Tuesday 8 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 10

சுத்தமான காற்று, மாசு இல்லாத நிலத்தடி நீர் இவை எல்லாம் புதுச்சேரியின் அடையாளங்கள். நகரை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பெரும்பாலானவை விவசாய பூமி. தஞ்சையை ஆண்ட சோழ பேரரசர்களின் ஆட்சிப்பரப்பின் எல்லை, புதுச்சேரி வரை விரிந்து கிடந்துள்ளது. அதனால் தானோ என்னவோ, பாகூர் ஏரி, ஊசுடு ஏரி என ஏரிகளுக்கு பஞ்சமில்லை. பாகூர், பண்டித சோழ நல்லூர், திருக்கனூர் போன்ற ஊர்களெல்லாம் பசுமை போர்த்தி இருப்பதை பார்த்திருக்கிறேன்.

சங்கராபரணி ஆறு புதுச்சேரி வழியாக கடலில் கலக்கிறது. புதுச்சேரிக்குள் பாயும் ஆறுகளில் கூட பல இடங்களில் படுகை அணைகள் (தடுப்பணை அல்லது செக் டேம்) கட்டி இருக்கிறார்கள். ரங்கசாமியின் முந்தைய ஆட்சி காலங்களின் சாதனைகளில் இதுவும் ஒன்று. நிலத்தடி நீர் மட்டம் நன்றாக இருப்பதால் தண்ணீருக்கு (குடிநீருக்கு) பஞ்சமே இல்லை. தினமும் மூன்று வேளை சராசரியாக 2 மணி நேரம் வீதம் குழாயில் தண்ணீர் விடுவது வழக்கம். முதலாவது தளம் வரை அந்த தண்ணீர் தானாக மேலேறி வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

புறநகரம் மட்டுமல்லாமல் புதுச்சேரி நகரும் கூட, குளுமையானது தான். ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தது இரண்டு மரங்களையாவது வளர்க்கின்றனர். இது தவிர, பூஞ்செடிகளும் வளர்ப்பது உண்டு. சாலையோர மரங்கள் தனி கணக்கு. ரயில் மற்றும் பேருந்து நிலையம் அருகிலேயே மிகப்பெரிய தாவரவியல் பூங்கா. இதன் வயது, 300 ஆண்டுகளுக்கு மேல்.

புதுச்சேரி மண்ணில் முதன் முறையாக அடி எடுத்து வைத்த சமயத்தில் தான், ‘தானே’ புயல் உக்கிரதாண்டவமாடி இருந்தது. பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கிடந்தன. வீடுகளில் தென்னை மரங்கள் முறிந்து கிடந்தன. சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் மாளிகை அருகில் உள்ள பாரதி பூங்காவும் உருக்குலைந்து கிடந்தது. பல ஆயிரம் மரங்கள் முறிந்து விட்டதாக அலுவலக சகாக்கள் என்னிடம் கூறியபோது மிகை என்றே எண்ணினேன். நாளடைவில் நகரை சுற்றி வந்தபோது அது பொய்யில்லை என்பது புரிந்தது.

தானே புயலின் பாதிப்பு சில மாதங்கள் தான் நீடித்தது. அரசும் மக்களும் உடனடியாக மரங்களை நடத் தொடங்கியதன் விளைவை 5 ஆண்டு கழித்து பார்க்க முடிந்தது. இப்போது மீண்டும் ஜொலிக்கும் பாரதி பூங்கா, புத்துணர்ச்சியுடன் மலர்ந்திருக்கும் தாவரவியல் பூங்கா எல்லாம் ஒரே நாளில் சாத்தியமில்லை. புதுச்சேரி மக்கள் மற்றும் அரசின் முயற்சியின் பலன். அரசு ஊழியர்களுக்கும் கூட அதில் பங்கு உண்டு. கடமையாக கருதாமல் ஆத்மார்த்தமாக பணிகளை செய்பவர்கள். அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் பற்றி விரிவாக எழுதலாம்.

என்னுடைய வாழ்வில் புதுச்சேரியின் செழுமையையும் வற்றாத தண்ணீர் வளமையையும் மறக்கவே முடியாது. சொந்த ஊரில், எனது சிறிய வயதில் கூட இதுபோன்ற பசுமையை நான் பார்த்து அனுபவித்தது இல்லை. இப்படிப்பட்ட புதுச்சேரியில், நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் கடல்நீர் உட்புகுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், அங்குள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் முயற்சியில், அரசு பள்ளி ஆசிரியரும் எனது நலனில் அக்கறை கொண்டவருமான ராம் மூர்த்தி போன்றோரை நிர்வாகிகளாக கொண்ட செம்படுகை நன்னீரகம் (பெயரே எவ்வளவு இனிமை) போன்ற சுற்றுச் சூழல் அமைப்புகள் குரல் கொடுத்து வருவது ஆறுதல்.

(அனுபவம் இனிக்கும்…)

No comments: