Monday 4 April 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 30



எலக்சன் ரீவைண்டு ... 30
=========
மத்தியில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிராக போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், 1989ம் ஆண்டு ஜனவரி 21ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. தமிழக தேர்தல் களம் சுறுசுறுப்பானது. இந்த தேர்தலில் தமிழகம் 4 முனை போட்டியை கண்டது. தேர்தலின்போது, நான்கு அணிகளுமே சம பலத்துடன் காணப்பட்டன.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் வேறு சின்னத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுகவின் இரண்டு அணிகளும் இருந்தன. இறுதியாக ஜானகி தலைமையிலான அணிக்கு (அதிமுக ஜா) இரட்டை புறா சின்னம் ஒதுக்கப்பட்டது. அதிமுக (ஜா) தலைமையிலான கூட்டணியில் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்தது. ஜானகி அணி 175 இடங்களிலும், சிவாஜி கட்சி 50 இடங்களிலும் போட்டியிட்டன.

ஜெயலலிதா தலைமையிலான அணி (அதிமுக ஜெ) ‘சேவல்’ சின்னத்தை பெற்றது. ஜெயலலிதா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெற்றது. அதிமுக (ஜெ) மட்டும் 198 தொகுதிகளில் போட்டியிட்டது. 



ஜி.கே.மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் தா.பாண்டியனின் கம்யூனிஸ்ட் இணைந்தது. அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் 214 தொகுதிகளில் போட்டியிட்டது. எப்பாடுபட்டாவது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வரும் எண்ணத்தில் 14 முறை தமிழகம் வந்து சென்றார், பிரதமர் ராஜீவ்.


ஏற்கனவே, தேசிய அளவில் ‘தேசிய முன்னணி’யில் இணைந்திருந்த திமுக, அந்த பெயரிலேயே கூட்டணி அமைத்தது. கருணாநிதி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இரா.செழியன் தலைமையிலான ஜனதா கட்சி இடம் பெற்றன. திமுக மட்டும் 202 தொகுதியில் போட்டியிட்டது.   







இதற்கிடையே, ஜெயலலிதா அணிக்குள் சில மாதங்களிலேயே குழப்பம் ஏற்பட்டு நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், ராசாராம் ஆகிய 4 மூத்த தலைவர்களும் வெளியேறினர். அதிமுக (நால்வர் அணி) என்று அழைக்கப்பட்ட அந்த அணியும் ‘தென்னை மரம்’ சின்னத்தில் களமிறங்கியது. 

‘உதிர்ந்த உரோமங்கள்’, ‘கறந்த பால் மடி புகாது’, ‘கருவாடு மீன் ஆகாது’ என்பது போன்ற பிரபல விமர்சன வசனங்களுடன் நடைபெற்ற 1989 சட்டப்பேரவை தேர்தலின் முடிவு எப்படி அமைந்தது ...?

(நினைவுகள் சுழலும்) 

No comments: