Sunday, January 29, 2017

வெற்றியை நோக்கி … 11

நீங்களும் பாஸ் தான்

உயரச் செல்ல வேண்டும் என்பதில் அனைவருக்குமே விருப்பம் அதிகம். இது தொன்று தொட்டு தொடரும் வழக்கம். பண்டைய அரசர் காலங்களில் விண்ணை முட்டும் ராஜ கோபுரங்கள், வான் தொடும் அரண்மனை, கோட்டை, கொத்தளங்கள் என அனைத்தையுமே மிகப் பெரியதாக அமைத்தனர். அதன் அடிப்படை உளவியல் என்னவென்றால், நான் உயர்ந்தவன் என்பதே. இது அனைவருக்குமே அடி மனதில் இருக்கும் குணம். ஆனால், உண்மையில் அதுபோன்ற வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைத்து விடுகிறதா என்ன?

ஒருவேளை கிடைத்து விடக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலையில் உயர்ந்த பதவியை தக்க வைத்துக் கொள்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்படும். அதனாலேயே பதவி என்பது முள் கிரீடம் என சொல்லி வைத்துள்ளனர். தலைமை பீடத்தை எட்டுவதை விட அந்த பீடத்தை தக்க வைப்பதில் தான் போட்டி அதிகம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் உங்களுக்குள் உள்ள திறமையை கண்டு வியந்து நிர்வாக பொறுப்பை அளித்து விட்டனர் என வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, வழக்கமான பணி முறையையே கையாண்டால் வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருக்கும். உங்களுடைய பணி நேரம் மாறும். அது சாதாரணம். அதற்கும் மேல் சில விஷயங்கள் உள்ளன.

உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை திறமையாக கையாண்டு நிர்வாக பொறுப்பில் எப்படி பாஸ் ஆகிறீர்கள் என்பதே மேட்டர். தலைமை என்றதும் முதலில் குழப்பமும் தடுமாற்றமும் ஒரு சேர வந்து நிற்பது இயல்பு. அதை வெற்றிகரமாக தாண்டிச் சென்று திறமையாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியின் ஒளிக்கீற்று தென்படும். அதற்கு சில சூட்சுமங்கள் உள்ளன. எப்படிப்பட்ட அலுவலகமாக இருந்தாலும் சரி. கண்டிப்பாக அங்குள்ள ஊழியர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அந்த மூன்று பிரிவுக்குள் தான் நிச்சயமாக அவர்கள் இருப்பார்கள்.

முதலாவது பிரிவில் நேர்மை, உண்மை, பணிவு கொண்ட பணியாளர்கள் அடங்குவர். இரண்டாவது பிரிவில் ஒழுக்கமின்மை, சோம்பேறித்தனம், விளையாட்டு தனம் போன்றவற்றின் மொத்த குத்தகைதாரராக உள்ள ஒரு பிரிவு இருக்கும். இந்த இரண்டு பிரிவுக்கும் இடைப்பட்ட லெவலில் ஒரு சாரார் எப்போதுமே இருப்பார்கள். நேரம் மற்றும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு இந்தப் பக்கத்திலோ அல்லது அந்தப் பக்கத்திலோ அவர்களுடைய குணம் வெளிப்படும்.

குடும்ப சிக்கல், சரியான சம்பள உயர்வு கிடைக்காமை, விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமை, நிராசை என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குறைகள் இருக்கக் கூடும். யாருக்கு என்ன சிக்கல் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்றும் ஊழியர்களை அவ்வப்போது பாராட்டினாலே போதும். அவர்கள் குளிர்ந்து விடுவார்கள். மேம்போக்கான பொதுவான பாராட்டாக இல்லாமல் அவர்களுடைய ஏதாவது ஒரு செயலை ஆதாரத்துடன் எடுத்துக் கொண்டு பாராட்ட வேண்டும். அதுவே, அவர்களுக்கு உற்சாக டானிக்காக மாறி விடும்.

அதே நேரத்தில், மற்ற ஊழியர் மத்தியில் பாராட்டுவதும் தவறாகிப் போகும். இதில் தான் அலுவலக சூட்சுமம் இருக்கிறது. ஏனெனில், இந்த அலுவலகத்தில் அவன் மட்டும்தான் வேலை பார்க்கிறானோ, நாம் யாரும் வேலை பார்க்கவில்லையோ என்பது போன்ற எண்ணம் மற்ற ஊழியர் மத்தியில் காரணமே இல்லாமல் எழக் கூடும். எனவே, தனியாக அழைத்து பாராட்டுவது மிகுந்த பலனை தரும்.

இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள் எதற்கும் மசியாதவர்கள். அறிவாற்றல் இருந்தாலும் தங்களை தாங்களே பெரியவர்கள் என மெச்சிக் கொண்டு அந்த வட்டத்துக்குள்ளேயே இருப்பவர்கள். அவர்களின் திறமைகளை கண்டறிந்து அதற்கு ஏற்ற மாற்றத்தை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். உடனடி மாற்றத்தை எதிர்பார்த்து பஞ்ச தந்திரங்களை கையாண்டால் அது நிலைக்காது. ஏனெனில், அலுவலக நிர்வாக சட்ட விதிகளும் ஓரளவுக்குத்தான் துணைக்கு வரும். அந்த சட்ட விதிகளை அடிக்கடி பிரயோகித்தால் எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

இது மட்டுமல்ல, அடிக்கடி பணி இடம் மாறுதலுக்கு உட்பட்ட தலைமை பதவியாகவே இருந்தால் கூட குறைந்த பட்சம் 4 ஆண்டுகளாவது அந்த ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற நேரிடும். எனவே, மனிதாபிமானத்துடன் கூடிய இனிய அணுகுமுறையே எப்போதும் நல்ல பலனை அளிக்கும்.

‘நீ ஒருவரை விரும்பும்போது அவரிடம் இல்லாத பல விஷயங்களை மிகைப்படுத்திக் கொள்கிறாய். அதேபோல, ஒருவரை வெறுக்கும்போதும் ஒரு சில விஷயங்களை மிகைப்படுத்திக் கொள்கிறாய். விரும்பும்போது கடவுளாக தெரியும் நபர், வெறுக்கும்போது பிசாசாக தோற்றமளிக்கிறார். உண்மையில் அவர் கடவுளும் இல்லை. பிசாசும் இல்லை. அவர், அவராகவே இருக்கிறார். நாம் மிகைப்படுத்திக் கொள்வதில் தான் அனைத்தும் இருக்கிறது’ என்பது ஓஷோ அறிவுரை.

எனவே, எந்த ஒரு ஊழியராக இருந்தாலும் தராசு போல நடுநிலைமையுடன் அணுக வேண்டும். இது அலுவலக பணிக்கு மட்டுமல்ல. வாழ்க்கையிலும் உதவும். தனிப்பட்ட குணத்திலும் எரிச்சல், கோபம் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும். பொறுமை, தன்னடக்கம் கண்டிப்பாக தேவை. நிதானமற்ற பேச்சு காரியத்தை கெடுக்கும். முதலில் இவற்றை கடைப்பிடிப்பதும் மிகவும் கஷ்டமாக தெரியும். மன அழுத்தம் கூட வரலாம். ஆனால், நாளடைவில் இந்த குணங்கள் தான் மிகவும் நல்லதொரு கவசமாக மாறும்.

ஒருமுறை தனது சீடர்களுடன் ராஜகிரியில் இருந்து நாளந்தா நோக்கி புத்த பிரான் பயணம் மேற்கொண்டார். அவரும் புத்த பிட்சுகளும் குழுவாக சென்றபோது வழியில் ஒருவர், அவர்களை மறித்தார். பின்னர், மிக மோசமான வார்த்தைகளால் புத்தரை நோக்கி அந்த மனிதர் திட்டத் தொடங்கினார். அதைக் கேட்ட, சீடர்களான புத்த பிட்சுகள் அனைவரும் கடும் ஆத்திரம் அடைந்தனர். ஆனால், புத்தரின் முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. ஓவியத்தில் வரைந்த தாமரை மலர் போன்று மலர்ந்து காணப்பட்டது. அதைக் கண்ட பிட்சுகள் ஆச்சரியம் அடைந்தனர்.

பிறகு, அந்த மனிதர் போய் விட்டார். இதையடுத்து, நாளந்தா நோக்கிய பயணம் அவர்களது பயணம் தொடர்ந்தது. சீடர்களுக்கு பொறுக்க முடியவில்லை. தங்களுக்குள் குமைந்து கொண்டிருந்த கேள்வியை புத்த பிரானை பார்த்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த புத்தர், “யுத்த களத்தில் புகுந்து செல்லும் யானை மீது அனைத்து திசைகளில் இருந்தும் அம்புகள் பாய்ந்து வந்து தாக்கும். ஆனால், அவற்றை பொறுத்துக் கொண்டு தனது இலக்கு நோக்கி அது நடந்து செல்லும். அது போலத்தான், எனது செயல்பாடும். இகழ்ச்சியும், புகழ்ச்சியும் எனக்கு ஒன்றே. இரு சூழ்நிலைகளிலும் சம நிலையில் இருப்பதே உண்மையான தர்மம்” என விளக்கம் அளித்தார்.

மலர்ந்து நிற்கும் மலர்கள் அனைத்தும், தம் மீது அருவருப்பான வண்டு அமர்ந்தாலும் முகம் சுளிப்பதில்லை. கொடூர மனிதர்கள் இருக்கிறார்களே என்பதற்காக சூரியன் உதிக்காமல் இருப்பதில்லை. அன்பும் அரவணைப்பும் ஒன்று சேர்ந்திருந்திருந்தால்...
.
.
நீங்களும் பாஸ் தான்.

(வெற்றி பயணம் தொடரும்…)
Post a Comment