Tuesday 9 February 2016

கல்லாகிப் போன மரங்கள்



உலகில் மனிதர்கள் விட்டுச் சென்ற சுவடுகளை விட மரங்களின் சுவடுகளே உலகின் தொன்மைக்கு சில சமயங்களில் சிறந்த ஆவணங்களாகி விடுகின்றன. மரத்தில் அமரும் பறவைகள், சுற்றியுள்ள நீர் நிலைகள், மக்களின் வாழ்க்கை முறை என மரத்தை சுற்றிலும் ஏராளமான அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன. நாளுக்கு நாள் வளரும் நாகரீக வளர்ச்சியால் மரங்கள் மீதான அக்கறை மறைந்து வருகிறது. மரங்களை நம்பி வாழும் பறவை இனங்களும் அரிதாகிப் போய் விட்டன.

ஆனாலும், மரங்களுக்கு என பல்வேறு தனிச் சிறப்புகள் உண்டு. கோயில்களில் தல விருட்சமாக போற்றப்பட்டு வருவது காலம் தொட்ட மரபு. இப்போது நீங்கள் வாசித்துக் கொண்டு இருக்கும் இந்த காகிதம் கூட, மரத்தின் மற்றொரு பரிணாமம் தான். இத்தகைய மரங்களுக்கு காலம் கடந்து வாழும் சக்தியும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான பதிலை தேடி நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். தமிழகத்திலேயே இருக்கிறது.



விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கிழக்கே 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருவக்கரை என்ற கிராமத்தில் அதற்கான பதிலை கண்கூடாக பார்த்து அறிந்து கொள்ளலாம். தமிழகத்தின் மிகப்பழமையான வரலாற்றை கூறும் அரிக்கமேடு, சுற்றுக்கேணி போன்ற பகுதிகளுக்கு அருகில் தான் இந்த திருவக்கரை உள்ளது. இந்த ஊரில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் தனிப் பெரும் வனமாக விரிந்து கிடக்கிறது, கல்மர தேசிய பூங்கா.

பூங்காவின் வாயிலில் நம்மை வரவேற்றபடி பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கும் ஆலமரத்தின் வயது 300க்கு மேல். உயிருடன் இருக்கும் அந்த மரமானது பூமியில் ஏராளமான விழுதுகளை பாய்ச்சி பேரன், பேத்திகளோடு காலம் தள்ளும் கொள்ளுத் தாத்தா போல மலர்ச்சியுடன் நிற்கிறது. அந்த மரத்தில் இருந்து இடதுபுறமாக திரும்பி சென்றால் கல் மர பூங்காவின் நுழைவு வாயில்.

உள்ளே, வழி நெடுகிலும் தரையில் குறுக்கும் நெடுக்குமாக அமைதியாக தூங்கிக் கொண்டு இருக்கின்றன, கல் மரங்கள். கால தேவனின் அசுரத்தனமான சுழற்சியை கண்டு மயங்கி கிடக்கும் இந்த மரங்கள் அனைத்துமே 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை. காலத்தால் எகிப்து மம்மிகளுக்கு முத்தவை. ஆனால், எத்தனை பேருக்கு இந்த தகவல் தெரியும்?




1 அடி முதல் 30 அடி வரையில் பல வகையான மரங்கள் இங்கு கல்லாக மாறிக் கிடக்கின்றன. 250 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட கல் மரங்கள் உள்ளன. ஆயிரமாயிரம் ஆண்டு பழமை ஏறி உறைந்து கிடக்கும்  அவற்றை தொட்டு பார்த்தால் மரம் என்றே நம்ப முடியவில்லை. தங்களுடைய உயிரை காலத்திடம் ஒப்படைத்து விட்டு உடலில் மணலை கொஞ்சம் கொஞ்சமாக பூசிக் கொண்டு கல்லாக சமைந்து கிடக்கின்றன, ஒவ்வொரு மரமும்.

சங்கராபரணி ஆற்றின் கரையோரம் இருப்பதால் காட்டு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு காலப்போக்கில் மணலோடும், கூழாங் கற்களோடும் சேர்ந்து வெப்ப அழுத்த மாற்றங்களால் மரத் தன்மையை இழந்து சிலிக்கானை ஏற்றுக் கொண்டு கல்லாக மாறி இருக்கலாம் என கருதப்படுகிறது. கல் போன்றே தோற்றமளிக்கும் இவற்றை மரம் என்று எப்படி கூற முடியும்? என்ற கேள்வி மனதில் எழுகிறது. அதற்கு பதில். கணுக்கள்.

கல்லாக மாறினாலும் மரங்களுக்கே உரித்தான கணுக்கள் அவற்றில் காணப்படுகின்றன. அதை வைத்து தான் தொல்லியல் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் அவற்றை கல் மரங்கள் என கண்டறிந்துள்ளனர். திருவக்கரையில் உள்ள இந்த மரங்கள் குறித்து கென்னட் என்ற ஆங்கிலேயர் 17ம் நூற்றாண்டில் ஆய்வு மேற்கொண்டார். அதன் மூலமாக திறந்த விதை தாவர இனங்கள் மற்றும் மூடிய விதை தாவர இனங்களை சேர்ந்த மரங்கள் இங்கு இருப்பது தெரியவந்தது. 



புன்னை, புளி, கட்டாஞ்சி, ஆமணக்கு போன்ற தாவர வகைகளை சேர்ந்த மரங்கள் இங்கு கல்லாக மாறிக் கிடக்கின்றன. நம்முடைய மண்ணின் காலம் கடந்த தொன்மைக்கு மவுன சாட்சியாக உள்ள இந்த கல் மரங்களை 1957ம் ஆண்டு முதல் இந்திய அரசின் புவியியல் ஆய்வு துறை பாதுகாத்து வருகிறது. ஆனால், இரவு நேரங்களில் சரியான விளக்கு வசதி இல்லாத காரணத்தால் இங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கல் மரங்கள் திருடு போகின்றன.

கல்லாக கிடக்கும் இந்த மரங்களும் சரி. கண் முன்னே நிமிர்ந்து நிற்கும் மரங்களும் சரி. மனிதர்களின் பேராசையால் கண்ணெதிரிலேயே மறைந்து வருகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. 

= வை.ரவீந்திரன்.

No comments: