Sunday 29 January 2017

வெற்றியை நோக்கி ... 15

ஆசை நூறு வகை

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒன்றை மையமாகக்  கொண்டே இயங்குகின்றன. சக்கரத்தை சுழலச் செய்யும் அச்சாணி போல அது செயல்படுகிறது. அதேபோல, மனித இனத்தையும் இயக்கும் அச்சாணி ஒன்றும் உண்டு. அது, ஆசை என்ற இரண்டெழுத்து மந்திரம். அதுவே, மனித வாழ்க்கையை முன்னோக்கி தள்ளிச் செல்லும் எந்திரம். 

மனித இனத்தின் பிரதானமான குணமாகவே ஆசை மாறி விட்டது. ஆடையின்றி இந்த உலகில் பிறந்த நாம் ஆசையின்றி பிறந்தோமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், அந்த ஆசை தான் மனிதனின் துன்பகரமான வாழ்க்கைக்கு திறவுகோலாகவும் அமைகிறது என்றால் மிகையில்லை. ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தபிரான். ஒரு மனிதனுக்கு தீராத துன்பத்தை தருபவை எவை என்று பட்டியலிட்டால் பொறாமைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஆசையை வைக்கிறார், திருவள்ளுவர்.

மனதுக்குள் குடியமர்ந்து கோலோச்சி ஒட்டு மொத்த மனித உடலையும் ஆட்டிப்படைக்கும் ஆசை பல வகைப்படும். சாலையில் நடந்து செல்லும் மனிதனுக்கு சைக்கிள் மீது ஆசை. சைக்கிள் வைத்திருப்பவனுக்கு பைக் மீதும் பைக் வைத்திருப்பவனுக்கு கார் மீதும் ஆசை. பஸ், ரயில் என பயணம் செய்து அலுத்தவனுக்கு வானில் மிதந்து செல்லும் விமானத்தில் பயணம் செய்து விட வேண்டும் என்பது தீரா ஆசை. எனவே, ஆசைக்கு அளவுகோல் இல்லை. அது, தொட்டு விட தொட்டு விட தொடரும் பயணம். 

இவை, சின்னச் சின்ன ஆசைகளாக இருக்கும் வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அதுவே, பேராசையாக வடிவம் கொள்ளும்போது பிரச்சினைகளும் விசுவரூபம் எடுக்கத் துவங்கும். குறுக்கு வழியில் வாழ்க்கையை திசை திருப்பிச் செல்வதும் பேராசையே. அதனால் தான், ‘ஆசை, கோபம், பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடுபவரே உறுதியானவர்’ என பகவத்கீதை கூறுகிறது. மனிதனின் பேராசைக்கு அடிப்படை காரணமாக இருப்பது பணம். ஏனெனில், மனிதனின் கல்வி, அதிகாரம், செல்வாக்கு, குடும்பம் என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது பணம்.

500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் பணத் தாளை நன்றாக கசக்கி, அழுக்கேற்றி கொடுத்தால் கூட மனம் கோணாமல் வாங்கிக் கொள்ளும் ஒரு மனிதன், அந்த பணத்தாளை விட அதிக விலையில் இருக்கும் ஒரு ஆடையை மிகவும் கசக்கி அழுக்காக கொடுத்தால் அணியத் தயங்குகிறான். அதுபோன்று ஆடை அணிந்த சக மனிதனையும் ஏற்க மறுக்கிறான். உயிரற்ற ஒரு காகிதம், உயிருள்ள மனிதனை எப்படியெல்லாம் பல வழிகளில் ஆட்டிப் படைக்கிறது.

ஆனால், பல ஆயிரம் செலவு செய்து படுக்கையை வாங்கினாலும் நிம்மதியான தூக்கத்தை வாங்க முடியுமா? ஏராளமாக செலவழித்து வீடு நிறைய புத்தகங்களை அடுக்கினாலும் அவற்றை படித்த உடன் அறிவை பெற எந்த பணமாவது உதவுமா? இதை அறிவுப்பூர்வமாக சிந்திக்க துவங்கினால் பணத்தின் மீதான பேராசையானது ஓடோடி வந்து சிந்தனை சிறகின் மீது திரையை போட்டு அமுக்கி விடும். அதற்காக, ஆசையை துறக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், முன்பே கூறியபடி மனித வாழ்வை இயக்குவதே ஆசை என்ற அச்சாணி தான். ஆனால், அந்த ஆசையானது ஒரு அளவுக்குள் அடங்கி இருக்கச் செய்ய வேண்டும்.

கண்ணாடிப் பொருட்களை வீடு வீடாக எடுத்துச் சென்று விற்பனை செய்யும் ஒருவன் இருந்தான். அவனுக்கு தனது வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்து ஊரே மதிக்கும் பெரிய ஆளாக வர வேண்டும் என்பது நெடுநாளைய தீராத ஆசை. அத்துடன், அந்த ஊரின் தலைவருடைய மகள் மீதும் அவனுக்கு ஒரு கண். அவருக்கு பிறகு தானே அந்த ஊரின் தலைவராக வேண்டும் என்ற ஆசையும் அவனுக்குள் வேர் பிடித்து வளர்ந்து நின்றது.

ஒரு நாள் கண்ணாடிப் பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் சென்றபோது நண்பகல் நேரத்தில் மதிய உணவு உண்டு விட்டு சாலையோர மர நிழலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். உண்ட மயக்கத்தில் அப்படியே தலை சாய்த்து உறங்கத் துவங்கினான். அவன் கொண்டு வந்த கண்ணாடிக் கூடை, கால்மாட்டில் இருந்தது. நல்ல தூக்கத்தில் பட்டப் பகலிலேயே கனவு காண ஆரம்பித்து விட்டான்.

அந்த கனவில் வழக்கம்போல ஊரின் மிகப்பெரிய வியாபாரி ஆனான். ஊர் தலைவரின் மகளையும் திருமணம் செய்தான். திருமணம் முடிந்து அந்த ஊரின் அடுத்த தலைவராகவும் தேர்வாகி விட்டான். ஒரு நாள் வீட்டில் பஞ்சணையில் சாய்ந்தபடியே மனைவியை (அதாங்க ஊர் தலைவருடைய பெண்) அழைத்து காலை அமுக்கி விடச் சொன்னான். அந்த பெண், ஏதோ நினைவில் இருந்ததால் அவனைக் கவனிக்கவில்லை. இதனால், கோபமடைந்த அவன், காலால் அந்த பெண்ணை எட்டி மிதித்தான். அடுத்த வினாடியே அவனது காலில் ரத்தம் கசியத் தொடங்கியது. அவனது கனவும் கலைந்தது.

மனைவியாக வந்த ஊர் தலைவரின் பெண்ணை எட்டி உதைப்பதாக நினைத்துக் கொண்டு கால் அருகே வைத்திருந்த கண்ணாடிப் பொருட்களை மிதித்து நொறுக்கி விட்டான். கனவிலேயே ஆகாயத்தில் கோட்டை கட்டிய அவனுடைய பேராசையால், ஏற்கனவே இருந்த முதலுக்கும் மோசமாகிப் போனது. இனிமேல், மீண்டும் வியாபாரத்தை துவக்க வேண்டுமானால் அந்த ஊர் தலைவரிடம் சென்று கடன் வாங்கினால் தான் உண்டு. பேராசை பெரு நஷ்டத்தை விளைவிக்கும் என்பதே இந்த கதையின் கருத்து. 

இதையே, பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா இப்படி கூறுகிறார். ‘கடலில் எவ்வளவோ நதிகள் வந்து கலந்தாலும் கடலின் நீர் மட்டம் உயர்ந்து பொங்கி வழிவதில்லை. தன்னுள் வந்து சேரும் அனைத்து நதிகளின் நீரையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இயல்பாகவே இருக்கிறது.

அதுபோலவே, தனக்குள் அனைத்து ஆசைகளையும் யார் அடக்கி வைத்துக் கொள்கிறாரோ? அவருக்குத்தான் மன அமைதி கிடைக்கும். ஆசையின் மீது பேராசை கொண்டிருப்பவனுக்கு மன அமைதி எப்போதுமே கிடைப்பதில்லை.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: