Sunday 29 January 2017

வெற்றியை நோக்கி ... 14

வெற்றிக் கூட்டணி


வெற்றி என்ற சிகரத்தை எட்ட ஏராளமான சக்தி தேவை. கருவிகளிலும் இயந்திரங்களிலும் உற்பத்தியாவது மட்டுமே சக்தி அல்ல. ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் அறிவாற்றலும் மிகப்பெரிய சக்தி. இன்று நாகரீக வளர்ச்சி என நாம் கூறுவது எதை தெரியுமா? மனித இனத்தின் வளர்ந்து நிற்கும் அறிவாற்றலின் ஒட்டு மொத்த கூட்டு தொகுப்பை தான்.

அறிவியல் பாடங்களில் தனிமங்களை பற்றி படித்திருப்போம். வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட தனிமங்கள் ஒன்று சேரும்போது புதிய வடிவிலான பொருள் கிடைக்கும். நாம் எழுதும் பேனா, இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பேப்பர் என எதை எடுத்தாலும் பல்வேறு தனிமங்கள் அல்லது துகள்களின் கூட்டுத் தொகுப்பு. இதை அப்படியே மனித ஆற்றலுடன் பொருத்திப் பாருங்கள். தனி ஒரு மனிதனின் அறிவாற்றலுக்கு பதிலாக பல்வேறு மனிதர்களின் கூட்டுறவுடன் கூடிய அறிவாற்றல் இணைந்தால்....? அதன் சாதனையே தனி அல்லவா....?

மனிதர்களின் சிந்தனை இரண்டு வகைப்படும். ஒன்று சுயமாக சிந்தனை செய்வது. தனக்குள் வந்து சேரும் அல்லது தனக்கு போதிக்கப்படும் சிந்தனையை வரவேற்று ஏற்றுக் கொள்வது அல்லது ஒதுக்கி தள்ளுவது என்பது மற்றொன்று. இதையே, ‘சுயபுத்தி, சொல்புத்தி’ என முன்னோர் கூறினர். காற்று வெளியில் தவழ்ந்து வீடுகளுக்கு ஒலியாகவும் படக் காட்சிகளாகவும் நுழையும் தொலைக்காட்சி மற்றும் வானொலி தகவல்களை சற்று யோசித்துப் பாருங்கள். எந்தவித கம்பித் தொடர்பும் இல்லாமல் வான் வழியாகவே நம்மை வந்து சேருகின்றன. மனிதர்களின் மூளைகளுக்கு இடையிலும் அந்த குணம் உண்டு.

இரண்டு பேருக்கு இடையே கண்ணுக்கு புலப்படாத ஒரு பிணைப்பு இருப்பது அதிசயமானது அல்ல. ஒருவரை பார்த்ததும் பிடித்து விடுகிறது. கண்டதும் காதல், அவனை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது என்பது போன்ற வார்த்தைகள் எல்லாம் மனித மூளைகளுக்கு இடையிலான கண்ணுக்கு தெரியாத பரஸ்பர பரிமாற்றத்தின் விளைவுகளே. இரு மனிதர்களிடம் நடைபெறும் இந்த பரிமாற்றத்தால் இருவருக்கும் ஆனந்தம் விளையலாம் அல்லது வெறுப்பு உருவாகலாம்.

அதே நேரத்தில் இரண்டு மனமும் ஒருங்கிணைந்தால் அது பேராற்றலாக மாறி விடும். இனிமையாக செல்லும் இல்லற வாழ்க்கையில் இதை நாம் கண்கூடாக காணலாம். கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்தும் தோள் கொடுத்தும் செல்லும் குடும்பமானது உலக வாழ்க்கையில் வெற்றி பெறும். அந்த ஒத்திசைவு என்பது ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கினால் மறுகணமே ஒட்டு மொத்த குடும்ப வாழ்க்கையும் அதல பாதாளத்தில் வீழ்ந்து விடும்.

இதையே ஒரு நிறுவனம் அல்லது ஒரு புதிய முயற்சிக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒட்டு மொத்தமாக ஒருங்கிணைந்து இருக்கும் இரண்டு மனிதர்களின் சிந்தனை அல்லது அதற்கு மேற்பட்ட பல்வேறு மனிதர்களின் சிந்தனைகள் ஒன்று சேர்ந்தால் அங்கு மிகப்பெரிய சிந்தனையும் பேராற்றலும் வேலை செய்ய துவங்கி விடும். ராணுவம், மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் போன்றவற்றில் இதை நாம் கண்கூடாக காண முடியும். ‘தனி மரம் தோப்பாகாது’ என்பது நம்முடைய தமிழ்ப் பழமொழி.

ஒரு குழு என எடுத்துக் கொண்டால் அதில் பல்வேறு தனி நபர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு. இது போன்ற தனித்தனி ஆற்றல்களை ஒன்று சேர்த்து பேராற்றலை உருவாக்கினால் வெற்றி நிச்சயம். சில பெரிய நிறுவனங்களின் வெற்றிக்கு இதுவே சூட்சும மந்திரம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அந்த நிறுவனத்தின் தலைவர் மிகப்பெரிய திறமைசாலி என்பது போல தோன்றும்.

உண்மையில், அவருக்கு பின்னால் மனதை ஒன்றாக வைத்திருக்கும் மனோ ரசாயன வித்தை அறிந்த ஒரு சிறந்த குழுவின் கூட்டு முயற்சி கண்டிப்பாக இருக்கும். அந்த குழுவை மிகச் சரியாக வழி நடத்திச் செல்லுவதில் அந்த தலைவர் திறமைசாலியாக இருப்பார். தற்காலிக அளவிலாவது ஒரு குழுவின் மனநிலையை ஒட்டு மொத்தமாக ஒரே நிலைக்கு கொண்டு வருவதில் அவர் தலைசிறந்த நிபுணராக இருப்பார். அதே நேரத்தில் இதுபோன்ற பேராற்றலை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டத்தில் தனிநபர் ஒருவரின் சிந்தனை மாற்றுக் கருத்துடன் இருந்தால் அங்கு பேராற்றல் தத்துவமும் மிகப்பெரிய சிந்தனையாற்றல் உருவாக்கமும் சிதைந்து போகும். டீம் ஒர்க் என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அந்த வார்த்தைக்கு அர்த்தம், இதுதான்.

மகாபாரதக் கதையில் பாண்டவர், கவுரவர் இடையிலான போர்க்களக்காட்சி. போரில், யுத்த விதிகளின்படி கர்ணனுக்கு தேரோட்டியாக சல்லியனை துரியோதனன் நியமித்து இருப்பான். சல்லியன் ஒரு தேசத்தின் மன்னர். அதனால் வேண்டா வெறுப்பாக அவர் தேரோட்டி வரும் சூழ்நிலையில்,  போர்க்களத்தில் மணலுக்குள் தேர் சக்கரம் சிக்கி விடுகிறது. உடனே, அதை தூக்கி விடுமாறு கர்ணன் கூறுகிறான். ஏற்கனவே, ஒரு தேசத்தின் மன்னரான தன்னை கர்ணனுக்கு தேராட்டியாக்கி விட்டனரே என்ற கடுப்பில்  சல்லியன் இருந்தான். அதனால், ‘அது என் வேலை அல்ல. தேர் ஓட்டுவது மட்டுமே எனது பணி’ என கூறியதோடு கர்ணனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.
ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றிய நிலையில், தேரை அப்படியே போர்க்களத்தில் விட்டு விட்டு, கர்ணனையும் தனியாக தவிக்க விட்டு  போர்க்களத்தை விட்டே சல்லியன் புறப்பட்டுச் சென்று விட்டான். அதன்பிறகு, கர்ணனே கீழிறங்கி தேரை சரி செய்யும்போது அர்ச்சுனனின் அம்புக்கு பலியாவான். இன்றும் கூட, இழிவான அல்லது துரோக செயலில் ஈடுபடும் ஒருவரை ‘சல்லிப்பயல்’ என வசைமொழி கூறுவது உண்டு. கூட்டணியாக செயல்படும் ஒரு பணியில் இது போன்ற முரண்பாடுகள் தோன்றினால் இழப்பும் தோல்வியும் ஏற்படும் என்பதையே மகாபாரதக் கதையில் வரும் இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது. அதே நேரத்தில் பாண்டவர் தரப்பில் கிருஷ்ணர் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் வேதவாக்காக ஏற்று படைகளும் தளபதிகளும் மன்னர்களும்  செயல்பட்டனர். அதனால், வெற்றியும் பாண்டவர் அணிக்கே கிடைத்தது.

ராமாயணக் கதையிலும் கூட, இறுதிகட்டப் போரில் ராவணனிடம் இருந்து தம்பி விபீடணன் பிரிந்து சென்றான். மற்றொரு தம்பி கும்பகர்ணனோ அண்ணனுடன் வாக்குவாதம் செய்த பிறகே செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காக போர்க்களத்துக்கு சென்று மடிந்தான். இப்படி முரண்பாடுகள் தலை தூக்கியதாலேயே ராவணன் படை அழிந்தது. ராமபிரான் படையிலோ, ராமர் சொல்லை வேதவாக்காக கொண்டு வானரப் படை செயல்பட்டது. வெற்றியும் பெற்றது. மனித மனங்கள் இணைந்தால் மட்டுமே வெற்றிக் கூட்டணி சாத்தியமாகும் என்பதற்கு இவை எல்லாம் இதிகாசங்கள் கூறும் வெற்றிக் கூட்டணி பற்றிய செய்திகள்.

நிகழ்கால வரலாற்றிலேயே பல்வேறு உதாரணங்களை நாம் கண்கூடாக காணலாம். எனவே, ஒரு செயலை வெற்றிகரமாக முடிப்பதற்கு பல்வேறு மனிதர்களின் மனங்களை ஒருங்கிணைந்து செயல்படுவோம். வெற்றிக் கூட்டணியை உருவாக்குவோம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: