Friday 27 January 2017

வெற்றியை நோக்கி … 8

மன அழுத்தம் தொலைப்போம்


இப்போ இந்த வேலய என்னால செய்ய முடியாது... எனக்கு மூடு சரியில்ல... நான் டென்சனா இருக்கேன்... என்ன தொந்தரவு பண்ணாத, ப்ளீஸ்... எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குதோ... மனசே சரியில்ல.... சில நேரங்களில் சில மனிதர்கள் அல்ல. பல நேரங்களில் பல மனிதர்களும் இப்படித்தான் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர். ஒருவர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும்கூட மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்பட்டால் அத்தனை திறமைகளும் காற்றில் அகப்பட்ட கற்பூரமாக கரைந்து காணாமல்  போய்விடும்.

காலச்சக்கரம் வேகமாக சுழன்று கொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் வயல், வரப்பு, காடு, கழனி என பூமிப்பந்து மிக அழகாக பசுமையுடன் காட்சி அளித்தது. காட்டை அழித்து நாட்டை காட்டுகிறேன் என்ற பெயரில் பூமியையே கான்கிரீட் காடாக மாற்றி வரும் மனித இனத்துக்கு இயற்கை தந்த பரிசுகளில் ஒன்று மன அழுத்தம்.

பாஸ்ட் புட் காலமாக மாறிவிட்ட இன்றைய நாட்களில் பள்ளி பருவத்திலேயே மன அழுத்தம் வந்து விடுகிறது. எந்த நேரமும் ஒரே விதமான வேலையிலோ அல்லது படிப்பிலோ மூழ்கி கிடந்தால் மன அழுத்தம் தானாகவே வந்து சேரும். எரிச்சல், ஷார்ட் டெம்பர் எனப்படும் எளிதில் கோபப்படுதல், அடிக்கடி மனம் மாறுதல் போன்றவை மன உளைச்சலின் ஆரம்ப கட்ட அறிகுறிகள்.

எந்த நேரமும் குழப்பமான மனதுடனே இருக்கும் மன உளைச்சல்காரர் முன்பு சிரித்த முகத்துடன் ஒருவர் சென்றால் கூட, எரிச்சல் தான் ஏற்படும். ஏனெனில், குழப்பமான மனம் தான் மன உளைச்சலுக்கு ஏற்ற நல்ல விளைச்சல் நிலம்.

ஆரோக்கியமான மனிதனுக்கு தினமும் 8 மணி நேர உறக்கம் தேவை. உறக்கமின்மையும் மனச்சோர்வுக்கு ஒரு காரணியே. ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டு இருப்பவருக்கு கண்டிப்பாக மனச்சோர்வு வந்து விடும்.

அதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம் என்பது போன்ற வியாதிகள் வரிசையில் நிற்கும். உடனே, மருத்துவரிடம் சென்றால் நன்றாக ஓய்வு எடுக்குமாறு அறிவுரை கிடைக்கும். வீக் எண்ட், சம்மர் ஹாலிடே என என்ஜாய் பண்ணுவதற்கு வழி ஏற்படுத்தி வைத்திருப்பது, இதனால் தான். அதற்காக, மன அழுத்தத்தை போக்க விடுமுறை தினம் வரை காத்திருக்க தேவையில்லை. அன்றாட வாழ்க்கை முறையை சரியாக வைத்துக் கொண்டாலே போதும். விளையாட்டு, தியானம், யோகா என மனதை திருப்பலாம். ஓடி விளையாடு பாப்பா என குழந்தைகளுக்கு அறிவுரை கூறிய பாரதியார், மாலை முழுவதும் விளையாட அறிவுறுத்துகிறார். இது பெரியவர்களுக்கும் பொருந்தும் அறிவுரை.

உள்ளுக்குள் யார் மீதாவது கோபமோ, அதிருப்தியோ நிலவினால் அதுவே நாளடைவில் மன அழுத்தத்தை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்று விடும்.  உதாரணமாக, ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு அதற்குள் சில தக்காளிப் பழங்களை போட்டு வையுங்கள். பிளாஸ்டிக் பைக்குள் இருந்து வெளியிலோ அல்லது வெளியில் இருந்து உள்ளுக்குள்ளோ காற்று கூட புக முடியாது. இந்த பையை நீங்கள் எங்கு சென்றாலும் எந்நேரமும் கூடவே சுமந்து செல்லுங்கள். ஒருநாள் அல்லது இரண்டு நாள் வரை உங்களால் அதுபோல சுமந்து செல்ல முடியுமா? அதன்பிறகு என்னவாகும்? பிளாஸ்டிக் பைக்குள் இருக்கும் தக்காளிப் பழம் அழுக ஆரம்பித்து ஒரு அருவருப்பையும் துர்நாற்றத்தையும் உங்களுக்கு தரும் அல்லவா?

இப்போது பிளாஸ்டிக் கவர் என்பது உங்களுடைய மனம் என்றும் தக்காளிப் பழம் என்பது அந்த மனதுக்குள் நிறைந்து கிடக்கும் அதிருப்தி அல்லது கோபம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மனதுக்குள் தேவையற்ற அதிருப்திகளையும் கவலை, கோபம் போன்றவற்றையும் அந்த தக்காளிப் பழங்களைப்போல சுமந்து திரிந்தால் மனதை அவை குப்பை தொட்டியாக்கி விடும். ஆனால், மனம் என்பது குப்பைகளை கொட்டி வைக்கும் தொட்டி அல்ல.

தேசிய குற்றப்பதிவு ஆவணங்களின் அறிக்கைப்படி, 2012ம் ஆண்டில் மட்டும் 1,35,000 பேர் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர். இதில், தமிழகத்தின் எண்ணிக்கை 2300. இது தவிர, தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை தனி. தற்கொலை நிகழ்வுகளுக்கு அடிப்படை காரணம் மன அழுத்தம். காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்தாலே உடலில் உள்ள 72 ஆயிரம் நரம்புகளும் 640 தசைகளும் புத்துணர்ச்சி பெறும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். வீடு, அலுவலகம் என செக்கு மாடு போல சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சற்று கவனத்தை திருப்பினால் மனம் இலகுவாகும். வீட்டில் தோட்டம் அமைத்திருந்தால் அதில் காலாற நடந்து செல்லலாம். பசுமையான தாவரங்கள், புல்வெளிகள் போன்றவற்றை காணும்போது மனதில் உற்சாகம் பீறிடும். அதனால் தான், புத்துணர்ச்சிக்காக மலை வாசஸ்தலங்களுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

அலுவலக பணி நேரம் முழுவதும் கணினி முன்பாகவே செலவு செய்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 நிமிட நேரம் பசுமையான ஒன்றை பார்த்தால் கண்ணில் சோர்வு நீங்கும். மன அழுத்தத்தின் சிறந்த தோழன் தனிமை. எனவே, எப்போதுமே தனிமையாக இருப்பது நல்லதல்ல. சுற்றியுள்ளவர்களுடன் கலகலப்பாக இருக்கலாம் அல்லது சூழ்நிலையை கலகலப்புடன் வைத்திருப்பவர்களுடன் நட்புறவை வளர்க்கலாம்.

மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வை போக்குவதற்கு ஏராளமான எளிய பயிற்சிகள் உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால், இந்த நாள் மட்டுமல்லாமல் எல்லா நாளுமே இனிமையாக அமையும். வெற்றிக்கும் அதுதானே தேவை.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: