Friday 27 January 2017

வெற்றியை நோக்கி … 7

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றம் என்பது போட்டி நிறைந்த உலகில் சவால்கள் நிறைந்ததாகவே உள்ளது. புத்திசாலித்தனத்துடன் கூடிய சாமர்த்தியமான பேச்சுக்கலையும் உங்களை சவால்களை எதிர்கொள்ளச் செய்யும். பேச்சுக்கலை என்று கூறியதும் கையில் பை, கழுத்தில் டை அணிந்த தோற்றத்துடன் விற்பனை பிரதிநிதிகளின் டிப்டாப் உருவம் மனதுக்குள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், அவர்கள் மட்டுமே பேச்சுக்கலைக்கு உதாரணம் அல்ல.

வீட்டுக்கு அருகே மளிகைக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சியும் ஒருவகையில் சிறந்த பேச்சுக்கலை வல்லுநர் தான். தகவல் தொழில் நுட்பம், மருந்து உற்பத்தி, வீட்டு உபயோக பொருள் தயாரிப்பு, மீடியா, கல்வித்துறை, ஆயுள் காப்பீடு, வாகன உற்பத்தி என எந்தவொரு துறையாக இருந்தாலும் ஒவ்வொரு நிறுவனமும் மார்க்கெட்டிங் டிவிஷன் என்ற ஒரு பிரிவை கண்டிப்பாக வைத்திருக்கிறது. அவ்வளவு ஏன்? வாடகை வீடு பிடித்து தரும் தரகர், ரியல் எஸ்டேட் விற்பனையாளர் என பல்வேறு பரிமாணங்களில் விற்பனை பிரதிநிதிகளை நாம் தினந்தோறும் சந்திக்கிறோம்.

உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள நகைக்கடைகளையோ அல்லது ஜவுளிக் கடைகளையோ அப்படியே ஒரு முறை சுற்றிப் பாருங்கள். பின்னர், அந்த காட்சிகளை உங்கள் மனதுக்குள் ஒழுங்குபடுத்திப் பாருங்கள். அந்த கடைகளில் சிறந்த கடை என ஏதாவது ஒரு கடையை தான் மக்கள் கருதி கூட்டமாக அலைமோதுகின்றனர், அல்லவா? இதற்கு காரணம் என்ன? அனைத்து கடைகளிலும் தங்கம் தான் விற்கின்றனர். ஜவுளியும் அதுபோன்றதே. பிறகு எப்படி? குறிப்பிட்ட அந்த கடையில் மட்டும் கூட்டம் குவிகிறது? அங்குதான் பேச்சுக்கலையும் தன்னம்பிக்கையும் உதவுகிறது. இப்போது நீங்கள் மனதுக்குள் நினைத்த கடையை மறுபடியும் ஒருமுறை அலசிப் பாருங்கள். குறிப்பிட்ட அந்த கடை உரிமையாளர், அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரிடம் மக்களை கவர்ந்து இழுக்கும் பேச்சுக்கலை இருப்பதை உணர முடியும்.

அனைவருக்குமே கம்ப்யூட்டர் பற்றி தெரியும். எவ்வளவு சிறப்பான சூப்பர் கம்ப்யூட்டராக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தான் அதற்கு நினைவு சக்தி உண்டு. இப்போது அனைவர் கைகளிலும் தவழும் ஆன்ட்ராய்டு, ஐபோன், ஐபாட் போன்றவற்றின் நிலைமையும் அதுவே. அவற்றின் நினைவாற்றல் நிரம்பி வழிய தொடங்கினால் செயல்பாடு மெதுவாகி விடும். சிஸ்டம் ஸ்லோவாகும் பட்சத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அதில் உள்ள தகவல்களை அழிப்பது கட்டாயமாகி விடும். ஆனால், மனித மூளை அப்படிப்பட்டது அல்ல. கம்ப்யூட்டரை விட சிறந்தது. மிகச்சிறந்த நினைவாற்றல் கொண்ட மனிதன் கூட மூளையின் மிகக் குறைந்த சதவீத பகுதியையே பயன்படுத்துவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மனித மனம் 360 டிகிரி கோணத்தில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றது. அந்த சிந்தனையின் இறுதி முடிவானது அந்த மனதுக்கு சொந்தக்காரருக்கு லாபமாகவே அமையும். கூடுமானவரை அதற்காகவே மனம் பாடுபடும். ஒரு பொருளை மறைத்து வைத்தால் அதை அரிதான பொருளாக மனம் கருதும். தடுக்கப்பட்ட பொருளை பெற மிகவும் விரும்பும். ஒருவர் கையில் இருந்து வலுக்கட்டாயமாக ஒரு பொருளை பறித்தால் அதை எப்படியாவது மீண்டும் அடைய வேண்டும் என்ற எண்ண விதை அவருடைய மனதில் ஊன்றப்படுகிறது. அதாவது, எதிரில் உள்ள நபரின் ஆசையானது அந்த கணமே தூண்டப்படுகிறது.

இதுவே, மனித மனதின் அடிப்படை. இதை மிகச் சரியாக புரிந்து கொண்டு வாதத் திறமையும் நன்றாக அமைந்து விட்டால் எதிராளியையும் வசப்படுத்தலாம். உலகில் மக்கள் போற்றும் முன்னணி தலைவர்கள் அனைவருமே பேச்சுக் கலையில் சிறந்தவர்களே. அடுத்தடுத்து அழகான சொற்களால் பலமுறை கூறப்படும் ஒரு பொய் கூட நாளடைவில் மெய் என்னும் ஆடையை அணிந்து கொள்ளும். அந்த அளவுக்கு பேச்சுக்கலை என்பது மிகவும் வலிமையானது.

அதுவும் எதிராளியை பேச்சில் வெல்வது என்பது மிகச் சாதாரணமானது அல்ல. ஏனெனில், அவரும் உங்களைப் போலவே எதிராளியை (உங்களை) வெல்லும் எண்ணத்தில் இருப்பவர் தான். அதனால் தான், நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் வாடிக்கையாளரின் கூற்றுக்கு உடன்படுவது போலவே முதலில் பேச வேண்டும். அவரது கருத்துகளை வரவேற்று ஆமோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது இருவருக்கும் இடையே ஒருவித புரிதலை முதலில்  உருவாக்கும்.

ஒரு கட்டத்தில், ‘அட. மிகவும் நல்லவராக இருக்கிறாரே? நம் இருவரின் அலைவரிசையும் ஒத்துப்போகிறதே?’ என எதிரில் இருப்பவர் கருதத் துவங்கும் தருணம் தான் நம்முடைய வெற்றிக்கான முதல் புள்ளி. அந்த தருணம் முதல் அவரது மனதை நமது கட்டுப்பாட்டில் எளிதாக கொண்டு வந்து விடலாம். அதன்பிறகு, நம்முடைய குறிக்கோள் என்னவோ? அதை மெதுவாக அவருடைய மனதுக்குள் புகுத்த தொடங்கினால் வேலை எளிது.

பேசுங்கள். மனம் விட்டு பேசுங்கள். உங்கள் குறிக்கோள் நிறைவேறும் விதத்தில் பேசுங்கள். ஏனெனில், வாயுள்ள பிள்ளை பிழைக்கும். நீங்களும் வாயுள்ள பிள்ளையாகி அடுத்தவர் மனதை படியுங்கள். பின்னர், அந்த மனதில் இடம் பிடியுங்கள். அதன் மூலமாக வெற்றியாளராகுங்கள்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: