Friday 27 January 2017

வெற்றியை நோக்கி … 9

மறந்துடாதீங்க ப்ளீஸ்...

‘சார். உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா, சட்டுன்னு நினைவுக்கு வர மாட்டேங்குது’ இது போன்ற வார்த்தைகளை அவ்வப்போது நாம் கேட்க நேரிடும். இவற்றை சொல்லும் நபர்கள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், வார்த்தைகள் வேறுபடுவதில்லை. நாமே கூட, நல்ல பரிச்சயமான பள்ளித் தோழன் அல்லது நீண்ட காலம் கழித்து சந்திக்கும் நண்பன் பெயரை பார்த்த உடனேயே நினைவுக்கு கொண்டு வர முடிவதில்லை.

மாடியில் உள்ள படிக்கட்டுகளை பாருங்கள். ஒவ்வொரு படிக்கட்டுக்கும் அடுத்த படிக்கட்டுக்கு செல்ல வழி ஏற்படுத்தி தருவதோடு பணி நிறைவடைந்து விடுகிறது. அதுபோலத்தான் மனமும். ஒரு வேலை முடிந்ததும் அடுத்த வேலையை பார்க்கச் சென்று விடும். உங்களுக்கு 30 வயது என்று வைத்துக் கொள்வோம். உங்களின் 5 வயதில் இருந்து 25 வயது வரையிலான உங்களுடைய நினைவுகளை வரிசையாக கூறச் சொன்னால் அதிக பட்சமாக 24 மணி நேரத்துக்கு மேல் கூறுவதற்கு உங்களிடம் எதுவும் இருக்காது.

அந்த 24 மணி நேரத்திலும் நீங்கள் கூறும் வார்த்தைகளை அவ்வப்போது ‘நல்லா நினைவிருக்கு’ என்ற வலு சேர்க்கும் வாதத்துடன் தான் கூறுவீர்கள். ஏனெனில் மனித மனம் என்பது மறப்பதில் கில்லாடி. அதில் ஒரு சில விஷயங்கள் விதி விலக்கு. உண்மையில், மனிதனை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவது, இந்த நினைவாற்றல் தான். ஆனால், நினைவாற்றல் என்பதை மனப்பாடம் செய்து கொள்வது என அனைவரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். அதனால் தான் பள்ளி மாணவர்கள், பாடங்களை உருப்போடும் பழக்கத்தில் ஊறிப்போய் இருக்கின்றனர். நினைவாற்றல் என்பது வேறு. அது 3 வித தன்மை உடையது.

முதலாவது, பட்டறிவு மூலமாக பெறும் செய்திகள். இதை நம்முடைய மனது உள்வாங்கி நரம்புகள் வழியாக நரம்பு மண்டலத்தில் பதிவு செய்கிறது. இரண்டாவது அந்த நரம்பு மண்டலத்தில் தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. மூன்றாவதாக நமது பட்டறிவு மூலமாக அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருவது. இது தவிர, நம்முடைய தகவல்களை குறிப்பெடுத்து பதிவு செய்து கொள்வதும் கூட நினைவாற்றலை அதிகரிக்கும்.

பள்ளிக்கூடங்களில் நடத்தும் போட்டிகளின்போது நாம் ஒரு போட்டியை கவனிக்கலாம். ஒரு அறைக்குள் ஏராளமான பொருட்களை வரிசையாக அடுக்கி வைத்து அதை கவனித்துவிட்டு வெளியே வந்து அதில் உள்ள பொருட்களை நினைவு படுத்தி பட்டியலிட்டு எழுதி கொடுக்கச் சொல்வார்கள். இது நினைவாற்றலை அதிகரிக்கும் போட்டிகளில் ஒன்று. ஆசிரியர்களும் கூட பாடங்களை திட்டமிட்டு நினைவுப்படுத்தி, குறிப்பெடுத்து வந்தால் தான் சிறப்பாக மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தர முடியும்.

மனித மனத்தில் எழுத்துகள், வார்த்தைகளை விட காட்சிகளே எளிதில் பதியும். இன்றைய சமூகத்தில் பத்திரிகை, இலக்கியங்கள் ஆகியவற்றை விட சினிமா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதே இதற்கு சிறந்த உதாரணம். பாடங்களை விட படங்களே மனித மனதில் நன்றாக நினைவில் நிற்கும். அதனால், எந்தவொரு தகவலையும் படக்காட்சிகள் போல மனதில் பதிவு செய்து கொள்வது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் தொடர்புடையவற்றை சேர்த்து நினைவில் பதிவு செய்வது நல்லது.
நினைவாற்றல் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மூளைக்கான மிகச் சிறந்த பயிற்சி என்றும் கூறலாம். எந்த அளவுக்கு மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது.

மறதியை மறக்கடித்து நீடித்த நினைவாற்றலை பெற இளமையிலேயே சில பயிற்சிகளை கடைப்பிடித்தால் போதும். முதுமையிலும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிதான சில பயிற்சிகளை முறையாக பின்பற்றி வந்தால் ஷார்ட் டெம் மெமரி லாஸ் முதல் அல்சமீர் வரை ஏராளமான மறதி நோய்களை தடுக்கலாம். நினைவாற்றலை இறுதிக் காலம் வரை பாதுகாக்கலாம்.

