Wednesday 16 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 17

புதுச்சேரியின் பழங்கால வரலாற்றை அறிவதற்கு உதவும் நூல்களில், ‘அனந்தரங்கப் பிள்ளை டைரி குறிப்புகள்’ முக்கியமானது. அடிப்படையில் தறி நூல் மற்றும் சாய வியாபாரியான அனந்தரங்கப் பிள்ளை, பிரெஞ்சு கவர்னர்களுக்கு தலைமை மொழி பெயர்ப்பாளராக பணி புரிந்தவர். அந்த சமயத்தில், தான் அறிந்த, கேள்விப்பட்ட, நேரில் பார்த்த ராஜாங்க விஷயங்களை டைரி குறிப்புகளாக எழுதி வைத்தார். அதுதான், இன்றளவும் புதுச்சேரியின் காலக் கண்ணாடி. 300 ஆண்டுகளுக்கு முன் சென்னை பெரம்பூரில் இருந்து புதுச்சேரிக்கு வியாபாரத்துக்காக குடியேறியவர் தான், அனந்தரங்கப் பிள்ளை.

சாதாரண தறி நூல் வியாபாரியாக வந்த ஒருவருக்கு அரசாங்கத்தின் மிக உயரிய பதவி வரை வழங்கி, அவரின் தினசரி டைரி குறிப்புகளையும் கூட, காலம் கடந்த அரிய பொக்கிஷமாக மாற்றும் இயற்கையான ரசவாத வித்தை நிறைந்த மண், புதுச்சேரி.

அத்தகைய பெருமை மிகுந்த இலக்கிய மணம் வீசும் மண்ணில் வாழ்ந்த நாட்கள், எனது (எங்களது) ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள். 15 ஆண்டுகளாக வெறும் பத்திரிகையாளராக, கட்டுரையாளனாக மட்டுமே இருந்த என்னை எழுத்தாளர் என்ற ஒரு நிலைக்கு உயர்த்தியதில் புதுச்சேரியை மறக்கவே முடியாது. எனது ஆதர்ச எழுத்தாளர்களில் முதன்மையானவரான எஸ்.ரா அவர்களின் அறிமுகமும் அங்கு இருந்தபோது கிடைத்தது எனது பாக்கியம். என்னுடைய புத்தகத்தின் நூல் அறிமுக, விமர்சன கூட்டத்துக்கு வந்து அவர் கவுரவித்ததும் மறக்க முடியாதது.



அந்த நிகழ்வுக்கு முழு முதல் காரணமாக இருந்தவர்களான புதுச்சேரி தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் முத்து, எனது அலுவலக சகாவும் மூத்த சகோதரருமான வில்லியனூரை சேர்ந்த செய்தியாளர் பாரதி, போட்டோகிராபரான அருமை தம்பி ஸ்டீபன் மற்றும் உறுதுணையாக இருந்த ஒவ்வொரு நண்பர்களும் எனது நன்றிக்குரியவர்கள். புதுச்சேரி பற்றிய நினைவு எழும்போதெல்லாம் எனது நினைவலைகளில் இவர்களின் பெயர்களும் தவழ்கிறது. இந்த நினைவலைகளுக்குள், இரண்டு பெரிய எழுத்து இமயங்களை ஒரே சமயத்தில் சந்தித்த ஒரு பொன்மாலை பொழுதும் நினைவுக்கு வந்து செல்கிறது.
(அனுபவம் இனிக்கும்)

No comments: