Tuesday 5 April 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 34



= வை.ரவீந்திரன்

தமிழக சட்டப்பேரவைக்கு 1991ல் தேர்தல் நடந்தபோது, பாராளுமன்றத்துக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஆயத்தமாக தொடங்கின. அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்தன. ‘எம்ஜிஆர் பார்முலா’ படி சட்டப்பேரவைக்கு அதிக தொகுதிகளில் (168) அதிமுகவும் பாராளுமன்றத்துக்கு அதிக தொகுதிகளில் (26) காங்கிரசும் போட்டியிட்டன. 

 திமுக அணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா தளம் கட்சியும் இடம் பெற்றன. அப்போது, ஜனதா தளம் கட்சியின் தலைவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தார். மேலும், ஜெயலலிதாவுடன் கருத்து மோதலால் அதிமுகவில்  வெளியேறிய திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரும், தாயக மறுமலர்ச்சி கழகம் நடத்தி வந்த நடிகர் டி.ராஜேந்தரும் திமுக அணியில் இணைந்தனர்.

ஆட்சிக் கலைப்புக்கு நியாயம் கேட்டு திமுக பிரச்சாரம் செய்தது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாகவும் அதிமுக கூட்டணி பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில், பாராளுமன்றத்துக்கு முதல்கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு 1991 மே 20ம் தேதி அன்று வாக்குப்பதிவு முடிந்தது. 




அதற்கு மறுநாளில் தேசத்தையே உலுக்கிய கோர சம்பவம் ஒன்று, தமிழ் மண்ணில் நடந்தது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மே 21 அன்று சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தல் ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. 




அதன்படி, ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. ராஜீவ் படுகொலையால் எழுந்த அலையில், 225 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 164 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. காங்கேயம், பர்கூர் என இரண்டு தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழக முதல்வராக தேர்வானார். 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி தமிழக முதல்வர் பதவியை ஏற்றபோது அவருக்கு வயது 43. தமிழகத்தில் மிக இளம் வயதில் முதல்வர் பதவியேற்ற பெருமை ஜெயலலிதாவையே சேரும்.



திமுக கூட்டணிக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சென்னை துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கருணாநிதி, அந்த பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக இணைப்பை எதிர்த்த பி.எச்.பாண்டியன், சுயேச்சையாக சேரன்மாதேவி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த சட்டப்பேரவை தேர்தலில்தான் முதன் முறையாக பாமக களம் இறங்கியது. அந்த கட்சி சார்பாக பண்ருட்டி தொகுதியில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவை தேர்தலுடன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து 39 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றது. மத்தியில் காங்கிரஸ் சார்பாக பிரதமரானார் பி.வி.நரசிம்மராவ்.

(நினைவுகள் சுழலும்)

No comments: