Tuesday 5 April 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 31



= வை.ரவீந்திரன்

தமிழகத்தில் எம்ஜிஆர் இல்லாத முதலாவது தேர்தலான 1989ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முழு வீச்சாக களமிறங்கியது திமுக. எப்போதுமே தேர்தல் அறிக்கையில் முக்கிய கவனம் செலுத்தும் அந்த கட்சியின் அன்றைய கோஷம், ‘செய்வதை சொல்வோம், சொன்னதை செய்வோம்’. முக்கிய பண்டிகை நாட்களில் 5 கிலோ இலவச அரிசி வழங்குவதாக திமுக அறிவித்தது பிரபலமாக பேசப்பட்டது. ஏனெனில், அப்போது ரேஷன் அரிசி விலை கிலோ ரூ.3.75. மேலும், தேசிய அளவில் பிரபலமாகிக் கொண்டிருந்த வி.பி.சிங், திமுகவுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார். 



காங்கிரஸ் கட்சிக்காக 14 முறை தமிழகம் வந்த பிரதமர் ராஜீவ், சிறிய நகரங்களில் கூட பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். எம்ஜிஆரால் கலையுலக வாரிசு என அறிவிக்கப்பட்ட பாக்யராஜ், அந்த தேர்தலில் ஜானகி அணிக்காக பிரசாரம் செய்தார். ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் களமிறங்க வெண்ணிற ஆடை நிர்மலா தயாரானார். ஜெ. அணியில் அப்போதைய முன்னணி நடிகரான ராமராஜன், செந்தில் போன்றோர் பிரசாரம் செய்தனர். ‘முதுகுளத்தூர் தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா?’ என பாக்யராஜூக்கு செந்தில் சவால் விட்டார். 



அன்றைய தேர்தல் களத்தில், இந்த நான்கு அணிகளுமே சமமாக காணப்பட்டன. ஜெயலலிதா, ஜானகி இருவருமே சிறிய கிராமங்களில் கூட வீதி, வீதியாக திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை அமையும் அல்லது ஜெ. அணி, காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்றே பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். 



ஆனால், தேர்தல் முடிவில் 169 இடங்களை திமுக கூட்டணி வென்றது. திமுக மட்டும் 150 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றது. மார்க்சிஸ்ட் 15 இடங்களை பெற்றது. சென்னை துறைமுகம் தொகுதியில் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியும், ஆயிரம் விளக்கு தொகுதியில் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழக முதல்வரானார் கருணாநிதி. 1989 ஜனவரி 27 அன்று தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். 



தேர்தலில், 27 இடங்களை அதிமுக ஜெ. அணி கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார், ஜெயலலிதா. மேலும், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். (வேறு யாரும் இன்னும் பெண் எதிர்க்கட்சி தலைவராகவில்லை) ஆண்டிபட்டியில் அவரை எதிர்த்து ஜானகி அணி சார்பாக போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா, 4வது இடத்தை பிடித்து டெபாசிட்டை பறிகொடுத்தார்.   

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்தன. தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மூப்பனார் வெற்றி பெற்றார். அதிமுக ஜா. அணியில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து பி.எச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார். ஆண்டிபட்டியில் ஜானகி அம்மாள் தோல்வியடைந்தது மட்டுமல்ல, 3வது இடத்தை பிடித்தார்.



ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்திருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருவையாறு தொகுதியில் தோல்வியடைந்தார். அங்கு இரண்டாம் இடத்தை பிடித்தார். சில மாதங்களிலேயே தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியையும் கலைத்து விட்டு ஜனதா தளத்தில் ஐக்கியமானார்.

இந்த தேர்தல் முடிவுகளால் அதிமுகவில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.

(நினைவுகள் சுழலும்)

No comments: