Tuesday 8 November 2016

என்னைக் கவர்ந்த புதுச்சேரி - 11

சுற்றுலா செல்லும் பலருக்கும் புதுச்சேரியின் மிகச் சிறிய பரப்பிலான இடத்துக்கு தான் சென்று வருகிறோம் என்பது தெரியாது. கிழக்கு கடற்கரை சாலையில் மகாத்மா காந்தி சாலை முத்தியால்பேட்டை மணிக்கூண்டில் தொடங்கி அதீதி ஓட்டல், கடற்கரை சாலை, துறைமுகம், ரயில் நிலையம், பொட்டானிகல் கார்டன், அண்ணாசாலை, ராஜா தியேட்டர், ஆனந்தா இன் ஓட்டல் என அரை முட்டை வடிவில் ஒரு பகுதி. குறுக்காக நேரு வீதி, அனந்த ரங்க பிள்ளை வீதி உட்பட ஏழெட்டு வீதிகள். அதுதான், புதுச்சேரியின் முக்கியமான பகுதி. புல்வார் எனப்படும் பிரெஞ்சு கலாச்சாரம் மாறாத பகுதி.

கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த பிரெஞ்சியர்கள் முதலில் இறங்கியது, கடலோர கிராமமாக இருந்த இங்கு தான். சென்னை செயின்ட் தாமஸ் கோட்டை போலவே, பிரெஞ்சியர்களும் 200 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் செயின்ட் லூயி கோட்டை என ஒரு கோட்டையை கட்டி இந்திய பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். பின்னாளில், ஆங்கில பிரெஞ்சியர் இடையிலான நாடு பிடிக்கும் போட்டியில் அந்த கோட்டையை ஆங்கிலேயர் தரை மட்டமாக்கி விட்டனர்.

கல் குவியல்கள் நிறைந்த அழகிய கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில், பிரெஞ்சு கட்டிடங்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமை செயலகம், புதுவை அரசின் சின்னமான ஆயி மண்டபம், ரோமன்ட் ரோலன் நூலகம், அரசு பொது மருத்துவமனை, காவல்துறை தலைமை அலுவலகம், பிரெஞ்சு தூதரகம், புதுச்சேரியின் துறைமுகம், பல திரைப்படங்களில் தலை காட்டிய நீண்ட ஜெட்டி, கடல் காற்றை அனுபவித்துக் கொண்டே சிப் சிப்பாக மதுவை இறக்கும் வசதியுடன் கூடிய பால்கனிகள் நிறைந்த விடுதிகள் என சகலமும் நிறைந்த பகுதி. அருகில் உள்ள நேரு வீதி கடைத் தெரு பஜாரையும் சேர்த்தால் மொத்தம் 3 கி.மீ நீளம் 1 கி.மீ அகலம் மட்டுமே பரப்பளவு கொண்ட குட்டி சொர்க்கம்.

வங்கக் கடலை ஒட்டிய புல்வார் பகுதி மற்றும் அதன் நீட்சியாக இருக்கும் கடைத்தெருக்கள் நிறைந்த காந்தி வீதி, நேரு வீதி மற்றும் அதையொட்டிய நேர்க்கோடு வரைந்தது போன்ற தெருக்கள் ஆகியவையே புதுச்சேரியின் இதயம் போன்ற பகுதி. புதுச்சேரியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் எனது வார விடுமுறை தினமான ஞாயிற்று கிழமைகளின் பெரும்பாலான பிற்பகல் பொழுதுகளை களவாடியவை இந்த இடங்கள்தான். சென்னையில் இருந்த 15 ஆண்டு கால வாழ்க்கையில் மெரீனா சென்றதை விட, பல மடங்கு அதிகமாக புதுச்சேரி கடற்கரை மற்றும் புல்வார் பகுதிக்கு சென்றிருக்கிறேன், குடும்பத்துடன்.

இந்த பகுதிகளின் வடிகால் வசதி, சுத்தம் போன்றவை என்னை கவர்ந்தவை. 2015 இறுதியில் சென்னையே மூழ்கி கிடந்தபோது, அதற்கு சற்றும் குறைவில்லாத மழை, இங்கும் பெய்தது. ஆனால், புதுச்சேரி புல்வார் பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடந்ததை நான் பார்த்ததே இல்லை. 10 நிமிடம் மழை ஓய்ந்தால் போதும். தெருக்கள் பளீச். புல்வார் மட்டுமல்ல, புதுச்சேரியின் பெரும்பாலான மற்ற பகுதிகளிலும் கூட சிறப்பான வடிகால் வசதி. கிழக்கு கடற்கரை சாலையை ஓட்டிய கிருஷ்ணா நகர் போன்ற ஒரு சில இடங்களை தவிர.

கடற்கரையோர புல்வார் பகுதியில் ஏராளமான பிரெஞ்சியர்களையும் வெளி நாட்டினரையும், சுற்றுலா பயணிகளையும் பார்க்கலாம். புல்வாரில் உள்ள சிமெண்ட் சில்லுகளால் போடப்பட்ட தெருக்கள், தார் சாலைகள் மற்றும் அந்த பகுதியை பராமரிப்பதற்காக பிரெஞ்சு அரசிடம் இருந்து நிதி உதவி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்…

(அனுபவம் இனிக்கும்…)

No comments: