Tuesday 8 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 13

புதுச்சேரியில் என்னை கவர்ந்த மற்றொரு விஷயம், இயற்கை உணவு. எங்கள் சொந்த மாவட்டத்தில் கூட, இந்த அளவுக்கு இயற்கை உணவையோ பசுமையையோ இப்போது பார்க்க முடியவில்லை. ஆனால், புதுச்சேரி அப்படி இல்லை. நகரை சுற்றிய புறநகர் பகுதி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாய பொருட்கள் வருகின்றன. திருக்கனூர், பண்டித சோழ நல்லூர், பாகூர் போன்ற பகுதிகளில் பருவமழை சமயங்களில் கண்ணுக்கு பசுமையாக இருக்கும்.

புதுச்சேரியில் ஏராளமான உழவர் சந்தைகள் உண்டு. விவசாயிகளே நேரடியாக வந்து விற்பதால் மிக சல்லிசான விலையில் நாட்டு காய் வகைகளை ஏராளமாக வாங்கலாம். 100 ரூபாய் செலவில் ஒரு வாரத்துக்கான காய், கனிகளை வாங்கி விடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தென்னாற்காடு மாவட்டத்துக்கே உரித்தான உணவு வகைகள் மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வேர்க் கடலை, செடியில் இருந்து அப்படியே பறித்து வந்த தட்டை பயிறு, மொச்சை பயிறு என ஏராளமாக கிடைக்கும். கோடை காலங்களில், வீதிகளில் வெடித்த வெள்ளரிப்பழம் குவிந்து கிடக்கும். கோடையில் ஜூஸுக்கு ஏற்ற பழம் அது.

கம்பு, நாட்டு சோளம், கேழ்வரகு, சாமை, குதிரை வாலி, கம்பு போன்ற சிறு தானிய வகைகள் எல்லாம் புதுச்சேரியில் தான் எனக்கு அறிமுகமானது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் மினியேச்சராக இருக்கும் குபேர் மார்க்கெட், அதை சுற்றிய ரங்கபிள்ளை வீதி உள்ளிட்ட வீதிகளில் எல்லாம் பலவிதமான பொருட்கள் கிடைக்கும். ‘நானும் ரவுடிதான்’ படத்தின் ஒரு பாடலில் அந்த மார்க்கெட்டை பார்க்கலாம்.



கடலோர பூமியான புதுச்சேரியில் கடல் உணவுக்கும் பஞ்சம் கிடையாது. கடலுடன் ஆறு கலக்கும் நோணாங்குப்பம் கழிமுக பகுதியில் விரால், கெண்டை, தேளீ போன்ற மீன்களை உயிருடன் வாங்கலாம். தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் போன்ற சில இடங்களும் மீன்களுக்கு பிரபலம். தேங்காய் திட்டுக்கு அதிகாலை நேரத்தில் சென்றால் இறால், நண்டு போன்றவற்றை மொத்தம், மொத்தமாக வாங்கி வரலாம். சீசன் சமயங்களில் புதுச்சேரி கடலோர பகுதியில் குவியல் குவியலாக மத்தி மீன்கள் கிடைக்கும். கருவாடு மற்றும் கோழி தீவனத்துக்கு அந்த மீன் பிரசித்தம். கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வந்து அந்த மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம்.

குறைந்த செலவில் ஆரோக்கியமான உணவு. இதுதான், நான் அறிந்த புதுச்சேரி.
(அனுபவம் இனிக்கும்)

No comments: