= வை.ரவீந்திரன்
தமிழக சட்டப்பேரவையில் 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி
அன்று முதல்வர் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி தலைவரான
ஜெயலலிதா எழுந்து, தனது வீட்டுக்குள் போலீஸார் அத்துமீறி நுழைந்தது குறித்த
பிரச்சினையை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார். கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் உரை
நகலை பறிக்க முயன்றார். (அப்போது சட்டப்பேரவையில் ஓரிரு அடி இடைவெளியில் தான்
முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் எதிர் எதிரில் அமர்ந்திருப்பார்கள். பின்னாளில் மோதல்கள்
அதிகரித்ததும் ஆளும் கட்சி வரிசை மற்றும் எதிர்க்கட்சி வரிசை இருக்கைகளுக்கு
இடையிலான இடைவெளி அதிகப்படுத்தப்பட்டது)
கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் உரையை ஜெயலலிதா பறிக்க
முயன்றதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவைக்குள் கலவரம் உருவானது. ஜெயலலிதாவை தாக்க
துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பாய்ந்து வந்தனர்.
அவர்களை திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் போன்றோர் தடுத்து ஜெயலலிதாவை பாதுகாத்தனர்.
எனினும், கலவரத்தில் ஜெயலலிதாவின் புடவை கிழிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் இருந்து தலைவிரி கோலமாக வெளியே வந்த
ஜெயலலிதா, ‘மீண்டும் இந்த பேரவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்’ என அறிவித்தார். மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த
எஸ்.ஆர்.ராதாவை எதிர்க்கட்சி தலைவராக்கினார். இதன்பிறகு, கருணாநிதி தலைமையிலான திமுக
ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக சட்டப்பேரவைக்கு வெளியில் காங்கிரசுடன் இணைந்து தீவிரமாக
செயல்பட தொடங்கினார்.
இந்த நிலையில், 1989 நவம்பரில் பாராளுமன்ற தேர்தல்
நடைபெற்றது. அதில், அதிமுகவும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டு தமிழகத்தில் 38
பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றின. நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் ஆளும் திமுக
அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. எனினும், அகில இந்திய அளவில் வெறும்
197 இடங்களை மட்டுமே பெற்று காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இதுவரையிலும்
மத்தியில் தனிப்பெரும்பான்மையை (272+) காங்கிரஸ் கட்சி பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
143 இடங்களில் மட்டுமே வென்றிருந்த ஜனதா தளம் தலைவர்
வி.பி.சிங், உதிரி கட்சிகளின் ஆதரவோடு தேசிய முன்னணி தலைவராக பிரதமர் பதவியை
ஏற்றார். அவருக்கு கம்யூனிஸ்ட்டுகளும் பாஜகவும் வெளியில் இருந்து ஆதரவளித்தன. தமிழகத்தில்
ஒரு எம்பி தொகுதியில் கூட திமுக வெற்றி பெறா விட்டாலும் கூட அந்த கட்சியின்
மேல்சபை எம்பியாக இருந்த முரசொலி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது.
பின்னர், மண்டல் கமிஷன் பரிந்துரை மற்றும் அயோத்தி ராம
ஜென்ம பூமி விவகாரத்தில் பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது.
அவரது கட்சியில் இருந்து (தேவிலால், தேவேகவுடா, சவுதாலா, மேனகா காந்தி உள்ளிட்ட
ஆதரவாளர்களுடன்) பிரிந்த சந்திரசேகரை பிரதமராக்கி அவரது ஆட்சிக்கு (197
எம்பிக்களுடன்) வெளியில் இருந்து ஆதரவளித்தார் ராஜீவ்காந்தி. மத்தியில் சாதகமான
ஆட்சி அமைந்ததும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினார் ஜெயலலிதா.
1980ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து
எம்ஜிஆர் ஆட்சியை கலைக்க கருணாநிதி எப்படி நெருக்கடி கொடுத்தாரோ, அதே போன்ற
நெருக்கடியை அதிமுக கொடுக்க தொடங்கியது. விளைவாக.... 1991ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை சந்திரசேகர் அரசு கலைத்தது. அடுத்த மாதமே
சந்திரசேகரின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ராஜீவ்காந்தி வாபஸ் பெற்றார். இதனால்,
1991ம் ஆண்டு மே மாதத்தில் பாராளுமன்றத்துக்கும், தமிழக சட்டப்பேரவைக்கும்
சேர்த்து தேர்தல் அறிவிப்பு வெளியானது.
(நினைவுகள் சுழலும்...)
No comments:
Post a Comment