப்போது, நிலைமை தலைகீழாகி விட்டது.
எனினும், டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு தேர்ச்சி கட்டாயம் என டிஎன்பிஎஸ்சி
உத்தரவிட்டுள்ளதால் மனதில் கொஞ்சம் நிம்மதி ஏற்படுகிறது’ என்கின்றனர்.
இன்றைய அலுவலகங்களில்
தனியாக நெட்வொர்க் என்ஜினீயர்கள் இருப்பது போன்று. முன்பெல்லாம் தட்டச்சு
இயந்திரங்களை பராமரிக்கவும் பழுது பார்க்கவும் தனி மெக்கானிக்குகள் இருந்தனர்.
ரெமிங்டன், கோத்ரேஜ், பாசிட் போன்ற முன்னணி தட்டச்சு இயந்திர தயாரிப்பு
நிறுவனங்கள் எல்லாம் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும்போது தங்கள் செலவிலேயே
மெக்கானிக்குகளுக்கு பயிற்சி அளித்தன. இது மட்டுமல்ல தட்டச்சு தேர்விலும் தட்டச்சு
இயந்திர பராமரிப்பு குறித்த கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மெக்கானிசம்
வகுப்புகள் தனியாக உண்டு. அதற்காக, தட்டச்சு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு வார
இறுதி நாட்களில் மெக்கானிக் ஒருவர் வந்து பயிற்சி அளிப்பது உண்டு.
தற்போது, தட்டச்சு மையங்களே தத்தளிக்கும் நிலையில்
மெக்கானிக்குகளுக்கு வேலை இல்லை. இதனால், பிளம்பிங், வயரிங் என வேறு வேலைகளுக்குச்
சென்று விட்டனர். எனினும், 60 வயதை கடந்த ஒரு சிலர் மட்டும் ‘அந்த காலத்தில் ஓய்வே
இல்லாமல் ஊர் ஊராக சென்று சர்வீஸ் செய்து வந்தோம்’ என்று நினைவலைகளை அசை போட்டபடி,
இன்னமும் மெக்கானிக் பணியை தொடருகின்றனர். தபால் அலுவலகங்களில் இருந்த தந்தி முறை
வழக்கொழிந்து விட்டது போல, தட்டச்சும் முடிந்து விடுமோ என்ற நிலைமை உருவாகி உள்ள
போதிலும், அப்படி ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் காலம் தள்ளுகின்றன, தட்டச்சு
பள்ளிகள். நம்பிக்கை தானே வாழ்க்கை....!!!!
= வை.ரவீந்திரன்.
= வை.ரவீந்திரன்.
No comments:
Post a Comment