Wednesday 30 November 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 20

ஆயிரமாண்டுகளை கடந்த அதிசயம் ஒன்றும் புதுச்சேரியில் இருக்கிறது. அது வில்லியனூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கோவிலின் கோபுரங்களை, பிரெஞ்சியர் காலத்தின்போது பீரங்கிகளை நிறுத்தி வைக்க பயன்படுத்தி உள்ளனர். புதுச்சேரியின் பிரெஞ்சிந்திய பகுதிக்குள் ஆங்கிலேயர் நுழையாமல் தடுக்க பாதுகாப்பு அரணாக உதவி இருக்கிறது. அதனாலேயே, இந்த கோவிலுக்கு ஏராளமான திருப்பணிகளை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். கோவிலுக்கு பிரான்சில் இருந்து பெரிய மணி ஒன்றும் வரவழைத்து தந்தனர்.

சமீபத்தில், கும்பாபிஷேக பணிகளுக்காக கோவிலை புதுப்பித்தபோது நிலவறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. சோழர்கள், பிரெஞ்சியர் என காலங்களை கடந்து தற்போது வரை கம்பீரமாக அருள் பாலித்து கொண்டிருக்கிறார், திருக்காமீஸ்வரர்.



வில்லியனூர் அருகிலேயே திருக்காஞ்சியில் உள்ள சிவன் கோவில் விசேஷமானது. சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்த கோவிலின் சிவ லிங்கம், மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. கங்கை வராக நதீஸ்வரராக சிவ பெருமான் வீற்றிருக்கும் இந்த தலம், பித்ரு தோஷத்துக்கு பிரசித்தி பெற்றது. காசியை விட, மிகச் சிறந்த புண்ணிய தலம் திருக்காஞ்சி என கூறுவது உண்டு. நான் அங்கிருந்த சமயத்தில் தான், இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்தது. அகத்தியர் வழிபட்டதாக கருதப்படும், சிவ லிங்கத்தை கும்பாபிஷேக தருணத்தில் வழிபடும் பாக்கியம் வாய்த்தது.

மாசி மகம் அன்று இங்கு நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா மிகவும் சிறப்பானது. பவுர்ணமி தினமான அன்று, மூதாதையருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் செய்வது வழக்கம். தீர்த்தவாரி விழாவுக்காக சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்திருப்பார்கள். ஆறு முழுவதுமே, மனித தலைகள் தான் தென்படும். திருக்காஞ்சி மட்டுமல்ல, அன்றைய தினம் புதுச்சேரி நகரமே களை கட்டும்.

புதுச்சேரி மற்றும் திண்டிவனம், செஞ்சி, மயிலம் என சுற்றுப்பகுதியில் இருக்கும் ஏராளமான கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுச்சேரி வந்து அருள் பாலிப்பார்கள். கடற்கரை சாலை அருகே உள்ள வைத்திக்குப்பம் கடலோரத்தில், எல்லா சாமிகளையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். அன்னதானம், நீர் மோர் பந்தல், கடைத்தெரு என புதுச்சேரியே விழாக்கோலம் பூண்டிருக்கும். மாசி மக தீர்த்தவாரிக்காக உள்ளூர் விடுமுறை உண்டு. பவுர்ணமி தினத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதை, அன்றைய தினத்தில் புதுச்சேரியில் பார்க்கலாம்.
(அனுபவம் இனிக்கும்)

No comments: