Sunday, November 20, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 18

அது, அருமையான ஒரு அதிகாலைப்பொழுது. இயக்குநர் லிங்குசாமியின் புதிய திரைப்பட வேலைகளுக்காக புதுச்சேரி வந்திருந்த எழுத்தாளர் எஸ்.ரா., என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரது புதிய புத்தகம் வெளியாகி இருந்த தருணம். கி.ரா அவர்களை நேரில் பார்த்து தனது புத்தகத்தை தர வேண்டும் எனவும், அவரது வீட்டுக்கு அழைத்து செல்ல முடியுமா எனவும் கேட்டார். கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன? அன்று மாலையே எனக்கு அந்த அருமையான, வேறு யாருக்கும் கிடைக்காத அந்த தருணம் வாய்த்தது.

புதுச்சேரியில் நான் குடியிருந்த வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தான் கி.ரா. வீடு. அரசு ஊழியர் குடியிருப்பில் இருக்கிறது. அதே குடியிருப்பில், கி.ரா வீட்டில் இருந்து இரண்டு மூன்று தெருக்களுக்கு அடுத்தாற்போல் மாடியில் எழுத்தாளர் பிரபஞ்சன் குடியிருந்தார்.
கடற்கரை பகுதியில் உள்ள அதீதி ஓட்டலில் தங்கி இருந்த எஸ்.ரா.வை எனது பைக்கில் அழைத்துக் கொண்டு கி.ரா. வீட்டுக்கு சென்றேன். தமிழகத்தின் மிகப் பிரபலமான இரண்டு எழுத்தாளர்கள், அவர்களுடன் நான் மட்டும். அவர்களின் இரண்டு மணி நேர நீண்ட உரையாடலின்போது, நான் கேட்ட விஷயங்களை மட்டுமே குட்டியாக ஒரு புத்தகம் எழுதலாம்.கோபல்லபுரம் தாத்தா கி.ரா, தனது இளமை பருவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டது, ஆங்கிலேய மருத்துவரிடம் சிகிச்சை பெற்றது, புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியராக வந்து அங்கேயே குடியேறியது என ஏராளமான தகவல்களை கூறினார். அந்த காலத்தில் எல்லாம் ஊர்களுக்கு எப்படி பெயர் வைத்தார்கள் என வேறொரு தளத்தில் அவரது உரையாடல் திரும்பியது சுவாரஸ்யம். புதுச்சேரிக்குள் உள்ள பதஞ்சலி முனிவர் சிலை, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் சிலை (மரத்தால் ஆனது) எனவும் உரையாடல் நீண்டது.

இந்த உரையாடலின்போது, எஸ்.ரா. கூறிய அனுபவங்கள் தனி. அவர் தேசாந்திரி என்பது அனைவரும் அறிந்த விஷயம். வட மாநிலம் ஒன்றில் மாவோயிஸ்ட் நிறைந்த ஒரு மலைப்பகுதி கிராமத்துக்கு சென்று வந்த அனுபவங்களை எஸ்.ரா. பகிர்ந்து கொண்டார். அந்த பகுதி மக்களின் கலாச்சாரம், வரவேற்பு முறை, புதிய விருந்தினர்களை பற்றிய தகவல்கள் உடனடியாக மாவோயிஸ்டுகளின் கவனத்துக்கு செல்வது என அவரது தகவல் சுரங்கம் விரிந்தது. கிராமங்களுக்கு பெயர் வைப்பது பற்றிய உரையாடலின்போது, காஷ்மீர் எல்லையையொட்டி சில கிராமங்களுக்கு தமிழ் பெயர்கள் இருப்பதை குறிப்பிட்டார். தமிழர்கள் யாரேனும் அங்கு வரை வியாபாரத்துக்கு சென்றிருக்கலாம் எனவும் எஸ்.ரா. கூறினார்.

இரண்டு பெரிய எழுத்து இமயங்களின் உரையாடலும், எழுதப்படாத இரு புத்தகங்களை படித்து முடித்த திருப்தியை அளித்தது. அதன்பிறகு, ‘தி இந்து‘ நாளிதழில் வெளிவந்த ஒரு தொடரின் கட்டுரைக்காக மானா.பாஸ்கரன் சார் கேட்டுக் கொண்டதற்காக ஒரு முறை கி.ரா. அவர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த இரண்டு சந்திப்புகளையும் அப்போதே குறிப்புகளாக எழுதி வைத்திருந்தேன், விரிவான கட்டுரை எழுதலாம் என்ற எண்ணத்தில். ஆனால், குறிப்புகள் காணாமல் போனதாலும், அப்போதைய வேலைப் பளுவாலும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது.

அப்புறம், கி.ரா வீட்டில் அவரை சந்தித்து விட்டு அதீதி ஓட்டலில் எஸ்.ரா அவர்களை கொண்டு விடுவதற்காக திரும்பியபோது, சந்திப்பு பற்றி பேசியபடியே வந்தோம். அப்போது, எஸ்.ரா. கூறிய வார்த்தைகள், ‘இப்போது 90 வயது தாண்டிய முதுபெரும் தமிழ் எழுத்தாளர்கள் இருவர் மட்டும் தான். ஒருவர் கி.ரா., மற்றொருவர் கலைஞர்‘. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
(அனுபவம் இனிக்கும்)
Post a Comment