முதலாவதாக, புதிய மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொண்டு எங்கே போகப் போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள் எழலாம். மொழி ஆர்வம் என்பது தனிப்பட்ட திறமையை வளர்ப்பதற்கு மட்டும் உதவவில்லை. புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டு அவற்றின் அர்த்தங்களை புரிந்து கொள்வது நினைவாற்றலை பெருக்குவதற்கு அதிகமாக உதவுகிறது. வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமான சொற்களை அதிகமாக அறிந்து வைத்துக் கொள்வது மறதியை போக்கும்.

அடுத்ததாக, புதிர் கணக்குகள், வார்த்தை விளையாட்டு, எண் கணிதம், சுடோகு, புதிர் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால், பொது அறிவு வளருவது மட்டுமல்லாமல் நினைவாற்றலும் வளரும். குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பதும் விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பதும் நினைவாற்றலை பெருக்கும் கலைகள். இவை எல்லாம் சிறிய குழந்தைகளுக்கான வேலை என்று ஒதுங்காமல் நினைவாற்றலுக்கான மருந்தாக நினைத்து களத்தில் இறங்கினால் மறதி ஓடிப்போகும்.

நினைவாற்றலை தக்க வைப்பதில் இசைக்கும் முக்கிய பங்கு உள்ளது. மெலடியான இசையில் பாடல்களை கேட்பது மூளைக்கு சிறந்த பயிற்சி. அந்த பாடல்களின் வார்த்தைகளை கேட்டு அப்படியே பாடிப் பார்ப்பதும், பாடல் வரிகளை முணுமுணுப்பதும் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த பயிற்சி.
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் கதை சொல்வதை பார்த்திருப்போம். இந்த கதை சொல்லி முறை கூட, ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதை, தங்களுக்குள் பேசிக் கொள்வது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, தான் படித்த ஒன்றை அல்லது தனக்கு தெரிந்த ஒரு தகவலை தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்வது. இது, தகவல்களை மூளையில் பதிந்து வைத்துக் கொள்ளும் பயிற்சியாகும். நம்முடைய முன்னோரிடம் இருந்து செவி வழியாக நமக்கு வந்து சேர்ந்துள்ள ஏராளமான கர்ணப் பரம்பரை கதைகளை இதற்கு உதாரணமாக கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால், இன்று முதல் உங்கள் வீட்டு செல்லக் குட்டிகளுக்கு கதைகள் சொல்லுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

வெவ்வேறு விதமான புத்தகங்களை படிப்பதும் நினைவாற்றலை பெருக்கும். புத்தகங்கள், செய்தித் தாள்கள், செய்திக் கட்டுரைகள், பல்வேறு துறை சார்ந்த பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் என அனைத்தையும் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் ஓய்வான நேரம், ரயில் அல்லது பேருந்து பயண நேரம் போன்ற சமயங்களில் வாசிக்கலாம். அதே நேரத்தில், படித்த புத்தகத்தின் கருத்துகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன் படித்த கதைகளை கூட நினைவுப்படுத்தி பார்க்கலாம். இதுவும், நினைவாற்றலை மேம்படுத்த உதவும் நல்ல பயிற்சி.
மூளையை வலிமை பெறச் செய்வதற்கென தனியாக சில பிரத்யேக உடல் பயிற்சிகள் உள்ளன. கண், கை, நரம்பு போன்ற உறுப்புகளுடன் தொடர்புடைய அந்த பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொள்ளலாம். 

ஒரு படம் அல்லது வார்த்தையோடு தொடர்புடைய வார்த்தைகளை தொடர் வரிசையில் பட்டியலிடுவதும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி. டிவிக்களில் ஒளிபரப்பாகும் கேம் ஷோக்களும் பத்திரிகைகளில் வெளியாகும் புதிர் போட்டிகளும் இந்த வகையை சேர்ந்தவையே. அவற்றை நாமே நண்பர்களுடனோ, வீட்டிலோ செய்து பார்க்கலாம். இதுவும் நீண்டகால நினைவாற்றலுக்கு நிச்சய உத்தரவாதம்.

மறதி இல்லாமையே நினைவாற்றல் என கூறப்படுகிறது. இந்த மறதியின்மை என்ற சொல்லை பொச்சாவாமை என கூறுகிறார், வள்ளுவர். அதனால் தான், பொச்சாவாமை என்ற தலைப்பில் தனி அதிகாரம் எழுதியுள்ளார். ‘பொச்சாப்பு கொல்லும் புகழை’, ‘பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை’, ‘பொச்சாப்பு உடையார்க்கு இல்லை நன்கு’ என 10 குறள்களை அடுக்குகிறார். எனவே, எப்போதுமே மறந்திடாதீங்க... நினைவாற்றல் நல்லது. அதுவே வெற்றிக்கு சிறந்தது.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: