பிரியமானவர்களை மருத்துவமனை படுக்கையில் பார்ப்பது மிகவும் கொடுமை. அது போன்ற அனுபவமும் புதுச்சேரியில் எனக்கு வாய்த்தது. அங்கு சென்ற சில மாதங்களிலேயே முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட எனது தந்தை, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 45 நாள், எனக்கு மருத்துவமனையில் தான் இரவு வாசம். அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு, இரவு 11 மணிக்கு ஜிப்மர் சென்று, வார்டின் வெளிப்பகுதியில் உறவினர்கள் தங்குமிடத்தில், தரையில் பெட்ஷீட் விரித்து படுத்துக் கொள்வேன். மிகத் தீவிரமான பாதிப்பில் இருந்து 10 நாளில் அவர் மீண்ட பிறகு, அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனை ஊழியர்கள் எழுப்புவார்கள். வார்டுக்குள் சென்று தந்தையை எழுப்பி, வீல் சேரில் அமர வைத்து, அவரை குளிப்பாட்டி மீண்டும் பெட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 7 மணிக்குள் டிபனும் ஊட்டி விடுவேன். டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வந்து சென்ற பிறகே, வீட்டுக்குச் சென்று குளிப்பது, காலை உணவு போன்ற எனது வேலைகள் தொடரும்.
மருத்துவமனையில் இதுபோன்று கழிந்த எனது நாட்களில் பலவும் கசப்பானவை. எத்தனை நோயாளிகள், எத்தனை உறவினர்கள், ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை சோகங்கள். சேலம் மாவட்ட எல்லையோர கிராமத்தில் இருந்தெல்லாம் உள் நோயாளியாக வந்திருந்தனர். ஒருநாள், எனது தந்தையின் பக்கத்து படுக்கையில் இருந்த 45 வயது நிறைந்த ஒருவருக்கு தீவிர மூச்சிறைப்பு. வென்டிலேசன் உதவியோடு அவரை எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு சென்றனர். சில மணி நேரத்தில் நன்றாக திரும்பி வந்தார். ஆனால், மறுநாள் ஹீ நோ மோர். 45 நாட்களில் இதுபோன்று பல அனுபவங்கள்.
இறைவனையோ, நம்மை மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதையோ மறுப்பவர்களும் கூட, இது போன்ற அனுபவத்தை பார்த்தால், அவர்களையும் மீறி, நம்மை எல்லாம் மிஞ்சிய எல்லாம் வல்ல சக்தி ஒன்று இருப்பதை நிச்சயமாக உணருவார்கள்.
ஓரளவுக்கு உடல்நிலை தேறிய பிறகு, பிசியோதெரபி மட்டுமே தேவை என்ற நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட எனது தந்தை, வீட்டுக்கு வந்த ஒரு வாரத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்ததை மறக்க முடியாது. கண் எதிரிலேயே உயிர் பிரியும் கணத்தை, வாழ்க்கையில் முதன் முதலில் அன்று தான் நேரில் பார்த்தேன். குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், நான், எனது மனைவி, அண்ணி மூவரின் முன்பாக அவரது சுவாசம் மெதுவாக அடங்கிய தருணம், ஒரு வித சப்தத்துடன் வெளியேறிய அவரது கடைசி மூச்சு, நீண்ட நாள் என்னை உறங்க விடாமல் செய்தது. சித்தர்களின் பூமியான புதுச்சேரியில் தான், எனது தந்தையின் இறுதி சடங்குகளும் நடந்தன.
நெல்லையில் பிறந்து, சென்னையில் குடியேறி, பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கே சென்று 73 வயது வரை வாழ்ந்த எனது தந்தை, தனது இறுதி மூச்சு புதுச்சேரியில் அடங்கும் என எதிர்பார்த்திருப்பாரா…? இது(இவ்வளவு)தான் மனித வாழ்வு…
(அனுபவம் இனிக்கும்)
No comments:
Post a Comment