Wednesday 24 December 2014

மனித நேயர் எம்ஜிஆர்


 வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

இந்த கேள்விக்கு பதில் காண சரித்திர புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் அனைத்து பெயர்களும் வரலாறாக அறிந்தவை மட்டுமே. நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்து, மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை மக்கள் மறக்காமல் தாமாகவே முன் வந்து நினைவை போற்றுகின்றார்கள் என்றால் அந்த பெருமைக்கு சொந்தக்காரர், எம்ஜிஆர்.

கொடிது கொடிது இளமையில் வறுமை. அந்த வறுமையின் கொடூரம் தாங்காமல் இலங்கை, பாலக்காடு, சேலம், கோவை என குடும்பத்துடன் புலம் பெயர நேரிட்ட அவலத்தை சந்தித்தவர். அந்த துயர வடுக்களை அனுபவித்த காரணத்தாலேயே வாடிய மக்களை கண்ட போதெல்லாம் துயர் துடைக்க கரம் நீட்டியவர். தமிழக ஜனநாயகத்தின் வரலாற்றை எழுதினால் அவருடைய பெயரை நிச்சயமாக தவிர்க்க முடியாது. சினிமா கவர்ச்சியால் ஆட்சியை பிடித்தவர், அட்டை கத்தி வீரர் என வசைமாரி பொழிந்தவர்கள் தங்கள் உள்மனதை தொட்டுப் பார்த்தால், அவரது நீடித்த புகழுக்கு அது மட்டுமே காரணமல்ல என்ற உண்மை புரியும்.

மனித நேயம் என்பது எம்ஜிஆரின் ரத்தத்தில் ஊறிய குணம். 1940களில் சாதாரண நாடக நடிகராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்கு உதாரணம். நாடக கம்பெனியில் இருந்தபோது தேநீர் அருந்தும் வேளைகளில் தினமும் எம்ஜிஆரே தேநீருக்கு பணம் அளிப்பதை பார்த்த வி.கே.ராமசாமி, ‘ஏம்பா, தினமும் நீயே கொடுக்கிறாய்..?’ என்று கேட்டபோது, ‘எங்கள் வீட்டில் நானும் என் அண்ணனும் சம்பாதிக்கிறோம். ஆனால், நம்முடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பாத்தியம் மட்டுமே. அவர்கள் கொண்டு செல்லும் பணத்தை எதிர்பார்த்து குடும்பமே காத்திருக்கும்’ என்று பதிலளித்தவர், எம்ஜிஆர். நாடக கம்பெனியில் 4 ரூபாய் சம்பாதித்தபோது இருந்த மனித நேயத்தை லட்சங்களில் சம்பாதித்தபோதும் பட்டுப்போகாமல் காப்பாற்றியதால் தான் கோடிக்கணக்கான மக்களின் நாயகராக உயர்ந்து நிற்கிறார்.

திரை உலகிலும் தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால் தான், தனது முயற்சிகளை ‘நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்’ என சொந்த பணத்தைக் கொண்டே செய்து பார்த்தவர். மேலும், தனக்கு சேர வேண்டிய பணம் வந்தால் போதும் என கருதாமல் தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றிய கடைக்கோடி தொழிலாளி வரை சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டதா என்பதை உறுதி செய்யும் குணம் தான் அரசியல் வரை அவரை அழைத்து வந்தது.
திரைப்படம் என்பது மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலேயே புகைப் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தவர். வில்லனை கை, கால்களை வெட்டி திருத்தாமல் அடி, உதையிலேயே திருத்துவது அவரது பாணி. இது என்ன சினிமாத்தனம் என்று கேட்கலாம். நிஜத்தில் எவ்வளவோ நடந்தாலும், எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதனை திருத்துவதற்கு அதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து. ஆரம்பத்தில் தனது கதாநாயகியாக நடித்த பெண்களுக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் பின்னாளில் ஏற்பட்டபோது, அவர்களின் கதாபாத்திரத்தை அண்ணி கதாபாத்திரமாக மாற்றியவர். (உதாரணம்=உரிமைக் குரல்)

திரைப்படத்தில் தனக்கென இப்படி சில கொள்கைகளை பின்பற்றியது மட்டுன்றி, 1952ல் தான் இணைந்த திமுகவின் கொள்கைகளையும் படங்களில் புகுத்தினார், அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தும் கூட. அந்த துணிச்சல், வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா? அச்சம் என்பது மடமையடா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு..., உன்னை அறிந்தால்... தூங்காதே தம்பி தூங்காதே... புதியதோர் உலகம் செய்வோம்... இப்படி அவரது பாடல்களை கேட்டால் போதும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களை படித்து முடித்த உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும்.

எம்ஜிஆரின் இந்த குணங்கள் தான், அரசியலிலும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் இருந்து மாநில கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புக்கு 1977ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எம்ஜிஆர். மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். இது முரண்பாடாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘நான் தனி ஆள் அல்ல. எனது விருப்பு வெறுப்பை பார்க்க. ஒரு மாநில முதலமைச்சர். எனவே, மாநிலத்துக்கு தேவையான உதவிகளை எப்படி பெற முடியுமோ அதை எப்படியும் பெறுவேன்’ என்பது அவரது பதிலாக இருந்தது. அந்த எண்ணம் தான் தமிழக மக்களிடம் இன்னமும் நிரந்தர முதல்வராக எம்ஜிஆரை அமர்த்தி வைத்திருக்கிறது.

அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பவரா? என்ற சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு, ‘ராணுவம் வந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என மத்திய அரசுக்கு துணிச்சலாக சவால் விடுத்து மறைமுகமாக பதிலளித்தவர். இலங்கையில் உச்சகட்ட இனக்கலவரம் நடைபெற்றபோது போராளிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்ததோடு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னைக்கு அழைத்து தனது சொந்த பணம் ரூ.5 கோடியை வழங்கியவர். பின்னாளில், இந்திரா காந்தி மூலமாக புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க உதவியவர்.

அரிசி, உணவு, போக்குவரத்து என சாதாரண ஏழை மக்களுக்கு தேவையான அனைத்தையும் மிக நிறைவாகவே பூர்த்தி செய்தது, எம்ஜிஆரின் 10 ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சி. எம்ஜிஆர் போலவே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து கோலோச்சி விடலாம் என பலரும் கருதுகின்றனர். சிலர் முயற்சித்தும் பார்க்கின்றனர். அவர்கள் எல்லாம், ‘மனித நேயம், ஏழைகளின் மீதான அன்பு, எதிரியாக இருந்தாலும் அரவணைக்கும் குணம், தன்னம்பிக்கை, நாடி வந்தோருக்கு வாரி வழங்குதல், தேடி வந்தோருக்கு பசிப்பிணி போக்குதல் என நினைத்து பார்க்க முடியாத மாபெரும் குணங்களே அவரது நிரந்தர வெற்றிக்கு காரணம் என்பதை அறியாதவர்கள்.

இன்றளவும் தமிழக அரசியல் அரங்கில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இருக்கும் மரியாதை அளவிட முடியாதது. அவரது சமாதியை தினந்தோறும் சுற்றி வணங்கிச் செல்லும் மக்களே அதற்கு சாட்சி.

= வை.ரவீந்திரன்




No comments: