Wednesday 16 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 16

இலக்கியம் வளர்ப்பதில் புதுச்சேரியை போன்ற நகரம் எதுவும் இல்லை. வெறும் 10 கி.மீட்டர் சுற்றளவிலான நகர எல்லைக்குள் ஏராளமான இலக்கிய அமைப்புகள் உண்டு. அவற்றுக்கு பெயர் வைப்பதிலும் ரசனையானவர்கள். குறளிசை கூடு, புதிமம் (திருக்குறள் அமைப்பு) என்பது போன்ற வித்தியாசமான பெயர்களை பார்க்க முடியும். இது தவிர, திருக்குறள் மன்றம், கம்பன் கழகம் போன்ற பெரிய அமைப்புகளும் உண்டு. வாராந்திர கூட்டம், மாதாந்திர ஆலோசனை, கவிதை வாசிப்பு, நூல் ஆய்வு என வித்தியாசமான நிகழ்வுகள்.
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் உள்ள பல்வேறு துறைகள், புதுச்சேரி தமிழ்ச்சங்கம், கம்பன் அரங்கம் போன்றவை அதிக அளவில் இலக்கிய சொற்பொழிவு அரங்கேறும் இடங்களில் முக்கியமானவை. இது தவிர, நகருக்குள் உள்ள ஓட்டல்களின் கருத்தரங்குகள், மினி ஹால்கள் போன்றவற்றிலும் அவ்வப்போது இலக்கிய கூட்டங்கள் களை கட்டும். நூல் அறிமுக கூட்டம், நூல் மதிப்புரை கூட்டம் ஆகியவற்றோடு பல்கலைக்கழக அரங்கம் போன்ற ஒரு சில இடங்களில் நவீன நாடக அரங்கேற்றங்களும் உண்டு. உண்மையில், புதுச்சேரியில் தமிழ் இலக்கியம் மிக நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.



இந்தியாவில் உள்ள நூற்றாண்டுகளை கடந்த ஒரு சில நூலகங்களில், ரோமன் ரோலண்ட் நூலகமும் ஒன்று. பிரெஞ்சியர்கள் மட்டுமே படிப்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நூலகம், பின்னாளில் பொதுமக்களும் படிக்கும் வகையில், ‘பிப்ளியோதிக் பிப்லிக்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் பிறகு, பிரான்சை சேர்ந்த பிரபல இலக்கிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான ரோமன் ரோலண்ட் பெயரில் மூன்று தளங்களில் மிகப் பெரிய பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்குள்ள புத்தகங்களில் சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள், மிகவும் அரிதானவை.



எழுத்தாளர்கள் வேர் பிடித்து வளரவும், கற்பனை சிறகுகளை எல்லையின்றி விரித்து பறக்கச் செய்யவும் புதுச்சேரி மண்ணும் வானமும் உதவி செய்பவை என்றால் மிகையான வார்த்தைகள் அல்ல. ஆன்மிக போதனைகளை அருளிய அரவிந்தர் தொடங்கி, பாரதியார் வழியாக இன்றைய கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், விடுதலை சிறுத்தைகள் பிரமுகரும் சிறந்த இலக்கியவாதியுமான ரவிக்குமார் வரை புதுச்சேரியில் எழுத்தாளர்கள், கவிஞர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா.
(அனுபவம் இனிக்கும்)

No comments: