Sunday 22 January 2017

வெற்றியை நோக்கி … 4

அச்சம் தவிர்த்து உச்சம் தொடு...

அச்சம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருடனும் ஒட்டி பிறந்த குணம். குழந்தை பருவத்தில் இருந்தே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவள உணவுடன் அச்சமும் சேர்ந்தே பிசைந்து ஊட்டப்படுகிறது. இருளில் ஆரம்பித்து நீண்டு செல்லும் அச்ச உணர்வை பட்டியலிட்டால் விஷம் போல அந்த பட்டியல் நம்மை அச்சுறுத்தும். அறியா வயதில் சரியாக உணவு உண்ண மறுக்கும் குழந்தையிடம் பூச்சாண்டி வருவதாக பயமுறுத்துவது இன்றும் கூட தொடருகிறது. ஒவ்வொரு அம்மாக்களும் வெவ்வேறு பெயர்களை சூட்டினாலும் பூச்சாண்டி, பூச்சாண்டி தான்.

இதுபோல சற்றே வளர்ந்த குழந்தைகள், அந்தி கருக்கலுக்கு பிறகும் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தால் அவர்களை வீட்டுக்கு அழைக்க பயன்படுவது பேய். இதையே, ‘வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு சொல்லி வச்சாங்க... உன் வீரத்த கொழுந்திலேயே கிள்ளி வச்சாங்க...’ என பாடியதோடு வேலையற்ற வீணர்கள் கூறும் அந்த மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்ப வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார், பட்டுக்கோட்டையார்.

குழந்தை பருவத்தில் பதிய வைக்கும் இந்த அச்ச உணர்வு, சற்று பெரியவனானதும் அகன்றால் பரவாயில்லை. ஆனால், வளர்ந்து இளைஞனான பிறகும் தொடர்ந்தால்...? சற்றே சிக்கலான பிரச்சினை தான். அது, நமது எதிர்காலத்தையே பாழாக்கி விடும். இன்றைய இளைஞர்களுக்கு அடிப்படை பலவீனமாக இருப்பது அச்ச உணர்வும் அதன் கூடவே வரும் தயக்கமும் தான். பள்ளிக்கூட தேர்வில் ஆரம்பிக்கும் இந்த அச்சமானது வேலை தேடல், வெளியூர் பயணம், நேர்முக தேர்வு, வேலை கிடைத்த பிறகு பணியை சிறப்பாக முடித்தல் என ஒவ்வொரு கட்டத்திலும் விடாது கறுப்பாக தொட்டுத் தொடர்கிறது. 

மனதை கவர்ந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவது, காதலித்த பெண்ணை மணமுடிப்பது என பயமே வாழ்க்கையாகி தெனாலி திரைப்பட சோமன் கேரக்டராகவே மாறி விடுகின்றனர். இப்படி அச்சமே வாழ்க்கையாக தொடர்ந்தால், அது சாதனை பயணத்துக்கு முட்டுக்கட்டை போடும். எந்தவொரு செயலாக இருந்தாலும் அதில் பயம் கொள்ளுவது என்பது நாளடைவில் பல்வேறு பரிணாமங்களை பெற்று தனது கோர பற்களை காட்டத் துவங்கும்.

சகிப்பு தன்மை இன்மை, பேராசை, பொறாமை, சந்தேகம், பழி உணர்வு, சுயலாபம் என வெவ்வேறு ஆபத்தான பலவீனங்களை கூடவே அழைத்து வருவது அச்ச உணர்வே. அச்சங்களால் விளையும் எச்சங்களே பல்வேறு பிரச்சினைகளுக்கும் பாதை அமைத்து தருகிறது.

அதனால் தான், ‘அச்சம் தவிர்; ஆண்மை தவறேல்’ என பெரியோர் கூறி வைத்துள்ளனர். களர் நிலம் எப்போதுமே விவசாயத்துக்கு உதவாது. அந்த நிலத்தால் எந்த பயனும் கிடையாது. நன்கு பண்பட்ட நிலமே செழிப்பான விளைச்சலை தரும். அதுபோலவே உள்ளமும் மனமும் பக்குவப்பட்டு நிற்க அச்சத்தை தவிர்ப்பது மிகவும் அவசியம்.

முதன் முதலில் இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக வழி கண்டு பிடிப்பதாக கூறிக் கொண்டு கப்பலில் புறப்பட்ட கொலம்பஸ் மனதுக்குள் அச்சம் எழுந்திருந்தால் அமெரிக்காவோ, மேற்கு இந்திய தீவுகளோ நம் கண்களுக்கு அகப்பட நீண்ட நாளாகி இருக்கும். எந்தவித உதவியும் இல்லாமல் அச்சமின்றி கடலுக்குள் பயணம் செய்ததாலேயே இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்காவுக்கு அவரால் கடல் பாதையை கண்டறிய முடிந்தது. 

அதுபோலவே, இந்தியாவுக்கு பதிலாக வேறு ஒரு இடத்துக்கு கொலம்பஸ் வழி தவறிச் சென்று விட்டாரே, அதுபோல நாமும் எங்காவது கண்காணா தேசத்துக்கு சென்று விடுவோமோ? என வாஸ்கோடகாமா அச்சப்பட்டு நின்றிருந்தால் இந்தியாவுக்கு கடல் பாதை அமைந்திருக்குமா? அந்த அச்சமற்ற வீரர்களின் விளைவாக அமைந்த கடல் பாதைகள் தான் இன்றளவும் கடல் வழி சரக்கு போக்குவரத்து மேம்பட வழி வகுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில நேரங்களில் தனி மனிதனின் அச்சமில்லாத குணமானது, ஒரு தேசத்தின் எதிர்காலத்துக்கு விளக்கேற்றி வைக்கலாம்.

இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது சாதாரணமாகி விட்டது. பூமியை சுற்றிலும் செயற்கை கோள்களை ஏவும் மனித மனதுக்குள் அச்சம் தோன்றி இருந்தால் இது சாத்தியமாகுமா? சந்திரன், செவ்வாய் என கிரகம் தாண்டி மனித படைப்புகளும் மனிதனும் சீறிப் பாய்ந்து கொண்டிருப்பதற்கு அச்சமற்ற மனமே காரணம். விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் அளவுக்கு மனிதர்கள் பக்குவமடைந்து விட்டனர்.

சில நேரங்களில் அச்சத்துக்கு பதிலாக தயக்கம் மேலோங்கி நிற்கும். இது, அச்சத்தின் உடன் பிறந்த இளைய சகோதரன். அச்சத்தினால் ஏற்படும் அளவுக்கு மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தாவிட்டாலும் தனி மனித வாழ்வை சீர்குலைத்துவிடும். எனவே, அச்சம், தயக்கம் எதுவாக இருந்தாலும் அவை வெற்றிப் பாதையின் தடைக்கற்கள் என்பதே உண்மை. எனவே, இன்றே தயக்கத்தை விட்டொழிப்போம். அச்சம் தவிர்ப்போம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: