Sunday 29 January 2017

வெற்றியை நோக்கி ... 13

புறங்கூறுதல் அழகல்ல...


எந்தவொரு பயணமாக இருந்தாலும் செல்லும் வழியை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். வெற்றி பயணத்துக்கும் அது பொருந்தும். பயணத்தை ஊக்குவிப்பவை எவை? பயணத்துக்கு தடைக் கற்களாக இருப்பவை எவை? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில் வெற்றிக்கான பயணத்தின் தடைக் கற்களில் முதன்மையானது, குறை காணும் வழக்கம். மனித மனத்தை குழப்பத்தில் ஆழ்த்தி கலங்கிய குட்டையாக மாற்றுவதில் இதற்கு முக்கிய இடம் உண்டு.

குறை காணும் குணத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நேரடியாகவே ஒருவரை அடுத்தடுத்து குறை கூறிக் கொண்டு இருப்பது. மற்றொன்று, மூன்றாவது நபரிடம் குறை கூறுவது. அதாவது, கோள் மூட்டுதல். இதை, புறங்கூறுதல் என திருவள்ளுவர் கூறுகிறார். மேலும், புறங்கூறாமையை வலியுறுத்தி ஒரு அதிகாரமே எழுதி வைத்துள்ளார். ஒரு குறளில், ‘புறம் கூறி பொய்யாக நடித்து உயிர் வாழ்வதை விட செத்து விடுவது மேலானது’ என மிகக் கடுமையாக கூறுகிறார். மற்றொரு குறளில், ‘பிறருடைய குறையை தேடிக் கண்டுபிடித்து மற்றவரிடம் கோள்  மூட்டுபவனின் குறையை மற்றவர்கள் கவனிக்காமல் விட்டு விடுவார்களோ?’ என கேட்கிறார். அந்த அளவுக்கு புறங்கூறுதல் என்பது மிகவும் மோசமான குணம்.

இந்த உலகில் உள்ள உயிரினம் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான மன நிலை உண்டு. இதுவரை யாருமே பார்த்திராத ஒரு பொருளை விவரித்து கூறுவதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் வெவ்வேறு வித வகையிலான கற்பனையிலேயே அந்த பொருளை காண்பார்கள். இதுபோலவே, ஒரே விதமான வேலையை இரண்டு வெவ்வேறு நபர்களிடம் அளித்தால் இருவரும் வெவ்வேறு வழிமுறைகளில் அந்த வேலையை செய்து முடிப்பதை காணலாம். உலகில் உள்ள எந்த ஒரு பாதையும் நேர் கோட்டில் இல்லை என்பதே உண்மை.  

மனிதர்களின் இந்த முரண்பாடான செயல்களே குறை காணும் வழக்கத்துக்கும் அடிகோலுகிறது. ஒருவருக்கு ஒருவர் தங்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமை, புரிந்து கொள்ளுதல் இல்லாமை, கருத்து வேற்றுமை போன்றவற்றின் விளைவே அடுத்தவருடைய குணம் மற்றும் செயல்களில் குறை காண்பதில் முடிகிறது. ‘மற்றவரின் குணங்களை நீ கணிக்க துவங்கினால், அவர் மீது அன்பு செலுத்த உனக்கு நேரம் இருக்காது’ என்கிறார், அன்னை தெரசா.

பொதுவாகவே, தன்னை பற்றி குறை கூறுபவரை ஒரு பொருட்டாகவே மற்றவர் எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில், ஒருவரை குறை கூறும்போது யாருடனும் ஒப்பிட்டு பேசுவது சரியான செயல் அல்ல. அதுபோன்ற வார்த்தைகள் கூறுபவருக்கு வேண்டுமானால் எளிதான வெறும் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், அதை கேட்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகவும் வேதனை அளிக்கும் சொற்களாக அவை அமையும். தீயினால் சுட்ட வடுவை விட நாவினால் சுட்ட வடு மிகவும் ரணம் மிகுந்தது அல்லவா? ஒருவரை மதிப்பீடு செய்து அவரை குறை காணும் உரிமை யாருக்குமே அளிக்கப்படவில்லை.

மற்றவரை மாற்ற நினைத்து அவரை குறை காண்பதை விட்டு விட்டு அவரை அவருடைய இயல்பிலேயே ஏற்றுக் கொள்ள முயற்சிப்பது நன்மை விளைவிக்கும். அதன் மூலமாக, அவர் நம் வசமாகக் கூடும். இதனால் தான், பிறருடைய நல்ல குணங்களை மட்டுமே நினைத்துப் பார்த்தால் வாழ்நாள் முழுவதும் இனிமையாக அமையும் என்கிறார், ரமண மகரிஷி.

குறை காணும் குணம் யாரிடம் இருக்கும் தெரியுமா? மோசமானவர்களிடம் மட்டுமே அது நிரம்பி வழிந்து கிடக்கும். இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத கதையின் கிளைக் கதை ஒன்று உண்டு. குருகுல பயிற்சியின்போது சமூக நிலைமையை கண்டறிந்து வருமாறு கவுரவர்களில் மூத்தவரான துரியோதனனையும், பாண்டவர்களில் மூத்தவரான தருமரையும் குரு அனுப்பி வைக்கிறார். இருவரும் தனித்தனியாக வெளியுலகை சுற்றிப் பார்க்க கிளம்பினர். சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தனர். ஓரிரு நாட்கள் இந்த பயிற்சி தொடர்ந்தது. குரு நிர்ணயித்த நாட்கள் முடிந்ததும் இருவருமே குருகுலம் திரும்பினர்.

அவர்களை குரு அழைத்தார். முதலில் தருமரை அழைத்து, ‘உலகை சுற்றிப் பார்த்தாயே? உனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? எனக்கு விளக்கமாக கூறு’ என்றார். ‘அய்யா, இந்த உலகம் மிகவும் மகிழ்ச்சியானது. உலகில் உள்ள மக்கள் அனைவருமே மிகவும் நல்லவர்களாக உள்ளனர். மாதம் தவறாது மழை பொழிகிறது என்றால் அந்த நல்லவர்களால் தான். மக்கள் அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர்’ என தருமர் பதிலளித்தார்.

அடுத்து துரியோதனனிடமும் அதே கேள்வியை எழுப்பினார், குரு. அதற்கு துரியோதனன், ‘அய்யா. இந்த உலகம் மிகவும் பொல்லாதது. எங்கு பார்த்தாலும் சூது, நயவஞ்சகம், பொறாமை. அப்பப்பா. மக்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மோசமானவர்களாகவே திரிகின்றனர். அதனால், மகிழ்ச்சி என்பதையே அறியாமல் இருக்கின்றனர்’ என்று பதிலளித்தான்.

இதில் இருந்து என்ன தெரிகிறது? இருவருமே ஒரே ஊரின் பகுதியை தான் சுற்றி பார்த்தார்கள். ஆனால், இருவரின் கண்களும் வெவ்வேறு விதமாக அந்த ஊரை பார்த்துள்ளது. ஒருவருடைய மனம் எப்படி இருக்கிறதோ? அதன்படியே வெளி உலகும் அவருடைய கண்களுக்கு புலப்படும் என்பதே இந்த கிளைக்கதை மூலமாக மகாபாரதம் நமக்கு கூறும் செய்தி.

குறை காணும் வழக்கத்தை ஒருவன் ஏற்படுத்திக் கொண்டான் என்றால், அவனிடம் திறமை இல்லை அல்லது திறமை குறைந்து கொண்டு வருகிறது என்பதே அர்த்தம். நேர் வழியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத ஒருவன் தான், தனது எதிராளியை மோசமான வகையில் மிகவும் அசிங்கப்படுத்துவதன் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என நம்புவான். 

எனவே, அடுத்தவர் மீது குறை காணும் போக்கை விட்டொழிப்பது என்பது வெற்றிக்கான ஏணியின் ஒரு படிக்கட்டு. அதே நேரத்தில், ஒருவன் தன் மீது குறைகளை கூறிக் கொண்டு இருந்தால் அதை பொருட்படுத்தாமல் இருப்பதும் வெற்றிக்கான சூட்சும மந்திரமே. குறைகளை விட்டொழிப்போம். வெற்றிப் பாதையில் முன்னேறுவோம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: