Sunday, January 29, 2017

வெற்றியை நோக்கி ... 12

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்

மூன்றெழுத்து. இந்த எழுத்துகளை உச்சரித்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். தமிழிலும், தமிழர் வாழ்விலும் மாற்றத்தையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவது மூன்றெழுத்து. மூன்றெழுத்துக்காக எதையும் செய்ய பெரும்பாலானோர் தயாராக இருக்கின்றனர். இப்படி, மூன்றெழுத்தின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஹலோ. வெயிட் வெயிட் வெயிட். ஏதேதோ கற்பனையில் மிதக்க வேண்டாம். வெற்றி, சாதனை, பணம், பதவி என்பது போன்ற மூன்றெழுத்துகள் தான் அவை. அந்த மூன்றெழுத்துகளை எப்படியாவது அடைய வேண்டும் என்பதில் அனைவருக்குமே ஒரு வித வேகம் இருப்பது உண்மை. இதில் அனைவருடைய மூச்சு காற்றும் அடங்கி இருக்கிறது. அட. வேகம், மூச்சு, காற்று மூன்றெழுத்து தொடருகிறதே. சரி. விஷயத்துக்கு வருவோம்.

அனைவருடைய உள்ளத்திலும் ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அதை அடைய உழைப்பது வழக்கம். அந்த இலக்கை அடைவதே வெற்றி கனியை பறிப்பது அல்லது வெற்றி கோட்டையை எட்டுவது என கருதுகின்றனர். ஆனால், எந்தவொரு இலக்கும் கைக்கெட்டும் தொலைவில் எளிதாக அமைந்து விடுவது இல்லை. அந்த இலக்கை நோக்கி நாம் தான் படிப்படியாக முன்னேறி செல்ல வேண்டும். நாம் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால் கடவுளும் நம்மை நோக்கி இரண்டடி எடுத்து வருவார், என்கிறது ஆன்மிகம். அது வெற்றியை நோக்கிய பயணத்துக்கும் பொருந்தும்.

எந்தவொரு வேலையாக இருந்தாலும் கடமை என்ற மூன்றெழுத்து இருந்தால் மட்டுமே வெற்றி என்ற மூன்றெழுத்து நம் வசப்படும். திரைப்படம், அரசியல், கல்வி, அறிவியல், விஞ்ஞான ஆராய்ச்சி என ஒவ்வொரு துறையிலும் உயர்ந்து நிற்கும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை உற்று நோக்கினால் அவர்களின் வெற்றிக்கு பின்னால் ஓய்வறியாத உழைப்பும் கடமை உணர்வும் இருப்பதை அறிய முடியும். இதையே, ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என பகவத் கீதை கூறுகிறது. அதாவது, எந்தவித எதிர்பார்ப்பும் பிரதிபலனும் இல்லாத கடமை உணர்வே வெற்றி கோபுரத்தை அலங்கரிக்கும்.

ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்யும் வேலையை கடமை என கூற முடியாது. கடன் என்று தான் கூற முடியும். பழங்காலத்தில் வேலை செய்தால் கூலியாக பணத்துக்கு பதில் நெல் அளந்து கொடுப்பது வழக்கம். அந்த கால கட்டத்திலும் கடனுக்கு வேலை பார்த்தவர்கள் இருந்துள்ளனர். இதனாலேயே, கட்டிட வேலையை முடித்து விட்டு கூலிக்காக புறப்பட்டுச் செல்லும் ஒரு தொழிலாளி, ‘நெல் கொண்டு போகும் வரை நில்லாயோ நெடுஞ்சுவரே’ என கூறியதாக பழமொழி உண்டு. அதாவது, நான் கூலியாக நெல் பெற்று செல்லும் வரையாவது நில் என தான் கட்டிய சுவரை பார்த்து அந்த தொழிலாளி கூறினானாம். இது எப்படி இருக்கிறது?
அவனுடைய வழித் தோன்றல்கள் இன்றும் கூட இந்த உலகில் இருக்கின்றனர். ஆனால், அவர்களால் வெற்றி என்னும் கோட்டையை அடைய முடியாது.
கடமை என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதற்கு ஒரு புராணகதையை உதாரணமாக கூறலாம். சிவபெருமான் தலையில் தும்பை மலர் சூடி இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ‘தும்பை மலர் சூடும் ஈசன் திருப்பாதமே...’ என்ற பாடலையும் கேட்டிருப்போம். இந்த தும்பை விஷயத்தில் கடமை உணர்வை வலியுறுத்தும் சுவாரஸ்ய பின்னணி உண்டு.

அந்த காலத்தில் தேவதாசி முறை இருந்தது. ஊர் தோறும் ஆடல் மகளிர் எனப்படும் விலைமாதர்கள் வசித்து வந்தனர். அதுபோன்ற ஒரு விலைமாது குலத்தில் பிறந்த ஒரு பெண், தனது பிறப்பு குறித்து தினந்தோறும் கவலையில் ஆழ்ந்திருந்தாள். ஆனாலும், தனது விலைமாது தொழிலில் மிகுந்த கடமை உணர்வுடன் செயல்பட்டாள். ஒவ்வொரு நாளும் யார் முதலில் தன்னிடம் வந்து பணம் தருகிறாரோ அவரையே அன்றைய தினத்தில் மகிழ்விப்பது அவளது வழக்கம். அதன்பிறகு, அரசரே வந்தாலும் பொன்னை கொட்டி கொடுத்தாலும் ஏற்பதில்லை என்பது அவளுடைய கொள்கை.

ஒருநாள் ஏராளமான காணிக்கையுடன் அந்த நாட்டு அரசர் அவளை நாடி வந்தார். ஆனால், அவர் வரும் முன்பே மிக வயதான கிழவர் ஒருவர், அந்த பெண்ணை நாடி வந்து பொருளை அள்ளி கொடுத்திருந்தார். எனவே, கிழவரை விட்டு விட்டு அரசரை அழைக்க அந்த பெண் விரும்பவில்லை. விலைமகளாக இருந்தாலும் கடமை மற்றும் கொள்கையில் இருந்து தவறாமல் கிழவரை வீட்டுக்குள் அழைத்தாள். அரசனின் பொன், பொருளை திருப்பி அனுப்பினாள்.

அதே நேரத்தில், மிகவும் வயதான அந்த கிழவரால் ஒரு அடி கூட நகர முடியாமல் தேவதாசி வீட்டு படுக்கையிலேயே விழுந்து விட்டார். முதுமை மற்றும் நோய் காரணமாக படுக்கையிலேயே அசைவற்று கிடந்த அந்த கிழவருக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்வதே தனது கடமை என அந்த பெண் கருதினாள். ஒருநாள் முடிந்து இரவு கடந்து மறுநாள் பொழுது புலர்ந்தது. அப்போது தான் தெரிந்தது. வந்தவர் கிழவர் அல்ல. வயோதிக உருவத்தில் வந்த சிவபெருமான்.

‘பெண்ணே, நான் கொடுத்த சிரமங்களை இந்த அளவுக்கு பொறுத்துக் கொண்டாயே உனக்கு என் மீது வருத்தம் இல்லையா?’ என சிவபெருமான் கேட்டார்.

‘இல்லை. ஒவ்வொரு நாளும் ஒருவரை கணவனாக ஏற்றுக் கொள்ளும் விலைமாது நான். இன்றைய தினம் கணவராக வந்த உங்களுக்கு கடமை தவறாமல் பணிவிடை செய்து விட்டேன். அவ்வளவுதான். விலைமகளான எனக்கு இதில் என்ன வருத்தம்? இது எனது கடமை’ என்றாள்.

அதைக் கேட்ட சிவபெருமான் அகம் மகிழ்ந்து, ‘பெண்ணே. மானுடப் பிறவி உனக்கு இன்றோடு முடிந்தது. அடுத்த பிறவியில் நீ தும்பை மலராக பிறப்பாய். என்னை பூஜிக்க தும்பை மலரை பக்தர்கள் பயன்படுத்துவார்கள்’ என வரமளித்தார். தும்பை பூவை சிவபெருமான் சூடுவதற்கு பின்னால் கடமை உணர்வுடன் தொடர்புடைய இந்த புராண கதை இருக்கிறது.

அலுவலகங்களில் பணியாற்றுவோரும் சரி. வேறு எந்த தொழில் புரிபவராக இருந்தாலும் சரி. நமக்கு கிடைக்கும் ஊதியம் அல்லது வருமானத்துக்கு இந்த அளவுக்கு வேலை செய்தால் போதும் என கருதக் கூடாது. அதற்கு பெயர் கடன். அதையும் தாண்டி நம்முடைய கடமை என ஒன்று உள்ளது. அதுதான், பிற்காலத்தில் நம்மை பாதுகாக்கும் கவசமாக இருக்கும். கடமையை கண்ணும் கருத்துமாக செய்யும் மனிதருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு சேரும். வெற்றியும் குவியும். கடமை என்ற மூன்றெழுத்தே வெற்றி என்னும் மூன்றெழுத்தின் உயிர் மூச்சு.

(வெற்றி பயணம் தொடரும்…)
Post a Comment