Tuesday 8 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி -- 12

புதுச்சேரியை நேரில் பார்த்து அறியாத ஒவ்வொருவரும் கோவா போன்ற பிம்பத்தை கற்பனை செய்து வைத்திருப்பார்கள். புதுச்சேரியில் எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் கூட, இது போன்ற எண்ணத்துடன் தான் வந்திருந்தார். எனது பைக்கில் சுமார் 3 மணி நேரம் நகரை சுற்றி காண்பித்ததும் அவரது எண்ணம் வடிந்து விட்டது. நகரை அழகிய சுற்றுலா தலமாக மாற்றலாம்.

ஆனால் வருவாய் பற்றாக்குறை, மத்திய அரசின் நிதி குறைப்பு போன்ற பல்லவியை ஆட்சியாளர்கள் பாடுவது வழக்கம். சுற்றுலா வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே தடுமாறிக் கொண்டிருந்தனர். வாரிய சேர்மனே (இப்போது அ.தி.மு.க. எம்எல்ஏ) இதை வருத்தமாக கூறியதும் வேதனை. இந்த நிலைமையை மாற்றலாம் என்பது எனது எண்ணம்.

நூற்றாண்டுகளை கடந்த தேவாலயங்கள், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அழகிய கடற்கரை, கடற்கரையோரத்தில் அழகழகான தங்கும் விடுதிகள், கடைத் தெருக்கள் இப்படி நகருக்குள் பலப்பல சுவாரஸ்யங்கள். கடலுடன் ஆறு கலக்கும் கழிமுக பகுதியில் சுண்ணாம்பாறு படகு குழாம். சொகுசு படகில் அரை மணி நேரம் பயணம் செய்து கடற்கரைக்கு சென்று பொழுது போக்கி விட்டு, மீண்டும் அரை மணி நேர பயணத்தில் திரும்பலாம். இது தவிர, அதிவேக படகுகளும் உண்டு. தமிழக எல்லை வரை விரிந்து கிடக்கும் ஊசுடு ஏரியிலும் இதுபோன்ற படகு சவாரி உண்டு. கூடவே, அழகழகான பறகைவளை பார்த்து ரசிக்கலாம். அதன் அருகில், தனியார் அம்யுஸ்மென்ட் பார்க் போகோ லேண்டு என புதுச்சேரியில் ஏராளம்.

தமிழக பகுதிக்குள் இருக்கும் ஆரோவில், ஆரோவில் கடற்கரை, பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர், மொரட்டாண்டி பாதாள பிரத்தியங்கிரா தேவி, சனீஸ்வரர் கோயில் தனி. கடற்கரையோரத்தில் சர்வதேச தரத்திலான சொகுசு ரிசார்ட்டுகளும் உண்டு. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இவ்வளவு ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கின்றன. சரி விஷயத்துக்கு வருகிறேன்.



புதுச்சேரிக்கு மிக அதிக அளவில் வருவாயை தரும் மது விற்பனையை, தமிழகம் போல அரசே ஏற்கலாம். 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில் தொடங்கி 15 ரூபாய் சாராய பாட்டில் வரை அங்கு விற்கப்படுகிறது. நகரம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கள், சாராய கடைகள் (1980களில் வெளியான தமிழ் படங்களில் காண்பிப்பார்களே அதே போன்ற கடைகள் தான்) ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அரசுக்கு 100 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், அவற்றின் விற்பனை ஆயிரம் கோடியை தாண்டும்.
உயர் ரக மதுபானக் கடைகள் ஏராளம் உண்டு. அவற்றின் உரிமங்களை புதுப்பிக்கும் வருவாய் மட்டுமே அரசுக்கு வருகிறது. ஆனால், அங்கு விற்பனையாகும் சரக்கு மதிப்பு பல ஆயிரம் கோடிகளை எட்டும். கள், சாராயம் மற்றும் மதுபான கடைகளை அரசே நடத்தினாலே ஓராண்டு பட்ஜெட்டை போடலாம். இப்போது, அரசிடமே சொந்த சாராய வடி ஆலை உண்டு. அமுதசுரபி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர, பேருந்து போக்குவரத்தையும் அரசுடைமை ஆக்கலாம்.

இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் யாரிடமும் அரசு கையேந்த தேவையில்லை. ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, குட்டி கட்சி, சிறிய கட்சி என பேதமில்லாமல் அனைவரின் வசம் தான் இவை அனைத்தும் இருக்கின்றன.…

(அனுபவம் இனிக்கும்…)

No comments: